காபிரியேல்:-

தானி 8 : 16. அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன்.

வேதத்தில் பிரதான தூதர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மூன்று பேர். அதில் மிகாவேல் மற்றும் காபிரியேலுக்கு மாத்திரம் தேவன் என்ற அர்த்தமுள்ள ‘el’ என்று அவர்கள் பெயர்கள் முடிகிறது. பழைய பாம்பாகிய லூசிபருக்கு இந்த அடைமொழி கொடுக்கப்படவில்லை.

தேவனுடைய சமூகத்தில் நின்று, அவருடைய வார்த்தைகளை பிரசித்தப்படுத்துவதும், கொண்டுவருவதும் தான் காபிரியேல் பிரதான தூதரின் பொறுப்பு.

எதிர் காலத்தில் நடக்கப்போவதை பற்றி தானியேல் ஒரு தரிசனத்தை கண்டான். அவன் பார்த்த காரியங்கள் பயங்கரமாயிருந்தபடியால் அவன் சொன்னான் நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன் (தானி 10:8) என்பதாக. அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன். இதோ, ஒருவன் கை என்னைத் தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது. அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன் (தானி 10:9-11) என்றான். இந்த பிரதான தூதன் காபிரியேல் தூதன்.

மாத்திரமல்ல, இன்னொருமுறை தானியேல், தன்னுடைய யூதா ஜனங்களின் விடுதலைக்காக பாரத்தோடு ஜெபித்துக்கொண்டிருந்தபோது அவன் சொல்லுகிறான் அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான் (தானி 9:21) என்பதாக. ஆம் காபிரியேல் தூதன் மிக வேகமாக, வியக்கத்தக்க வேகத்தோடு பயணம் செய்து கர்த்தருடைய வார்த்தையை கொண்டுவருபவன். ஆண்டவருடைய வார்த்தைக்காக தாகத்தோடு இருக்கிறீர்களா? சமயத்துக்கேற்ற வார்த்தைகளை கர்த்தர் உங்களுக்கு கொடுக்கவேண்டுமென்று எதிர்பார்கிறீர்களா? கர்த்தரிடம் ஏதாவது பதிலை பெற்றுக்கொள்ளவேண்டுமா?. உங்களுக்கு கர்த்தருடைய வார்த்தைகளை கொண்டுவருவதற்கு கர்த்தர் காபிரியேல் போன்ற தூதர்களை உங்களுக்காக வைத்திருக்கிறார்.

புதிய ஏற்பாட்டில் சகரியாவிடம் வந்து அவனுக்கும் அவன் மனைவியாகிய எலிசபெத்துக்கும் பிறக்கப்போகிற குமாரனாகிய யோவானை குறித்து சொன்னவன் இந்த காபிரியேல் தூதன் தான். நாசரேத்திலுள்ள மரியாளிடம் பேசும்படி தேவனால் அனுப்பப்பட்டவனும் காபிரியேல் தூதன் தான். மாத்திரமல்ல பிரதான தூதரின் சத்தத்தோடு கர்த்தர் வானத்திலிருந்து இறங்கி வருவார் அந்த பிரதான தூதன் காபிரியேல் என்று வேத வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.

இப்படி கர்த்தரிடம் அறிவிப்புகளையும், வார்த்தைகளையும் நமக்கு சரியான நேரத்தில், மிக வேகமாக கொண்டுவரும்படி கர்த்தர் நமக்காக காபிரியேல் போன்ற தூதர்களை நியமித்திருகிறார் என்பதை உணரும்போது எவ்வளவு சந்தோசம். ஆகையால் கவலைபடாதிருங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org