கடமையில் தவறிய ஆதாம் (Adam failed to perform his duty).

தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து,     அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் (ஆதி. 2:15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5SxHOSMVvdc

தேவன் ஆதாமைச் சிருஷ்டித்த பின்பு அவனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து   வைத்தார். ஏதேன் என்பதற்கு மனமகிழ்ச்சியின் இடம் என்பது அர்த்தமாகும். பூமியின் சொர்க்கமாய் ஏதேன் அந்நாட்களில் காணப்பட்டது. பின்பு  ஆதாமுக்குத் தோட்டத்தைப் பண்படுத்தி அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற கட்டளையையும் கொடுத்தார். ஒரு விவசாயி தன் நிலம் அதிக பலன்களைத் தருவதற்கு,     அதைக் கொத்தி,     விதை விதைத்து,     தண்ணீர்பாய்ச்சி,     எருபோட்டு,     களைபிடுங்குவதைப் போல ஆதாமும் ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்த அனுதினமும் வேலை செய்ய வேண்டும். விவசாயி இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து நிலத்தைக் கவனிக்கவில்லையெனில் கொஞ்ச நாட்களில் நிலம்  பிரயோஜனமற்றதாக போய்விடும். அடுத்ததாக விவசாயி நிலத்தின் கனிகளை மிருகங்களிடத்திலிருந்தும்,     திருடர்களிடத்திலிருந்தும்  பாதுகாப்பது போல,     ஆதாமும் ஏதேன்  தோட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். ஆதாம் தோட்டத்தைக் காக்கிற வேலையில் முழுவதுமாய் தோற்றுப் போனான். ஆகையால் சர்ப்பம் தோட்டத்திற்குள் வந்தது,     ஏவாளைப் பாவம் செய்யும்படிக்குச் செய்தது,     பின்பு ஆதாமும் பாவம் செய்தான். அதனிமித்தம் ஆதாமுக்குள் பிறக்கிற அத்தனை பேரும் பாவத்தில் பிறக்க வேண்டியதாயிற்று.

கர்த்தருடைய பிள்ளைகளே! நம் தனிப்பட்ட வாழ்க்கை ஒரு தோட்டத்திற்கு ஒப்பாகக் காணப்படுகிறது. மணவாட்டியாகிய  சூலமித்தியைப் பார்த்து,     என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும்,     மறைவு கட்டப்பட்ட நீரூற்றும்,     முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய் என்று மணவாளன் கூறுவதையும்,     வாடையே! எழும்பு,     தென்றலே! வா,     கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு,     என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து,     தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக என்று மணவாட்டி கூறுவதையும் உன்னதப்பாட்டில் வாசிக்கமுடிகிறது. நம் தனிப்பட்ட ஜீவியத்தை நல்ல பழக்கவழக்கங்களால் பண்படுத்தி,     எதிரி நுழையாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதுபோல குடும்ப வாழ்க்கை என்பதும் ஒரு தோட்டத்திற்கு ஒப்பாகக் காணப்படுகிறது. முதல் திருமணம் ஒரு தோட்டத்தில் தான் தேவனால் நடத்தி வைக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும்,     வற்றாத நீரூற்றைப்போலவும் இருக்க வேண்டும் என்பது கர்த்தருடைய விருப்பம். ஏதேன் தோட்டத்தைப்  பண்படுத்தக் கர்த்தர் கட்டளைக் கொடுத்தது போல,     ஒவ்வொரு புருஷனும் மனைவியும் பரஸ்பர திருமண உறவுகளைப் பண்படுத்தி வளர்க்க வேண்டும். அதுபோல குடும்பங்களில் மூன்றாவது நபர்களின் தலையிடுதலுக்கும்,     உறவினர்களின் தலையிடுதலுக்கும்,     பிசாசின் கிரியைகளுக்கும் இடம் கொடாமல் பாதுகாக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். சபையும் கூட தேவனுடைய பண்ணையாய் காணப்படுகிறது. ஒரு பண்ணையில் மரஞ்செடி கொடிகள் வளர்ந்து கனிகொடுப்பது போல,     விசுவாசிகள் கர்த்தரில் வளர்ந்து சுவையான கனிகளைக் கொடுக்க வேண்டும். நமக்குள் காணப்படுகிற அன்பின் ஐக்கியத்தையும் சகோதர சிநேகத்தையும் பண்படுத்தி வளர்க்கிறவர்களாய் காணப்பட வேண்டும். சபையின் எல்லைக்குள் சத்துரு புகுந்து விடாதபடிக்கு விசுவாசிகள் மதிலாய்   காணப்படவேண்டும். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்,     அப்போது அவன் உங்களை   விட்டு ஓடிப்போவான் என்று வசனம் கூறுகிறது. ஒருநாளும் ஆதாமைப் போல உங்கள் கடமையிலிருந்து தவறிவிடாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae