நாளைக்கு அற்புதங்களைச் செய்வார் (He will do miracles tomorrow)

யோசு 3:5. யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LwC1Q5cvm2g

பரீட்சைகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கு மாணவ மாணவிகள் தங்களை பல மாதங்களாக ஆயத்தம்பண்ணுவார்கள். பரீட்சை ஆரம்பிக்கும் கடைசி மணித்துளிகள் வரை மாணவ மாணவிகள் படித்துக்கொண்டே இருப்பார்கள். அதுபோல, வேலைக்காக நேர்முக தேர்விற்க்கு கடந்து செல்லும் நபர்கள், அந்த வேலையை எப்படியாவது பெற்றுக்கொள்ளுபடியாக தங்களை ஆயத்தம் பண்ணுவார்கள். அதுபோல தான் கர்த்தர் உங்களுக்கு அற்புதத்தை செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்களென்றால் இன்றைக்கு உங்களை பரிசுத்தமாக்கி, அற்புதத்தை பெற்றுக்கொள்ள ஆயத்தமாகுங்கள்.

யோர்தானை கடந்து எரிகோவை மேற்கொள்ளவேண்டுமென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை ஆயத்தம் பண்ண வேண்டும். யோர்தானை கடப்பது எளிதான காரியம் அல்ல; காரணம் அதன் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டோடிக்கொண்டு இருக்கிறது. சத்துரு வெள்ளம் போல நமக்கு எதிராக வருவான் என்றும் வேதம் சந்துருவின் தந்திரங்களை நமக்கு அறிவிக்கிறது. அதுபோல எரிகோவை சுதந்தரிப்பதும் எளிதல்ல. காரணம் அந்த பட்டணத்தை சுற்றிலும் மிகப்பெரிய மதில்கள் காணப்படும்; அதற்குள்ளாக தான் எரிகோ பட்டணம் காணப்பட்டது. ஜனங்களெல்லாம் திகைத்துப்போய், எப்படி இந்த யோர்தானையும் கடந்து, எரிகோவை பிடிக்க போகிறோம்; இது சுலபமான காரியம் அல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவ மனிதனாகிய யோசுவா ஜனங்களிடம் தேவ சித்தத்தை சொல்லுகிறார். யோர்தானை கடந்து எரிகோவை மேற்கொள்ளுவது சுலபம், மிகவும் எளிது. அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், இன்று உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்பதாக.

நாமெல்லாருக்கும் நம்முடைய வாழ்வில், கடக்க முடியாத யோர்தான், சுதந்தரிக்க முடியாத எரிகோக்களை போல தடைகளும் இன்னல்களும் வருவதுண்டு. இதை மேற்கொள்ளுவது இயலாத காரியம் என்று நம்பிக்கையற்ற சூழ்நிலைக்கு அநேக வேளைகளில் வந்து விடுகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவ ஜனங்கள் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய நாளைய அற்புதங்கள், இன்றைக்கு நம்முடைய பரிசுத்தமாக்குதலை பொறுத்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நம்முடைய கர்த்தருக்கு கடினமானது என்று ஒன்றும் இல்லை. அவருக்கு முன்பாக யோர்தான் உலர்ந்துபோகும். அவருக்கு முன்பாக எரிகோ தரைமட்டமாகும். அவரால் செய்ய கூடாத காரியம் ஒன்றுமில்லை.

அநேக பிரச்சனைகளுக்காக விடாமல் உபவாசம் இருக்கிறேன், ஜெபிக்கிறேன் என்பதோடுமட்டுமல்ல, குறிப்பாக, இன்றைக்கு உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். விடமுடியாத பாவங்களை விட்டு, இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படுங்கள். நானே உங்களை பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஒரு இராணுவ வீரன் எப்படி யுத்தத்திற்கு போகும் முன் தன்னை அநேக பயிற்சிகளினால் ஆயுதமாக்கிகொள்வானோ, அதுபோல நாளைக்கு கர்த்தர் உங்களுக்கு கொடுக்கப்போகும் அற்புதத்திற்காக ஆயத்தமாகி கொள்ளுங்கள். இன்றைக்கு உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்கிற பாளையம் எவ்வளவு நீளமாக, அகலமாக, உயரமாக இருந்தாலும் எல்லா இடத்தையும் பரிசுத்தமாக்கி கொள்ளுங்கள். உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது (உபா 23:14) என்ற வசனத்தின்படி, இன்றைக்கு உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org