சுறுசுறுப்பாக இருங்கள் (Be Brisk).

2 தெசலோ 3 :7,8. இன்னவிதமாய் எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும், ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gRWVByQ9m6o

பவுல் இரவும் பகலும் சுறுசுறுப்பாக வேலைசெய்து தன் ஊழியத்தை செய்து, தன் ஓட்டத்தை நிறைவேற்றியவன். தேவ பிள்ளைகளும் பவுலை போல சுறுசுறுப்பாக செயல்படவேண்டும். சோம்பேறித்தனம் என்பது துன்மார்க்கம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தாலந்தை பற்றிய உவமையில் (மத் 25:14 -30), ஒரு தாலந்தை உடையவன் சோம்பலாக இருந்தான். அவன் எஜமானுடைய சந்தோசத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை.

ஒரு வேடிக்கை கதையுண்டு. ஒரு அமெரிக்கன் பரலோகத்திற்கு சென்றான். அப்பொழுது ஆண்டவர் நீ ஏன் இங்கே வந்தாய் என்று கேட்டார். அதற்கு அவன் சந்திரனையும் தாண்டி வருவதற்கு எனக்கு மிகவும் வாஞ்சையாக இருந்தது என்று கூறினான். அதுபோல இங்கிலாந்து, ரஷியா, எகிப்து போன்ற தேசத்திலும் இருந்தும் சிலர் பரலோகத்திற்கு சென்றனர். அவர்களும் அவர்களுடைய காரணத்தை சொன்னார்கள். அதுபோல தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியன் ஒருவனும் பரலோகத்திற்கு கடந்து சென்றான். ஆண்டவர், நீ எதற்காக இங்கே வந்தாய் என்று கேட்டார். அதற்கு அவன் சும்மா இங்கே வந்தேன் என்று பதிலளித்தான். கர்த்தருடைய பிள்ளைகள் ஒருநாளும் ஒரேநேரமும் சும்மா இருக்கிறேன் என்று சொல்லி தங்கள் நேரத்தை வீணடிக்கிறவர்களாக காணப்படலாகாது. சிலருக்கு சோபாவில் உட்கார்ந்தால் அதை விட்டு எழுந்திருக்க மனது வருவதில்லை. சும்மா அங்கேயே பல மணிநேரங்கள் உட்கார்ந்து தங்கள் நேரத்தை வீணடித்துவிடுவார்கள். சிலர் தங்கள் படுக்கையில் பல மணிநேரம் படுத்து தங்கள் நேரத்தை வீணடித்துவிடுவார்கள். சிலர் அதிக நேரம் பகற்கனவு கண்டு தங்கள் நேரங்களை எல்லாம் வீணடித்துவிடுவார்கள். ஆண்டவர் ஆறு நாளில் எல்லாவற்றையும் படைத்து ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் என்ற வசனத்தை காரணம் காட்டி அநேகர் அதிகமாக தூங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இயேசு ஓய்வு நாளிலும் வியாதிபட்டவர்களை குணமாக்கினார் என்பதை மறந்து விடுவார்கள். ஒருவர் சொன்னார் மாற்றுவேலை செய்வது தான் ஓய்வு நாள் என்பதாக. ஆகையால் ஓய்வு நாளில் சும்மா இருந்து நேரத்தை வீணடிக்காமல், கர்த்தருக்காக எதையாவது செய்ய சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.

அரசியல் கட்சிக்கு பணியாற்றும் வேலையாட்கள் தங்கள் கட்சிக்காக இரவும் பகலும் கண் விழித்து அயராது உழைக்கிறார்கள், சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். தங்கள் கொள்கைக்காக பணியாற்றுபவர்கள் தங்கள் குடும்பத்தையும் பாராமல் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் . இதை நாம் சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். உலகத்து ஜனங்கள் இப்படி வேலை செய்யும்போது நாம் தூங்கிக்கொண்டும், சோம்பேறியாகவும் இருந்து நேரத்தை வீணடிக்கிறவர்களாய் காணப்படலாகாது. இருக்கும் எல்லா நேரத்தையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது (யோவான் 9:4) என்ற முன்னெச்சரிக்கையை வேதம் நமக்கு அறிவிக்கிறது. நாம் செய்ய வேண்டிய வேலை அநேகமாய் இருக்கிறது என்ற எண்ணத்துடனும், இலட்சியத்துடனும் எல்லா நேரங்களிலும் சுறுசுறுப்பாய் இருங்கள். மூன்றரை ஆண்டுகளில் இயேசு செய்தவை, அப்போஸ்தர்கள் செய்த அற்புதங்களை போலவும், ஊழியங்களை போலவும், இரண்டாயிரம் ஆண்டுகளாகியும் நம்மால் செய்ய முடியவில்லை. இதற்கு மிக முக்கியமான காரணம் சோம்பேறித்தனம் என்பதை அறிந்து இன்றிலிருந்து தேவனுக்காய் சுறுசுறுப்பாய் செயல்பட உங்களை அற்பணியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org