கர்த்தருடைய கண்களும்,     இமைகளும் (God’s eyes and eyelids).

கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார், கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது, அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது(சங.11:4).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zOxDG6AmzD0

கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவுகிறது,     அது நல்லவர்களையும் பொல்லாதவர்களையும் காண்கிறது. ஒவ்வொரு மனிதர்களுடைய கிரியைகளையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். ஆகாப் ராஜா,     நாபோத்தை கொலைசெய்து அவனுடைய திராட்சைத் தோட்டத்தை எடுத்துக் கொண்டான். அதை யாரும் பார்க்கவில்லை என்பதாகக் கருதினான். ஆனால்,     கர்த்தருடைய கண்கள் அதைக் கண்டது. ஆகையால் எலியா தீர்க்கதரிசி அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்,     நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொன்னான். அப்பொழுது ஆகாப்  எலியாவை நோக்கி: என் பகைஞனே,     என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்,     கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய் என்றான். தாவீது ராஜா கூட உரியாவைக் கொன்று,     அவன் மனைவியாகிய பத்சேபாளை தன்னுடைய மனைவியாக்கிக் கொண்டான். அதை ஒருவரும் அறியவில்லை என்பதாக அவனும் கருதினான். ஆனால் கர்த்தர் அதை நாத்தான் தீர்க்கதரிசிக்கு அறிவிக்க,     நாத்தான் தாவீக்கு அதை வெளிப்படுத்தினான். கர்த்தருடைய கண்களுக்கு மறைவாக நாம் ஒன்றையும் செய்யமுடியாது. ஆகையால் சிறு தவறுகளைக் கூட கர்த்தருடைய கண்கள் காண்கிறது என்ற உணர்வோடும் பயத்தோடும் கர்த்தருடைய ஜனங்கள் வாழ வேண்டும். நோவா தன் காலத்திலிருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்,     அவன் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆகையால் அவனுக்குக் கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. முழு உலகமும் வெள்ளத்தினால் அழிந்த வேளையில்,     நோவாவும் அவன் குடும்பமும் கர்த்தருடைய கிருபையினால் பாதுகாக்கப்பட்டது. சூலமித்தியும் நான் மணவாளனுடைய  கண்களில் கடாட்சம் பெற்றேன் என்பதாகக் கூறினாள். நீங்கள் நீதிக்குரிய ஜீவியம் செய்யும் போது கர்த்தருடைய கண்கள் அதையும் காண்கிறது. 

கர்த்தருடைய கண்கள் நம்மைக் காண்கிறது,     ஆனால் அவருடைய இமைகள் நம்மைச் சோதித்தறிகிறது. கண்களும் இமைகளும் ஒத்த வார்த்தைகளாய் காணப்படுகிறது. இமைகள் கண்களை மூடி பாதுகாக்கிறது,     கண்கள், இமைகளால் மூடப்படும் போது மட்டும் இமைகளின் தோற்றம் வெளிப்படும்.  நம்மைக் காக்கிற தேவன் உறங்குவதுமில்லை,     தூங்குவதுமில்லை என்று வேதம் கூறுகிறது. அவருடைய கண்களும் இமைகளும் எப்போதும் திறந்தேயிருக்கும். நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற சிறியச் சிறியக் காரியங்களைக் கூட அவர் சோதித்தறிகிறார்,     நம்முடைய சிந்தையில் தோன்றுகிற கசப்பான எண்ணங்களை அவர் அறிகிறார். ஆகையால் சங்கீதக்காரனைப் போல,     கர்த்தாவே,     நீர் என்னை ஆராய்ந்து,     அறிந்திருக்கிறீர்,     என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்,     என் நினைவுகளைத்  தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்,      என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும் என்ற உணர்வோடு ஜீவியுங்கள். அப்போது கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae