மாற்கு 10:21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
இயேசு தன்னிடம் வந்த ஒரு ஐசுவரியவானிடம் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு என்று சொன்னார். ஏதோ கொஞ்சம் தரித்திரருக்கு கொடு; பத்தில் ஒரு பகுதி கொடு; ஐம்பது சதவீதம் ஏன் தொன்னூறு சதவீதம் கொடு என்று சொல்லவில்லை. மாறாக உண்டானவைகளையெல்லாம் அதாவது முழுவதுமாக விற்று தரித்திரருக்குக் கொடு என்று சொன்னார். ஏன் இயேசு எல்லாவற்றையும் விற்று தரித்தரருக்கு கொடுக்க சொன்னார்.
இயேசு சகேயுவின் வீட்டிற்கு வந்த பிறகு என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான் (லுக் 19:8). அவன் பாதியை கொடுப்பதை இயேசு ஏற்றுக்கொண்டார். மார்த்தாள் மற்றும் மரியாளுக்கு சொந்தமாக இருக்கும் வீட்டை விற்று தரித்திரருக்கு கொடுக்கும்படியாக இயேசு சொல்லவில்லை. இப்படியிருக்க ஏன் இயேசு இந்த ஐசுவரியவானுக்கு மாத்திரம் அவனுக்கிருந்த எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்கு கொடுக்கவேண்டும் என்று சொன்னார். காரணம் அவனுக்கிருந்த பணமோகம்; பணத்தின் மீது மாத்திரமே வைத்த தீராத ஆசை; பணம் பணம் என்று மாத்திரமே சுற்றி திரிகிறவன். அவன் எல்லா கற்பனைகளை கைக்கொண்டபோதிலும் அவனுக்கிருந்த பண ஆசை ஒரு வியாதியை போல இருந்தது.
ஒரு சில விசுவாசிகளும் இப்படித்தான் எனக்கு ஜெபிக்க நேரமில்லாதளவிற்கு தொழில் அதிகமாக காணப்படுகிறது; வேதம் வாசிக்க நேரமில்லாதளவிற்கு வேலைப்பளு இருக்கிறது; வாரத்திற்கு ஒரு நாள் சபைக்கு செல்வதற்கு கூட பலகாரணங்களை சொல்லி எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு இயேசு சொல்வது உங்களுக்கு இருக்கிற எல்லாவற்றையும் முழுவதுமாக விற்று தரித்தரருக்கு கொடுங்கள். ஏனென்றால் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் (மாற் 10:25).
பணத்தைக்காட்டிலும் இயேசுவை அதிகமாய் நேசியுங்கள்; உங்கள் வேலை, உத்தியோகம், தொழில் எல்லாவற்றையும் காட்டிலும் இயேசுவை அதிகமாக நேசியுங்கள்; பண ஆசையை உதறி தள்ளுங்கள். உங்களுக்கு இன்னது வேண்டுமென்று பரம பிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். பின்பு இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org