உங்கள் நாமம் எனக்கு முன்பாக நிற்கும். Your name shall remain before Me.

நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 66:22.

உங்கள் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள். 2020-வது வருஷம் முழுவதும் கர்த்தர் எல்லா நன்மைகளையும் தந்து உங்களை ஆசீர்வதிக்கும் படிக்கு ஜெபிக்கிறேன்.

புதிய வருஷத்தில் உங்கள் நாமங்கள் கர்த்தருக்கு முன்பாக நிற்கும். உங்கள் சந்ததி கர்த்தருக்கு முன்பாக நிற்கும். எப்படியெனில், கர்த்தர் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் அவருக்கு முன்பாக அழியாமல் நிற்பது போல, உங்கள் நாமங்கள் இம்மையிலும், மறுமையிலும் கர்த்தருக்கு முன்பாக என்றும் நிற்கும். நாம் காண்கிற வானமும் பூமியும் அழிவுக்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.  இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்  (2 பேதுரு 3:10-14). இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை என்று சொன்னவர் அவருடைய வருகையின் நாளில் சகலத்தையும் புதிதாக்குவார். அதன்பின்பு, புதிய வானமும் புதிய பூமியும் என்றும் அழிவதில்லை, அவைகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

நம்மை அவருக்கு முன்பாக நிறுத்தி  ஆசீர்வதிப்பதற்கு முன்பாக, நம்மையும் புதிதாக்குகிற தேவன். பரிசுத்த ஜீவியம் செய்வதற்கு, தேவ பக்தியின் ஜீவியம் செய்வதற்கு, கறையற்றவர்களாய், பிழையில்லாதவர்களாய், தேவனோடு சமாதானாமாகும்படிக்கு, நம்மை புதிதாக்குவார். உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாமிசத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன் (எசேக். 36:26,27). புதிய வருஷத்தில் புதிய இருதயத்தைக் கர்த்தர் தருவார், புதிய ஆவியைக் கட்டளையிடுவார். கர்த்தருடை வார்த்ததைகள் கிரியைச் செய்யக்கூடாமல் காணப்பட்ட கல்லான இருதயங்களைக் கர்த்தர் எடுத்துப்போடுவார், சதையான இருதயங்களைத் தருவார். அவருடைய நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படியான புதிய ஆவியை உங்களுக்குத் தருவார்.  பழையவைகள் எல்லாவற்றையும் ஒளிந்துபோகும்படிச் செய்வார். ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2 கொரி. 5:17). 2020-வது வருடம் சகலவற்றையும் புதிதாக்கி, நம்மை அவருக்கு முன்பாக நிற்கத் தகுதிப்படுத்தி நிறுத்துவார். அவருக்குரியவர்களாய் மாற்றி நிறுத்துவார். அப்போது தான் நிலையான ஆசீர்வாதங்களைக் கர்த்தர் நமக்குத் தரமுடியும்.

நம்முடைய நாமங்கள் கர்த்தருக்கு முன்பாக நிற்கும் போது, நாமும் நம்முடைய சந்ததியும்  கர்த்தருக்கு முன்பாக நிற்கும் போது கர்த்தர் நம்மை எப்படி ஆசீர்வதிக்கப்போகிறார்.

1) எலியா கர்த்தருக்கு முன்பாக நிற்கும் நான் (1 இரா.17:1,18:15) என்று கூறுகிறார். சுற்றிலும் பஞ்சங்களும் பற்றாக்குறைகளும் காணப்பட்டது. ஆனால் எலியாவை கர்த்தர் கேரீத் ஆற்றின் தண்ணீரினாலும், காகத்தைக் கொண்டும், விதவையைக் கொண்டும் போஷித்தார். ஒரு குறைவும் இல்லை. புதிய வருடத்திலும், உங்கள் வாழ்நாள் முழுவதிலும் நீங்கள் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகளாய் காணப்படுவதினால், உஙகளுக்கு யேகோவா யீரேவாக கர்த்தர் காணப்படுவார். உங்கள் அத்தனை தேவைகளையும் சந்திப்பார். சுற்றிலும் தேவைகளும் குறைவுகளும் காணப்படலாம். ஆனால் கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார். நீங்கள் ஒன்றிலும் குறைவு பட்டுப் போவதில்லை.

2) எஸ்தர் ராஜாவுக்கு முன்பாக நின்றாள்(எஸ்தர் 5:2). அப்போது அவளுக்கு ராஜாவின் கண்களில் தயைக் கிடைத்தது. ராஜாவின் செங்கோல் அவளுக்காக நீட்டப்பட்டது. அவளுடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. புதிய வருஷத்தில் நீங்கள் புதிய சிருஷ்டியாய் ஆண்டவருக்கு முன்பாக நிற்பதால், கர்த்தர் தம்முடைய தயையையெல்லாம் உங்களுக்கு முன்பாக கடந்துசெல்லும்படிக்குச் செய்வார். முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந் தலையின்மேலும் இறங்கி யோசேப்பை பார்வோனுடைய அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தினது போல, கர்த்தருடைய தயவு உங்கள் சிரசின்மேல் இறங்கி வரும், அது உங்களை உயர்த்தும். உங்கள் வேலை ஸ்தலங்களில் உயர்ந்திருப்பீர்கள். எஜமான்கள் கண்களில் தயவைக் கர்த்தர் கட்டளையிடுவாhர்.

3) ஆபிரகாம் கர்த்தருக்கு முன்பாக நின்றான் (ஆதி. 18:22). சோதோமில் காணப்பட்ட தன் சகோதரன் மகனான லோத்தின் குடும்பத்திற்காகத் திறப்பிலே நின்று ஜெபிக்கிறவனாகக் காணப்பட்டான். கர்த்தர் அவனுடைய ஜெபத்தைக் கேட்டார். லோத்தையும் அவன் குடும்பத்தையும் தப்புவித்தார். அனேக நாட்களாக நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிற ஜெபங்களை எல்லாம் இந்த புதிய வருஷத்தில் கர்த்தர் கேட்டு உங்களுக்குப் பதில் தருவார். உங்களை மகிழப்பண்ணுவார்.

4) யூதாவின் சகல மனுஷரும் ஆண்டவருக்கு முன்பாக நின்றார்கள் (2 நாளா. 20:13). யோசபாத்தின் நாட்களில் எதிரிகள் யுத்தத்திற்காக வந்தார்கள். யோசபாத்தும் யூதா ஜனங்களும் ஆண்வருக்கு முன்பாக உபவாசத்தோடு நின்றார்கள். அதினிமித்தம் கர்த்தர் அவர்களை நினைத்தருளி அவர்களுக்காக யுத்தம்பண்ணினார். எதரிகள் அத்தனை பேரையும் நிர்மூலமாக்கி, யூதா ஜனங்களுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார். அதுபோல கர்த்தர் உங்களுக்கா யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள். சத்துருவின் சகல திட்டங்களையும் தோல்வியில் முடியப்பண்ணுவார். உங்கள் கரங்கள் அவன் பிடரியின் மேல் இருக்கும் படிக்குச் செய்வார்.

5. பவுல் கர்த்தருக்காக நின்ற வேளையில், கர்த்தர் அவனுக்காக துணையாக நின்றார் (2 தீமத். 4:16,17). பவுல், முதல் விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் அவனோடே கூட இருக்கவில்லை, எல்லாரும் கைவிட்டார்கள்; கர்த்தர் அவனுக்குத் துணையாகநின்று, பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், அவனைப் பலப்படுத்தினார். ஊழியங்களின் பாதையில் கர்த்தருக்காக நீங்கள் நிற்கும்போது, ஒரு மனிதனும் உங்களுக்கு உதவியாக நிற்கவில்லையென்றாலும் கர்த்தர் உங்களுக்காக நிற்பார். உங்களை வைத்துச் செய்ய நினைத்திருக்கிற ஊழியங்களை உங்களைக் கொண்டு நிறைவேற்றுவார். புறஜாதிகளைக் கொள்ளைப் பொருளாக தருவார். உங்களைப் பலப்படுத்துவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar