லூசிபர் / அதிகாலையின் மகன்:-

ஏசா 14:12-15: அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

வேதத்தில் பிரதான தூதர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மூன்று பேர். அதில் மிகாவேல் மற்றும் காபிரியேலுக்கு மாத்திரம் தேவன் என்ற அர்த்தமுள்ள ‘el’ என்று அவர்கள் பெயர்கள் முடிகிறது. பழைய பாம்பாகிய லூசிபருக்கு இந்த அடைமொழி கொடுக்கப்படவில்லை.

தேவனோடு இணைந்த பெயரை ஏன் ஆண்டவர் லூசிபருக்கு மாத்திரம் கொடுக்கவில்லை. ஏனென்றால் தேவன் ஆதி முதல் அந்தம் வரை அறிந்திருக்கிறார்.

லூசிபர் ஒருகாலத்தில் துதிப்பதற்கும் ஆராதிப்பதற்கும் பொறுப்புடையவனாயிருந்தான். ஒரு உயர்ந்த நிலையில் தேவனுக்கு அருகாமையில் இருந்தவன். ஆனால் பின்காலத்தில் இந்த பெயர்கள், பதவிகள் நிமித்தம் அவன் பெருமையினால் நிறைந்து, தேவனைப்போல தானும் வணங்கப்பட்ட வேண்டுமென்று விரும்பினான். இன்றைக்கு அநேக மதவாத தலைவர்களும், அரசியல்வாதிகளும் கூட தாங்கள் வணங்கப்பட்ட வேண்டுமென்று பெருமையினால் நிறைந்திருப்பதை பார்க்கமுடிகிறது. அவனுடைய பெருமையின் நிமித்தமாக தேவன் அவனை பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார். இயேசுவும் கூட சொல்லும்போது அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன் (லுக் 10:18) என்றார். இவைகளெல்லாம் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே ஆதமுக்கு முன்பாக நடைபெற்றவைகள்.

இவன் ஒரு சாதாரண தூதனாக காணப்படவில்லை. அவன் காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் இருந்தவன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினவன். ஆனால் தேவனுக்கு மேலாக உயரவேண்டும் என்ற அவனுடைய எண்ணத்தால், பெருமையால் தள்ளப்பட்டான். இன்று அவன் தன்னுடைய ராஜ்யத்தை இரண்டாவது வானத்தில் ஸ்தாபித்து அங்கிருந்து பொல்லாத செயல்களை செய்கிறவனாக காணப்படுகிறான்.

லூசிபரின் விழுகைக்கு பின்பாக தேவன் படைத்த செம்மையான பூமி பின்பு ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. அவன் வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரம் (வெளி 9:1) என்று வாசிக்கமுடியும். மாத்திரமல்ல உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள் (வெளி 12:9).

இந்தபொல்லாத சாத்தானாகிய வலுசர்ப்பதோடு நமக்கு யுத்தம் என்றும் காணப்படுகிறது என்று வேதம் சொல்லுகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் யுத்தம் செய்யும்படி தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு ( எபே 6:12).

யுத்தம் செய்து இந்த சந்துருவை மேற்கொள்ளுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org