செழிப்பான இடம் (Place of Abundance)

மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர், தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம், செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்  (சங். 66:12).

கடினமான பாதைகளில்  கர்த்தர் நம்மைச் சிலவேளைகளில் நடத்துவதுண்டு. அதற்குரிய காரணத்தை அறியவும்,ஏன் என்று  அவரிடம் கேள்வி கேட்கவும் முடியாது. ஆனால் அதே சூழ்நிலையில் என்றும் நாம் காணப்படக் கர்த்தர் நம்மை அனுமதிப்பதில்லை. அவருடைய நேரத்தில் நம்முடைய நிலைமைகளை  மாற்றி, ஆசீர்வாதமான, செழிப்பான இடங்களில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்துவார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/dA6or3jGJA8

ஒருநாள் கர்த்தர் ஆபிராமை நோக்கி, மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும்,ஒரு காட்டுப்புறாவையும்,ஒரு புறாக்குஞ்சையும்,என்னிடத்தில் கொண்டுவா என்றார். அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான், பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை. அந்த வேளையில் பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின, அவைகளை ஆபிராம் துரத்தினான். சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது. திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசைத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும்,நீ நிச்சயமாய் அறியக்கடவாய்,பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள் என்றார். ஆபிராமின் சந்ததியான இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையில் அப்படியே நடந்தது. அவர்கள் நானூறு வருஷம்  எகிப்பதியர்களுக்கு அடிமைகளாய் காணப்பட்டார்கள்.  எமோரியரின் பாவம் நிறைவேறுதலுக்கும் இவர்களுடைய நானூறு வருஷ கடினமான அடிமைத்தனத்திற்கும் உரியத் தொடர்பு என்ன என்று அறியமுடியவில்லை. ஆனால்,கர்த்தர் அவர்களைச் சந்தித்த வேளையில் பொன்னோடும், பொருளோடும் எகிப்திலிருந்துபுறப்பட்டு கானானுக்கு நேராக வந்தார்கள். அதன்பின்பும் அவர்களை நாற்பது வருஷம் வனாந்தர வழியாய் நடத்தினார்.  அவர்களைச் சிறுமைப்படுத்தி, சோதித்து,கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத  வறட்சியுள்ள பயங்கரமான பெரிய வனாந்தர வழியாய்  அழைத்துவந்தார்.  அதுவும் பின்னாட்களில் அவர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டாக அவ்வண்ணமாக அழைத்து வந்தார் என்று வேதம் கூறுகிறது.  ஒரு தேசமாகமும், சபையாகவும் அவர்களை மாற்றி பாலும் தேனும் ஓடுகிற செழிப்பான கானானுக்குள் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து மகிழப்பண்ணினார்.

கர்த்தருடைய பிள்ளைகளே,சில வேளைகளில் மனுஷர்கள் உங்கள் தலையின் மேல் ஏறிப்போவது போலக் காணப்படுவதுண்டு. நீங்கள் அவர்களால் நசுக்கப்படுவது போல உணருவீர்கள். காரணமில்லாத போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்திக்கிற வேளைகள் உண்டு. தனிப்பட்ட, குடும்ப ஜீவியங்களிலும், ஊழியங்களின் பாதைகளிலும் இவை சம்பவிக்கும், சோர்ந்து போகாதிருங்கள். சவுல் ராஜா தாவீதை ஒரு தௌளுப்பூச்சியைப் போல வேட்டையாடினான். இயேசுவும் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் சொன்னார், அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது, பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டது. பீறி கர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள், என்று தன்னை சூழ்ந்திருந்த துன்மார்க்கர்களைக்  குறித்துக் கூறினார். ஆனால் பின்நாட்களில் தாவீதைக் கர்த்தர் ராஜாவாக உயர்த்தி ஆசீர்வதித்தார். ஒரு சந்ததி இயேசுவைச் சேவிக்கும் என்றும், தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும் என்றும் திரளான ஜனங்களைப் பிதாவாகிய தேவன் அவருக்குக் கொடுத்தார்.  அதுபோல, உங்களுக்கும் நன்மை செய்து, உங்களை மகிழப்பண்ணுவார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தீயையும், தண்ணீரையும் இதுவரையில் நீங்கள் கடந்து வந்திருக்கலாம், பலவிதமான  சோதனைகளையும் பாடுகளையும் சந்தித்திருக்கக் கூடும். ஆனாலும் நீங்கள் துன்பத்தையும், துக்கத்தையும் கண்ட நாட்களுக்குச்  சரியாய் உங்களை மகிழப்பண்ணுவார். கர்த்தர் உங்களைச் செழிப்பான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி உங்களை உயர்த்தி ஆசீர்வதித்து மகிழப்பண்ணுவார்  என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar