மட்டாய்த் தண்டியும்(Correct me but with mercy).

கர்த்தாவே,    என்னைத் தண்டியும், ஆனாலும்,    நான்  அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலேஅல்ல,    மட்டாய்த் தண்டியும் (எரே. 10:24).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/BljAIAkEBd4

எரேமியா தீர்க்கதரிசி தன்னை யூதாவின் குடிகளின் ஸ்தானத்தில் வைத்து,    அவர்களுக்கு முன்பாக கர்த்தர் வைத்திருக்கிற  நியாயத்தீர்ப்பையும் தண்டனையையும் நினைத்து,    உம்முடைய இரக்கத்தை வெளிப்படுத்தி மட்டாய் அவர்களைத் தண்டியும் என்று ஏறெடுத்த ஜெபமாய் காணப்படுகிறது. தண்டனையை யாரும் விரும்புவதில்லை. எத்தனை தவறுகள் செய்தாலும் அதை மறைப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் முயலுவோமே  ஒழியத் தவற்றை ஒத்துக்கொள்ளுவதில்லை. தன் பிழைகளை உணருகிறவன் யார்? என்று வேதம் கேட்கிறது. உலகத்தில் காணப்படுகிற ஜனங்கள் அவ்வாறு காணப்படுகிறார்கள் என்றால் வேதத்தையறிந்த கர்த்தருடைய பிள்ளைகளும் அவ்வண்ணமாகக் காணப்படுகிறார்கள். தங்கள் தவறுகளை ஒத்துக் கொள்ளாதவர்கள்  அதற்குரிய தண்டனையை எப்படி ஏற்றுக்கொள்ளுவார்கள். எரேமியா தன்னுடைய ஜனங்களோடு தன்னையிணைத்து மட்டாய் எங்களைத் தண்டியும் என் வேண்டுவது ஆச்சரியமாய் காணப்படுகிறது. அதின் விளைவு  இன்றைக்கும் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

தகப்பன் சிட்சியாத புத்திரன் உண்டோ? சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்.  சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி,    இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டான். இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததான படியினால் அவர்  இஸ்ரவேலை வாதித்தார்.  தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்,    இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்,    வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான். கர்த்தர் மூன்று காரியங்களை அவனுக்கு முன்பாக வைத்தார். மூன்று வருஷத்துப் பஞ்சம்,    பகைஞரின் பட்டயம் பின்தொடர தாவீது அவன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்றுமாதச் சங்காரம்,     அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய  எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோய்,    இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் கூறினார். தாவீது கொடிய  இடுக்கண்ணில் அகப்பட்டிருக்கிறேன்,    இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக,    அவருடைய இரக்கங்கள் மகா பெரியது என்றான். கர்த்தர் தண்டிக்கும் போது கூட இரக்கத்தோடு தண்டிக்கிறவர் என்பதை அறிந்து தாவீது அறிக்கையிட்டான். அவன் கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவனாக மாறினான்.

கர்த்தருடைய பிள்ளைகளே,    கர்த்தர் உங்களைத் தண்டிக்கும் போது,    அது உங்கள் மேல் கொண்ட அன்பின் நிமித்தம் என்பதை மறந்து போகாதிருங்கள். என் மகனே,    கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே,    அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.  கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து,    தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள் என்று நீதிமொழிகள் 3:11,   12ல் எழுதப்பட்ட வார்த்தைகளை மேற்கோள் காட்டி பவுல் எபிரேய நிருபத்தில் எழுதும் போது,    கர்த்தருடைய  சிட்சை அவருக்கு அடங்கி நடக்கவும்,    அவருடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாய் காணப்படவும் பிரயோஜனமுள்ளது என்று எழுதினார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் துக்கமாய்க் காணும்,    ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். ஆகையால் கர்த்தர் கடிந்து கொள்ளும் போதும்,    தண்டிக்கும் போதும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அது நீதியின் பலனைத் தந்து நித்தியத்தில் உங்களைக் கொண்டு சேர்க்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae