ஆதி 4:8. காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
முதன் முதலாக இந்த பூமியில் ஸ்த்ரீ கர்பந்தரித்து பிறந்தவன் தான் காயீன். ஒருநாள் காயீனும் அவன் தம்பி ஆபேலும் கர்த்தருக்கு காணிக்கையை கொண்டுவந்தார்கள். ஆபேலின் தலையீற்றான காணிக்கையினால் அல்ல; மாறாக முதலாவது ஆபேலையும் பின்பு அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார். அதுபோலத்தான் காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. காயீன் ஒரு துன்மார்க்கமான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆகையால் தான் அவனுடைய மனதுகூட கர்த்தருக்கு தலையீற்றை காணிக்கையாக கொடுக்கவேண்டுமென்ற அறிவும் தெளிவும் இல்லாதவனாக இருந்தான்.
எப்படி கர்த்தர் ஆதாம் பாவம் செய்தபோது கர்த்தரே இறங்கி ஆதாமிடம் வந்ததுபோல, காயீன் கோபப்பட்டபோதும் கர்த்தரே காயீனை தேடி இறங்கி வந்து முதலாவது காயீனை எச்சரித்தார். இப்படித்தான் பலவேளைகளில் நாம் பாவம் செய்தபோதும் கூட நாம் அவரை தேடிச்செல்லாமல் இருந்தாலும் கர்த்தரே நம்மை தேடிவருகிறவராக காணப்படுகின்றார். இயேசு இழந்துபோன ஆத்துமாக்களை தேடி அவரே உலகத்தில் மனுகோலமிட்டார். இது நமக்கு ஒரு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கிறது. இன்றும் கூட பாவம் செய்துவிட்ட சூழ்நிலையில் இருக்கிறேன் என்று சொல்பவர்களாக இருப்பீர்களென்றால் இயேசு தாமே வாசற்படியிலிருந்து கதவை தட்டுகிறவராக காணப்படுகின்றார். அவருக்கு இடம் கொடுங்கள் உங்கள் இருதயத்தில்.
காயீனுக்கு எரிச்சல் வந்தது. தன்னைவிட வயதில் குறைந்தவன் ஆசீர்வதிக்கப்படுகின்றான் என்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் செல்பவர்களாக, உங்களை விட வயதில் குறைந்தவர்கள் உங்களை விட ஆசீர்வதிக்கப்படும் போதும், அபிஷேகம்பண்ணப்படும் போதும் மிகவும் கவனமாக இருங்கள். ஒருபோதும் எரிச்சலடைந்து ஆண்டவரை விட்டு தூரம் போய்விடாதிருங்கள்.
ஆண்டவர் பின்பு காயீனை பார்த்து இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய் என்று சொன்னார். ஆதாமை கர்த்தர் சபிக்கவில்லை மாறாக சர்ப்பதையும், பூமியையும் தான் அவர் சபித்தார். ஆனால் கர்த்தர் காயீனையே சபித்தார். காரணம் ஆதாமுடைய பாவம் அவனைத்தான் காயப்படுத்தியது. ஆனால் காயீனுடைய பாவம் மற்றவர்களை காயப்படுத்தியது. ஒருசிலர் சொல்வதுண்டு அவன் புகைப்பிடிப்பதால், குடிப்பழக்கம் உள்ளவனாகவும் இருப்பதால் அவன் தான் மிக பெரிய பாவி என்று. ஆனால் அதை விட பெரிய பாவம் மற்றவர்களை பற்றி தவறாக இங்கும் அங்கும் பேசுவது, புறம் கூறுவதும், பொய்சாட்சிசொல்வதும் ஆகும். ஆகையால் தான் காயீன் சபிக்கப்பட்டான். மற்றவர்களை பற்றி புறம்கூறும்போது மிகவும் கவனமாக கர்த்தருடைய பிள்ளைகள் இருக்கவேண்டும்.
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது என்று கர்த்தர் காயீனை பார்த்து கேட்டார். இப்படித்தான் மற்றவர்களை பற்றி புறம்பேசினதினால் அவர்களுடைய கூக்குரல் கர்த்தருடைய சமூகத்தில் எட்டும். எப்பொழுது நாம் இயேசுவிடம் ஒப்புரவாகி அந்த பாவங்களை அறிக்கை செய்துவிட்டு விட்டுவிடுகிறோமோ, அப்பொழுது அவருடைய கோபத்திற்கு நீங்கலாக காணப்படுவோம்.
காயீன் பிற்காலத்தில் தேவ பிரசன்னதிலுருந்து துரத்தப்பட்டான், பின்பு அவனுடைய சந்ததியில் வந்த லாமேக்கு கொலைகாரனாக இருந்தான். இப்படி காயீனை போல தேவபிரசன்னதிலிருந்து வெளியே செல்ல ஒருபோது அனுமதிக்காமல், மாறாக, கர்த்தருடைய வார்த்தைக்கு எப்பொழுதும் செவிகொடுக்கிறவர்களாக இருக்கும்போது, நிச்சயம் கர்த்தரால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org