பரிசுத்தம்:-

லேவியராகமம் 20 : 26. கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்.

வருடத்தின் ஆரம்பத்தில் அநேக வாக்குத்தத்தங்கள், ஆசீர்வாதங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் எதிர்நோக்கி இருக்கும் நாம் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். அது என்ன அந்த தீர்மானம்; அதிகாலையில் எழுந்து வேதம் வாசிக்க வேண்டும், அதிகாலையில் எழுந்து ஜெபம் செய்ய வேண்டும், வாரத்திற்கு ஒரு நாள் உபவாசம் இருந்து ஜெபிக்க வேண்டும் என்ற பல தீர்மானங்கள். எல்லாம் நல்லதுதான், கண்டிப்பாக இப்படி எல்லா தீர்மானங்களையும் எடுக்க வேண்டும். அதோடுகூட நாம் நம்மை பரிசுத்த ஜீவியம் செய்ய ஒப்புக்கொடுக்க வேண்டும். காரணம் உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் (I பேதுரு 1:15 ) என்று வசனம் சொல்கிறது. கர்த்தர் சொல்லுகிறார் நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று.(I பேதுரு 1:16 ).

இந்த உலகில் யார்தான் பரிசுத்தமாக வாழ முடியும், யார் தான் இதுவரைக்கும் பரிசுத்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள், யார் தன்னை பரிசுத்தவான் என்று சொல்ல முடியும், பெரிய பெரிய ஊழியக்காரர்கள் கூட முழுமையாக பரிசுத்த ஜீவியும் செய்யவில்லை; ஆகையால் பரிசுத்தமாய் வாழ்வது கடினம் என்று அநேகர் வியாக்கியானம் பேசிக்கொண்டு பரிசுத்தத்தை அசட்டை பண்ணுகிறவர்களாக காணப்படுகிற ஜனங்கள் உண்டு. நாம் பரிசுத்தமாய் வாழ்வதற்கு நம்மை மற்றவர்களிடம் ஒப்பிட்டு பார்த்தால் நாம் வீழ்ந்துதான் போவோம்; மாறாக நான் பரிசுத்தர் என்று சொன்ன இயேசுவை நோக்கி பார்ப்போமென்றால் அதைக்குறித்து வாஞ்சை நமக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.  நாம் பரிசுத்த ஜீவியம் செய்ய வேண்டுமென்பது கர்த்தருடைய வாஞ்சை. பரிசுத்தமில்லாமால் தேவனை தரிசிக்க முடியாது என்று வசனம் சொல்கிறது.

நாம் நாமாகவே பரிசுத்த ஜீவியம் செய்து விட முடியாது. வசனம் சொல்கிறது நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். (லேவி 22 : 9 ). பரிசுத்த ஆவியானவர் தான் நம்மை ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்திற்கு நேராக அழைத்து செல்கிறவர். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் (யோவான் 16:8 ) என்று வாசிக்கிறோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் பரிசுத்தத்தை வாஞ்சிக்க வேண்டும், யோசேப்பு பாவத்திற்கு விலகி ஓடியது போல நாமும் விலகி ஓட வேண்டும், வசனத்தின்படி அவருக்கேற்ற பரிசுத்த ஜீவியம் செய்ய நம்மை ஒப்பு கொடுக்க வேண்டும்.

நாம் ஆராதிக்கிற தேவன் பரிசுத்தர்; நம்முடைய தகப்பன் பரிசுத்தர்; அவருடைய பிள்ளைகளாகிய நாமும், அப்பா பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்ற நாமும் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (வெளி 22 : 11 , 12 ).

இந்த வருடம் பரிசுத்தமுள்ள வாழ்க்கை வாழ உங்களை ஒப்பு கொடுங்கள், அவரளிக்கும் பலன் அவரோடுகூட உங்களுக்கு வரும்.

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பாராக. ஆமென்.

Bro. Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org