காலங்களும் சமயங்களும் மாறும்(Times and seasons will change):-

தானி 2:21. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/IfUmcOlrMaE

நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோனிய இராஜாவுக்கு அவன் கலங்கும்படியாக சொப்பனம் வந்தது. அந்த சொப்பனத்தையும் அதற்கான அர்த்தத்தையும் சாஸ்திரிகள் ஜோசியர்கள் சூனியக்காரர்கள் கல்தேயர்கள் என்று யாராலும் சொல்லமுடியவில்லை. அப்பொழுது அந்த சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் கர்த்தர் தானியேலுக்கு வெளிப்படுத்தினார். அப்பொழுது அவன் சொல்லுகிறான் கர்த்தர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர் என்று.

நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுவார். கர்த்தர் ஆசிர்வதித்திருக்கும்போது நாம் அந்த ஆசிர்வாதத்திற்கு பாத்திரவங்களாக இருக்க வேண்டும். நேபுகாத்நேச்சார் ஆசிர்வாதத்தின் வாய்க்காலாக இருக்கவில்லை. ஆகையால் அவன் இராஜ்ஜியபாரத்தை கர்த்தர் முடிவுக்கு கொண்டு வந்தார். அவர் ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். ஒரு நாளில் எந்த ஒரு இராஜ்யத்தையும் மாற்ற அவரால் முடியும். நிரந்த முதல்வர், நிரந்த பிரதமர் என்று ஜனங்கள் வேண்டுமானால் கோஷமிடலாம். ஆனால் பரலோகத்திலிருப்பவர் நகைப்பார். ஆண்டவர் அவர்களை இகழுவார். நாமும் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்படும்போது நேபுகாத்நேச்சாரை போல இல்லாமல் தாழ்மையோடு இன்னும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கிறவர்களாக காணப்பட வேண்டும். இல்லையேல் காலங்களும் சமயங்களும் மாறும்.

அதுபோல, நாம் கடந்து செல்லுகிற உபத்திரவங்கள், கடினமான பாதைகள் எதுவாக இருந்தாலும் அது நிரந்தரமல்ல. இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவமுண்டு என்று சொன்னவர், கடைசிமட்டும் நாம் உபத்திரவத்தில் தான் இருப்போம் என்று அவர் சொல்லவில்லை. மொர்தகாய் தூக்கிலபட வேண்டிய சமயத்தையும் காலத்தையும் கர்த்தர் மாற்றி ஆமான் தூக்கில் தொங்கும் படி செய்தார். யாக்கோபின் வாழ்க்கையில் சூரியன் அஸ்திமித்த சூழ்நிலை இருந்தது, பின்னாட்களில் அவன் வாழ்க்கையில் சூரியன் உதயமான நாட்களும் வந்தது. பேதுருவிற்கு அதிக பிரயாசப்பட்டும் மீன் அகப்படாத சூழ்நிலை இருந்தது; ஆனால் எப்பொழுது இயேசு அவன் படகில் வந்தாரோ, அப்பொழுது அவன் சூழ்நிலை மாறியது, வலை கிழிந்து போகும் அளவிற்கு மீன் அகப்பட்டது. அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் (சங் 30:5) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். ஆகையால் இப்பொழுது இருக்கிற அழுகை, களிப்ப்பாக மாறும். காரணம் கர்த்தர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர். நீங்கள் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுவீர்கள் (சங் 84:6).

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org