பலப்படுங்கள்(Be Strong).

கடைசியாக,   என் சகோதரரே,   கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் (எபே. 6:10). 

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-qVkvZMdwkw

எபேசு சபை விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்த கடைசி ஆலோசனை  இயேசு கிறிஸ்துவிலும்,   அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் என்பதாய் காணப்படுகிறது. கர்த்தருடைய வருகையின் நாட்களில் காணப்படுகிற கர்த்தருடைய  பிள்ளைகளாகிய நமக்கு மிகவும் பொருந்துகிற ஆலோசனையிது.  காரணம்  நம்மெல்லாருக்கும்  சத்துருவாகிய பிசாசோடு போராட்டம் உண்டு,   அவனை உங்கள் எதிராளியாகிய பிசாசென்றும்,   ஆயுதம் தரித்த பலவான் என்றும் வேதம் அழைக்கிறது. அவன் பலவான் மாத்திரமல்ல ஆயுதம் தரித்த பலவானாய் காணப்படுகிறான் (லூக்.11:21).  அவனினும் அதிக பலவானாகவும்,   அதிக வல்லமையுள்ள ஆயுதங்களைத் தரித்தவர்களாகவும் காணப்பட்டால் தான் அவனைக் கொள்ளையிடவும்,   மேற்கொள்ளவும் முடியும். ஒரு போர் வீரன் சரியான உடற்பயிற்சி செய்து தன் சரீரத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் தான் பலவகைப்பட்ட ஆயுதங்களைக் கையாண்டு போரிட முடியும். 

கர்த்தருடைய பிள்ளைகளே,   உங்களுடைய  பலம் கர்த்தரில் காணப்படுகிறது. நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.  தாவீது தன் தேனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான் (Strenghtened)  என்று வேதம் கூறுகிறது,   அது போலக் கர்த்தருக்குள் நாம் நம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். கர்த்தருக்குள் நாம் பலனடைய அவருடைய சமூகத்தில் காத்திருந்து ஜெபிக்க வேண்டும்.  கர்த்தருக்கு  காத்திருக்கிறவர்கள்  புதுப்பெலனடைந்து கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்,   அவர்கள் ஒருநாளும் சோர்ந்து போதுவதுமில்லை,   இளைப்படைவதுமில்லை. அதுபோல விசுவாசத்தினாலே நம்முற்பிதாக்கள்,   பலவீனத்தில்  பலங்கொண்டார்கள் (எபி.11:34) என்று வேதம் கூறுகிறது. விசுவாசத்தோடு கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்து நாம் ஜெபிக்கும் போது உள்ளான மனுஷனில் அதிகமாய் நாம் பலனடைந்து சத்துருவை எளிதாய் மேற்கொள்ள முடியும். 

 சத்துருவோடு காணப்படுகிற யுத்தத்தில் நம்முடைய ஆயுதங்கள்  மாம்சத்திற்குரியவைகள் அல்ல,   அரண்களை நிர்மூலமாக்குவதற்கு  தேவபலம் பொருந்தியதாய் காணப்படுகிறது. அப்படிப்பட்ட தேவனுடைய சர்வ ஆயுதங்களைக்குறித்து எபேசியர் 6:14-18ல் எழுதப்பட்டிருக்கிறது.  நாம் தரித்துக்கொள்ளுகிற  ஆயுதங்களாகச் சத்தியம் என்னும் கச்சையையும்,   நீதியென்னும் மார்க்கவசத்தையும்,   ஆயத்தம் என்னும் பாதரட்சையையும்,   இரட்சணியமென்னும் தலைச்சீராவையும்,    எடுத்துக் கொள்ளுவதற்கு உரிய ஆயுதங்களாக விசுவாசமென்னும்   கேடகத்தையும்,    தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட தேவபலம் பொருந்திய ஆயுதங்களை எடுத்து சத்துருவோடு நாம் யுத்தம் செய்து,   அவனை முந்திக் கட்டவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.   ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் அனேக வேளைகளில்  பலவீனர்களாய்  காணப்படுவதினாலும்,    கர்த்தர் நமக்குக் கிருபையாய் கொடுத்த ஆயுதங்களைப்  பயன்படுத்த அறியாததினாலும் தோற்றுப்போய் விடுகிறோம். ஆகையால்,   ராஜாக்கள் யுத்தம் செய்கிற இந்த நாட்களில்,   கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் நல்ல போர்ச் சேவகர்களாய்  காணப்படக் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை பாராட்டுவாராக.      

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar