பெரிய வீட்டிலுள்ள பாத்திரங்கள் (Vessels in a large house).

2 தீமோ 2:20,21 ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0JgzAXfzLDo

நம்முடைய வீடுகளில் வைத்திருக்கும் ஒவ்வொரு பாத்திரங்களும் வெவேறு பயன்களை கொடுக்கிறது. சோறு வைப்பதற்கு ஒரு வகையான பாத்திரமும், குழம்பு கூட்டுகள் வைப்பதற்கு ஒரு வகையான பாத்திரங்களும், அதுபோல இட்லி தோசை போன்றவைகளை சமைக்க வேறு விதமான பாத்திரங்களும் உபயோகப்படுத்துகிறோம். நோவாவின் பேழைக்குள் பலவிதமான ஜோடி ஜோடியான மிருகங்களும், பறவைகளும், விலங்குகளும் காணப்பட்டது. அதுபோல சபை என்னும் பெரிய வீட்டில் பல விதமான பாத்திரங்கள் அதாவது பலவிதமான கர்த்தருடைய வேலையை செய்கிற விசுவாசிகள் காணப்படுகிறார்கள். சிலர் கனத்துக்குரிய பொன் வெள்ளியைப்போல இருந்தாலும், சிலர் மரமும் மண்ணுமான பாத்திரங்களை போல கனவீனத்திற்குமானவைகள் போல இருந்தாலும், எல்லாரும் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்ட பின்பு அனைவரும் கனத்துக்குரிய பாத்திரவான்களாய் காணப்படுகிறார்கள் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது.

ஆகையால் சபை என்னும் பெரிய வீட்டில் என்ன வேலையை செய்தாலும் எல்லாரும் கனத்துக்குரியவர்கள் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். சபைகளில் மேடைகளில் நின்று பிரசங்கம் செய்கிறவர்களும், பாடுகிறவர்களும், இசை கருவிகளை வாசிக்கிறவர்கள் மாத்திரம் கனத்துக்குரியவர்கள் என்று நினைக்க கூடாது. இந்த பணியை தவிர மறைமுகமாக ஆலயத்தை தூய்மைப்படுத்துகிறவர்களும், நாற்காலியை போடுகிறவர்களும், எல்லாருக்காகவும் ஜெபிக்கிறவர்களும், எல்லா உபகரணங்களையும் தூக்கிக்கொண்டு ஆராதனையை ஆயத்தப்படுத்துகிறவர்களும் வேறெந்த கர்த்தருடைய வேலையை செய்கிறவர்களும் கனத்துக்குரியவர்கள் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய உடலில் வெளிப்புறமாக தோற்றமளிக்கிற நம் கைகள், கால்கள், கண்கள், காதுகள் போன்றவை கனத்துக்குரியவைகள்; இந்த எல்லா உறுப்புகளும் மிகவும் முக்கியமானவை. அதுபோல நம்முடைய உடலில் வெளிப்புறமாக தோற்றமளிக்காத மற்ற உறுப்புகள் காணப்படுகிறது. நம் உடலுக்குள் இருக்கும் இருதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற எல்லா உறுப்புகளும் மிகவும் கனத்துக்குரியவைகள் மற்றும் முக்கியமானவைகள். ஆகையால் நம்முடைய சபையிலிருக்கும் பொன் வெள்ளி மரமும் மண்ணுமான எல்லா பாத்திரங்களும் முக்கியமானவைகள். சபை என்னும் பெரிய வீட்டில் எந்த வேலை செய்கிறோம் என்பதை விட அதை எப்படி செய்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியம். மனுஷர் பார்க்கவேண்டும் என்று பார்வைக்கு ஊழியம் செய்யாமல், எல்லா வித ஒழுக்கத்தோடும், கீழ்ப்படிதலோடும், முழு இருதயத்தோடு செய்யும் எந்த ஒரு கர்த்தருடைய வேலையினிமித்தமும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது. அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும் (லுக் 6:43,44) என்று வசனம் கூறுகிறது. நீங்கள் கர்த்தருடைய பெரிய வீட்டில் செய்யும் எந்த ஒரு நல்ல வேலையும் நல்ல கனியை கொடுக்கும். நல்ல கனியை கொடுக்கிற பாத்திரமாக கர்த்தருடைய வீட்டில் காணப்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org