துணையும் கேடகமுமாய் இருப்பவரை நம்புங்கள்:-

சங் 115:9. இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

இந்த சங்கீதத்தில் இஸ்ரவேலரே, ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. காரணம் அவரே துணையும் கேடகமுமாய் இருக்கிறார்.

பவுல் ஒருமுறை தான் சிங்கத்தின் வாய்க்கு தப்புவிக்கப்பட்டதாக சொல்லுகிறான். சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்(2 தீமோ 4:17) என்று வசனம் சொல்லுகிறது. காரணம் இயேசு அவனுக்கு துணையாக இருந்தார். இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையில் அநேக சிங்கங்கள் நம்மை விழுங்க நினைக்கிறது. வசனம் சொல்கிறது உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (I பேதுரு 5:8). சிங்கம்போல சத்துருக்கள் உங்களுக்கு எதிராக வந்தாலும், உங்களை விழத்தள்ளலாமென்று சதித்திட்டம் போட்டாலும், இயேசு உங்களுக்கு துணையாய் இருப்பார் என்பதை நம்புங்கள்.

அடுத்ததாக அவர் உங்களுக்கு கேடகமாய் இருப்பவர். ஆபிரகாமிடம் ஆண்டவர் சொன்னார் ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார் (ஆதி 15:1). சங்கீதக்காரன் சொல்கிறான் தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார் (சங்கீதம் 18:30 ). கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது தாவீது சொல்கிறான், கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர் (2 சாமு 22:2) என்பதாக. அதேபோல உங்களுக்கு விரோதமாக வருகிற சத்துருக்களிடமிருந்து உங்களை பாதுகாக்க கர்த்தர் உங்களுக்கு கேடகமாய் இருப்பார் என்பதை நம்புங்கள்.

அவர் ஒருவரே நம்பிக்கைக்குரியவர். உலகத்து ஜனங்கள், வேறு சக்திகள் உங்களுக்கு துணையாக கேடகமாக இருப்பார்கள் என்று நம்பாதிருங்கள். உங்கள் முழு நம்பிக்கை முழுவதையும் இயேசு மீது வையுங்கள். கடைசிமட்டும் உங்களை அவர் நடத்துவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org