நிச்சயமான கிருபை (Sure mercies).

உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும், தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நிந்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன் (ஏசாயா 55:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0JcovEJvX2o

ஆடுகளுக்குப் பின்னால் அலைந்துகொண்டிருந்த தாவீதைக் கர்த்தர் தெரிந்துகொண்டு, அவனை அபிஷேகித்து அவனை சமஸ்த இஸ்ரவேலின் மேல் ராஜாவாக உயர்தி, அவனுக்கு நிச்சயமான கிருபைகளைக் கொடுத்து, அவனோடு நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அந்த நிச்சயமான கிருபைகள் என்ன என்பதை 2 சாமு. 7:16-ல் எழுதப்பட்டிருக்கிறது. உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.

அவனுடைய வீடு என்றென்றைக்கும் ஸ்திரப்படும். அவனுடைய ராஜ்யம் என்றென்றும் நிலைக்கும். அவனுடைய சிங்காசனத்தில் இருந்து நிரந்தரமாக ஆட்சி செய்கிற ஒருவர் இருப்பார். இந்த மூன்று ஆசீர்வாதங்களும் தாவீதின் வாழ்க்கையில் அப்படியே நிறைவேறினது. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு(மத். 1:1) என்று புதிய ஏற்பாடு துவங்குகிறது. இயேசு தாவீதின் குமாரனாகத் தோன்றினதால், தாவீதுக்குக் கர்த்தர் அருளின நிச்சயமான கிருபை அப்படியே முழுமையாய் நிறைவேறினது. இயேசுவின் ராஜ்யம் நித்திய ராஜ்யம். அந்த ராஜ்யத்திற்கு முடிவேயில்லை. சாதாரண ஆட்டிடையனுக்குக் கர்த்தரால் கிடைத்த மிகப்பெரிய கனமாகக் காணப்படுகிறது. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாக நம்முடைய முன்னோர்கள் யார் என்றால் நம்மில் அனேகர் அறிவதில்லை. ஆனால் இயேசுவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொள்ளும்போது, நமக்குத் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அதிகாரங் கொடுக்கிறார் (யோவான் 1:12). தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை கர்த்தர் நமக்கும் வாக்களிக்கிறார்.

கர்த்தர் தாவீதுக்கு நிச்சயமான கிருபைகளைக் கொடுத்து அதை நித்திய உடன்படிக்கையாகச்  செய்ததின் காரணம் என்ன?  மோசே, யோசுவாவின் நாட்களில் கர்த்தர் ஜனங்கள் நடுவில் வாசம் பண்ணுவதற்து ஆசரிப்பு கூடாரத்தை ஸ்தாபிக்கும்படிக்கு கூறினார் (யாத். 25:8). அவர்கள் நாட்களுக்குப் பின்பு, நியாதிபதிகள் சுமார் நானூற்றைம்பது வருடங்கள் நியாயம் விசாரித்தார்கள் (அப். 13:20). அவர்கள் தேவனுடைய வாசஸ்தலத்தைக் குறித்த கவலையில்லாதவர்களாய் காணப்பட்டார்கள். அதன் பின்பு சமஸ்த இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் நாற்பது வருடங்கள் அரசாண்டான். ஆனால் அவனுக்குள்ளும் தேவனுடைய வாசஸ்தலத்தைக் குறித்தும், கர்த்தருடைய பெட்டியைக் குறித்தும் கரிசனையில்லை. ஆனால் இரண்டாவது ராஜாவாக தாவீது வந்தபின்பு அவனுடைய எண்ணம் ஏக்கம்  எல்லாம் கர்த்தர் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தைக் கட்டவேண்டும் என்பதாய் காணப்பட்டது. அது அவனுடைய வைராக்கிய வாஞ்சையாய் காணப்பட்டது. அவனால் கட்டமுடியவில்லை என்றாலும் ஆலயத்திற்காக எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தி வைத்தான். ஆகையால் கர்த்தர் அவனுக்கு நிச்சயமான கிருபைகளை, ஆசீர்வாதங்களை அருளி, அவனோடு நித்திய உடன்படிக்கையையும் ஏற்படுத்தினார். இன்றும் அந்த ஆசீர்வாதங்கள் தொடர்ந்து வருகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே! கர்த்தர் இன்று தாவீதுக்கு அருளின நிச்சயமான ஆசீர்வாதங்களை உங்களுக்குத் தந்து, உங்களோடு நித்திய உடன்படிக்கை செய்து, உங்கள் தலைமுறைகளை ஆசீர்வதிக்க விரும்புகிறார். கர்த்தருடைய வாசஸ்தலத்தை, ஆலயத்தைக் குறித்த வாஞ்சை உங்களுக்குள்ளாகக் காணப்படுகிறதா? நீங்கள் ஆராதிக்கிற ஆலயம் எல்லாவிதங்களிலும் கட்டப்படவேண்டும் என்ற ஏக்கம் உங்களில் காணப்படுகிறதா? ஆலயத்தில் வசனம் என்னும் ஆகாரம் காணப்படவேண்டும் என்ற விருப்பம் உண்டா?  உத்தமமாய் நீங்கள் ஆராதிக்கிற இடங்களில் விதைக்கிறீர்களா? சபை கூடிவருதலை கனம் பண்ணுகிறீர்களா? சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்லவேண்டும் (எபி. 10:25) என்று வேதம் எச்சரிக்கிறது. உங்களை நடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிந்து அடங்குவதுண்டா? உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள், அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே (எபி. 13:17). இவற்றையெல்லாம் நீங்கள் உத்தமமாய் செய்யும் போது, கர்த்தர் நிச்சயமான கிருபைகளையும் நித்திய ஆசீர்வாதங்களையும் உங்களுக்குத் தந்து, உங்களையும் உங்கள் சந்ததிகளையும் ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Appa Unthan Thayavu, Uthamiyae Vol. 7