பக்தியுள்ளவனின் ஜெபம்(Prayer of Godly).

இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்,    அப்பொழுது மிகுந்த  ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது(சங்.32:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/u_S9IGqT4_I

பக்தியுள்ளவர்கள் ஜெபிக்கிறவர்களாய் காணப்படுவார்கள். ஜெபம்,    நாம் தேவனைச் சார்ந்து ஜீவிக்கிறவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. சுயபெலத்தை நம்பி ஜீவிக்கிறவன் ஜெபிப்பதில்லை. கடைசி நாட்கள் பக்தியுள்ளவர்களும்,    ஜெபிக்கிறவர்களும் அற்றுப் போகிற காலமாய் காணப்படுகிறது. சபைகளில் ஜெபக் கூட்டங்கள் குறையத் துவங்கியுள்ளது,    ஜெபிக்க வாஞ்சையோடு கூடிவருகிற விசுவாசிகளின் எண்ணிக்கையும் குறைவாய் காணப்படுகிறது. சோர்வின் ஆவி ஜெபிக்கிறவர்களைச்  சிறைபிடித்திருக்கிறது. ஆனால் ஜெபிக்கிற ஒரு நபருக்கும்,    குடும்பத்திற்கும்,    ஊழியத்திற்கும்  கர்த்தரிடத்திலிருந்து  சகாயமும்,    உதவியும்,    ஒத்தாசையும் நிச்சயமாய் கிடைக்கும். யோனா  கர்த்தருடைய சமூகத்தை விட்டு விலகி தர்ஷீசுக்கு ஓடிப்போன போது கூட,    உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று மாலுமி கேட்டபோது,    நான் எபிரெயன்,     சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான். கடைசியில் மீனின் வயிற்றிலிருந்து,    உதவி செய்கிற ஆண்டவரை நோக்கி பயபக்தியோடு  ஏறெடுத்த ஜெபத்திற்கு அவர் பதிலளித்தார். என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்,    அவர் எனக்கு உத்தரவு அருளினார்,    நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன்,    நீர் என் சத்தத்தைக் கேட்டீர் என்று யோனா  அறிக்கையிட்டார். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார்,    அது யோனாவைக் கரையி;லே கக்கிவிட்டது. 

கர்த்தருடைய பிள்ளைகளே,    உங்கள் ஜெபஜீவியத்தை சீர்படுத்துங்கள். உங்கள் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டு உங்களுக்குச்  சகாயஞ் செய்வதற்குக் கர்த்தர் ஆவலுள்ளவராய் காணப்படுகிறார். என்னென்ன காரியங்களில் கர்த்தருடைய உதவி வேண்டுமோ,    அவற்றையெல்லாம் கர்த்தரிடத்தில் ஜெபத்திலே அறிக்கையிடுங்கள்.  அவர் தீவிரித்து வந்து உங்களுக்கு உதவி செய்வார். உங்களுக்கு விரோதமாக மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது உங்களை அணுகாது. கர்த்தர் உங்களைப் பாதுகாப்பார். சத்துரு உங்களுக்கு விரோதமாய் வெள்ளம் போல் எழும்பினாலும்,    கர்த்தர் அவனுக்கு விரோதமாய் கொடியேற்றி உங்களை விடுவிப்பார். நோவா தேவனோடு சஞ்சரிக்கிறவனாய் காணப்பட்டான். அவனுடைய நாட்களில்  ஜலப்பிரவாகம் வந்தது.  நோவாவிற்கும் அவன் குடும்பத்திற்கும் எந்த தீங்கும் வராதபடிக்கு கர்த்தர் காத்துக் கொண்டார். சமுத்திர ஜலப்பிரளயத்திலிருந்து யோனாவைக் காத்த தேவன் உங்களையும் காப்பார். ஆகையால் பக்தியுள்ள ஜீவியம் செய்து,    கர்த்தரை நோக்கி இடைவிடாமல் எப்பொழுதும் ஜெபிக்கிறவர்களாய் காணப்படுங்கள். அப்போது உங்கள் காரியங்கள் ஜெயமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae