உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் (Your sorrow will be turned into joy).

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள்,    உலகமோ சந்தோஷப்படும்,  நீங்கள் துக்கப்படுவீர்கள்,    ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்(யோவான் 16:20).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/td6ECL5vVFo

இயேசு,    சிலுவை மரணத்திற்குள் கடந்து செல்லுவதற்கு முன்பு,    கொஞ்சக் காலம் என்னை நீங்கள் காண்பதில்லை,    மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று தன்னுடைய சீஷர்களோடு கூறினார்.  அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடைப்பட்ட காலத்தைக் குறித்து ஆண்டவர் அப்படியாகக் கூறினார். ஆனால் சீஷர்களால் அதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர்கள் தங்களுக்குள்ளே ஆண்டவர் சொல்லுவதின் கருத்தென்ன,    நமக்கு விளங்கவில்லையே என்று பேசிக்கொண்டார்கள். அப்போது இயேசு கொஞ்சக் காலம் நீங்கள் என்னைக் காணாமல் இருக்கும் போது,    நீங்கள் அழுது புலம்புவீர்கள் என்றார். ஆண்டவரோடு காணப்பட்ட நேரடி உறவு முறிந்துபோகப் போகிறது,    புறஜாதிகள் மூலம் ஆண்டவர் அவமானப்படுத்தப்படுகிறார்,    எதிரிகள் ஜெயங்கொள்ளப் போகிறார்கள்,    நம்பிக்கை அற்றுப்போகிறது,    தங்களுடைய எஜமான் சிலுவையில் அறையப்படுகிறார்,     இவைகள் சம்பவிக்கும் போது சீஷர்கள் அழுது புலம்புவார்கள் என்றும் துக்கப்படுவார்கள் என்றும் ஆண்டவர் கூறினார். ஆனாலும் அந்த அழுகையும் துக்கமும் நிரந்தரமானதல்ல,    மூன்றாவது நாள் ஆண்டவர் உயிர்தெழுந்து அவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் துக்கங்கள் சந்தோஷமாய் மாறும் என்று இயேசு கூறினார். அப்படியே உயிர்தெழுந்த ஆண்டவரைக் கண்ட சீஷர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள்.


கர்த்தருடைய பிள்ளைகளே,    உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற அழுகையும்,    துக்கமும் நிரந்தரமானவை அல்ல. அழ ஒரு காலமுண்டு என்றால் நகைக்கவும் ஒரு காலமுண்டு,    ஒரு சாயங்காலம் வரும் என்றால் நிச்சயமாக விடியற்காலமும் வரும். மனுஷர்கள் உங்கள் தலையின்மேல் ஏறிப்போயிருக்கலாம்,    தீயையும் தண்ணீரையும் நீங்கள் கடந்துவந்திருக்கலாம்,    ஆனால் செழிப்பான இடத்தில் உங்களைக் கொண்டுவந்து விடுவார். ஆண்டவர் உங்களுக்குச்  சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும்,    துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும்,    ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் தருவார். வியாதிகளின் நிமித்தமும்,    கடன் தொல்லைகள் நிமித்தமும்,    பிரிவினைகளின் நிமித்தமும்,    நம்பினவர்கள் கைவிட்டதின் நிமித்தமும்,    கர்ப்பத்தின் கனிகள் கிடைக்காததின் நிமித்தமும்,    திருமணங்களில் காணப்படுகிற  தடைகளினிமித்தமும் துக்கமும் துயரமும் உங்களைப் பிடித்திருக்கலாம். மரித்தேன்,    ஆனாலும் சதாகாலங்களும் உயிரோடிருக்கிறேன் என்ற உயிர்தெழுந்த ஆண்டவர் உங்கள் துக்கங்களைச் சந்தோஷமாக மாற்றுவார். அவர் ஒருநாளும் உபத்திரவப்படுகிறவர்களின்  உபத்திரவத்தை அற்பமாக்க எண்ணுவதில்லை. அவர் தாமே சிலுவையில் பாடுபட்டதினாலே உங்கள் வேதனைகளையும் பாடுகளையும் முழுவதுமாக அறிந்தவர். அவர் துயரப்படுகிற உங்களுக்கு அற்புதம் செய்து ஆறுதல் படுத்துவார்.  சங்கீதக்காரனைப் போல,    என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்,    என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு,    மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர். என் தேவனாகிய கர்த்தாவே,    உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்,    என்று நீங்களும் ஆண்டவரைத் துதிக்கிற நாட்கள் துரிதமாய் வருகிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae