கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போலப் பறந்துவருகிறான்(An eagle is over the house of the Lord).

உன் வாயிலே எக்காளத்தை வை,   அவர்கள் என் உடன்படிக்கையை மீறி,  என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால்,  கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான் (ஓசியா 8:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8mbwlC_4IDk

இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி,  அவருடைய வார்த்தைகளுக்கு விரோதமாகத் துரோகம் பண்ணினார்கள். என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்,   அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள் (ஓசியா 8:12) என்று அவர்களைக் குறித்து கர்த்தர் வேதனையுற்றார். ஆகையால் அசீரியர்களை கர்த்தர் அவர்கள் மேல் கழுகைப்போல எழும்பி யுத்தத்திற்கு வரப்பண்ணினார். இஸ்ரவேலர்களைப் போல,  கடைசி நாட்களில் காணப்படுகிற கர்த்தருடைய ஜனங்கள்,  தேவன் எழுதிக்கொடுத்த கர்த்தருடைய வார்த்தைகளை மீறி,  வேதத்தின் மகத்துவங்களை அந்நிய காரியங்களாய் கருதி,  வேத வார்த்தைகளுக்கு ஒவ்வாத ஜீவியம் செய்வதினால்,  எதிராளியாகிய பிசாசு கர்த்தருடைய ஜனங்கள் மேலும்,  கர்த்தருடைய வீடாகிய அவருடைய சபையின் மேலும் யுத்தம் செய்யும் படிக்கு வருகிறான். கர்த்தருடைய வார்த்தைகளை அறிந்த ஜனங்கள் கூட,  விசுவாசிகள்,  சீஷர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் கூட,  கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமான காரியங்களை தங்கள் வாழ்க்கையில் செய்யும் போது,  கர்த்தருடைய இருதயம் துக்கப்படுகிறது. பாகாலுக்கு முன்பாக முழங்கால் படியிடாதவர்களையும்,  அவனை முத்தஞ்செய்யாதவர்களையும் கர்த்தருடைய கண்கள் இன்று தேடிக்கொண்டிருக்கிறது.  

கர்த்தருடைய ஜனங்களின் வாழ்க்கையின் பிரமாணம் (Standard of Christian Living) கர்த்தருடைய வார்த்தையாய் காணப்படவேண்டும். கர்த்தருடைய வார்த்தையில் ஜீவனுள்ளது,  கர்த்தருடைய வார்த்தை ஆத்துமாவை உயிர்ப்பிக்க வல்லமையுள்ளது,  கர்த்தருடைய வார்த்தை சத்துருவை வீழ்த்துவதற்கு ஆவியின் பட்டயமாய் காணப்படுகிறது,  கர்த்தருடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளும் போது நம்முடைய வழிகள் வாய்க்கும்,  அவருடைய வார்த்தையே நமக்கு ஆசீர்வாதமாய் காணப்படுகிறது. அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி நம்மைக் குணமாக்குகிறார். ஆகையால்,  கர்த்தருடைய ஜனங்கள்,  அவருடைய வார்த்தைகளை விட்டு இடது புறமும் வலது புறமும் விலகாதபடி நாம் ஜீவிக்க நம்மை அர்ப்பணிக்கவேண்டும். என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்,   நீ அறிவை வெறுத்தாய்,  ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன்,   நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய்,  ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன் (ஓசியா 4:6) என்றும் கர்த்தர் எச்சரிக்கிறார். வேதவார்த்தைகளை நாம் வெறுத்தால் கர்த்தர் நம்மை  வெறுத்து விடுவார்,  அதுபோல வேதவார்த்தைகளை நாம் மறந்தால் நம்முடைய பிள்ளைகளையும் கர்த்தர் மறந்துவிடுவார். ஆகையால் வேத வார்த்தைகளின்படி நாம் ஜீவிக்க நம்மை அர்ப்பணிப்போம்.

பாதாளத்தின் அதிகாரங்கள் சபையை மேற்கொள்ளுவதற்கு யுத்தம் செய்யும் காலமிது,  கர்த்தருடைய வீட்டின் மேல் கழுகைப் போலப் பறந்து வந்து,  ஆத்துமாக்களைக் கொள்ளை கொண்டு போவதற்குச் சத்துரு யுத்தம் செய்வான். சபை கூடிவருதலை விட்டுவிடக் கூடாது (எபி. 10:25) என்று வேதம் கூறுகிறது,  ஆனால் நாம் கூடிவரமுடியாதபடி தடைகளைக் சத்துரு கொண்டு வருவான். அந்த வேளையில் கர்த்தருடைய ஜனங்கள் அவன் தந்திரத்தை அறிந்து,  நம்முடைய வாய்களில் எக்காளத்தை வைக்கவேண்டும். துதியென்னும் எக்காளத்தையும்,  ஜெபம் என்னும் எக்காள சத்தத்தையும் நாம் தொனிக்கச் செய்யும் போது,  கர்த்தர் நமக்கு ஜெயத்தைக் கொடுப்பார்,  காரியங்கள் மாறுதலாய் முடியும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar