கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் (The joy of the Lord is your strength).

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து,  மதுரமானதைக் குடித்து,  ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்,  இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள்,  விசாரப்படவேண்டாம்,  கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான் (நெகேமியா 8:10).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CEBDjA0Eb54

வேதபாரகனாகிய எஸ்றா நியாயப்பிரமாண புஸ்தகத்தை,  பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து எருசலேம் தேவாலயத்தையும்,  அதின் அலங்கத்தையும் எடுத்துக்கட்ட வந்த ஜனங்கள் மத்தியில் வாசித்து,  அந்த வசனங்களின் அர்த்தத்தை விளக்கின வேளையில்,  ஜனங்கள் எல்லாரும் பாவ உணர்வு அடைந்து,  தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அழுதார்கள். அந்த வேளையில் எஸ்றா அவர்களை நோக்கி நீங்கள் துக்கிக்கவும் அழவும் வேண்டாம் என்று கூறி,  கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்,  அதுவே உங்கள் பெலன் என்று உற்சாகப்படுத்தினான்.

பாவம்,  தேவனுடைய மகிழ்ச்சியை நாம் இழக்கும் படிக்குச் செய்யும். சங்கீதக்காரனாகிய தாவீது,  உரியாவின் மனைவியாகிய பத்சேபாளோடு பாவம் செய்தான். பின்பு அவள் புருஷனைப் போர்க்களத்தில் முன்னிறுத்தி கொலை செய்தான்,  அதன் பின்பு பத்சேபாளை தன் மனைவியாக்கிக் கொண்டான். நாத்தான் தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தர் அவனுடைய மீறுதல்களை உணர்த்து வித்த உடன்,  அவன் ஏறெடுத்த ஜெபம் 51வது சங்கீதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்,  என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது,  தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து,  உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன். நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும்,  அப்பொழுது நான் சுத்தமாவேன்,  என்னைக் கழுவியருளும்,  அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும்,  அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து,  உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும் என்று மனதுருகி வேண்டுதல் செய்தான். பாவங்கள் அவனுடைய சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் இழந்துவிடும்படி செய்தது. கர்த்தருடைய பிள்ளைகளே! நம்முடைய பாவங்கள் கர்த்தரை விட்டு நம்மைப் பிரித்துவிடும்.  நம்முடைய அக்கிரமங்கள் நமக்கும்  தேவனுக்கும் நடுவாகப் பிரிவினையை உண்டாக்கிவிடும். நம் பாவங்களே அவர் நமக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை நமக்கு மறைக்கிறது. அதுவே கர்த்தருக்குள் நாம் மகிழ்ச்சியாயிருக்கக் கூடாமலும் செய்யும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.   கர்த்தருடைய ஆவியானவர் நம்முடைய பாவங்களையும்,  மீறுதல்களையும் உணர்த்தும் போது,  பாவ உணர்வு அடைந்து,  பாவங்களை அறிக்கையிட்டு,  அவற்றை விட்டு விடுகிறவர்களாக நாம் காணப்பட வேண்டும்,  அப்போது கர்த்தருடைய மகிழ்ச்சி நம்மை நிரப்பும்,  நாமும் அவருக்குள் மகிழ்ச்சியாகக் காணப்படமுடியும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org