பொறுமையை இழந்துவிடாதிருங்கள் (Don’t lose patience).

எபி 10:36. நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5H3LMESmIoM

கிறிஸ்துவ வாழ்க்கையில் எப்பொழுதும் நாம் விரும்புகிற காரியம் உடனுக்குடன் நடந்துவிடுவதில்லை. தேவன் சில நேரங்களில் உடனுக்குடன் பதிலளிக்கிறார். சில நேரங்களில் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள கால தாமதம் ஏற்படுகிறது. கால தாமதம் ஏற்படுகிறது என்றால், தேவன் உங்களை அதிகமாய் நேசிக்கிறார் என்பதையும், உங்கள் வாழ்க்கையில் அவருடைய திட்டம் பெரியது என்பதையும் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நொடிப்பொழுதில் வருகிற ஆசீர்வாதத்தை விட, காத்திருந்து பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதம் மிகவும் பெரியது.

அவசரமாக தன் உறவினருக்கோ, நண்பர்களுக்கோ, வேறெந்த நெருங்கிய நபர்களுக்கோ இரத்த தானம் பண்ணவேண்டும் என்றால், அநேகர் இரத்த தானம் செய்ய முன்வருவார்கள். ஆனால் வியாதிபட்டு மரித்துக்கொண்டிருந்தாலும், இயேசு இன்னும் நான்கு நாள் கழித்து போகலாம் என்று சொல்லலாம். சீஷர்கள் ஆண்டவரே நாம் அங்கே போகலாம் என்று சொன்னாலும், உங்கள் வேளை எப்பொழுதும் வந்திருக்கிறது; ஆனால் என் வேளை இன்னும் வரவில்லை என்று இயேசு சொல்லிவிடுவார். இயேசுவின் தாயாரே நேரடியாக வந்து திராட்சைரசம் செலவழிந்துபோனது என்று சொன்னாலும், ஸ்திரீயே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லிவிடுவார். யோபுவை குணப்படுத்தவும், அவனை முன்னிருந்ததை விட இரண்டு மடங்கு ஆசீர்வதிக்கவும், ஆண்டவருக்கு ஒரு நிமிடம் போதும்; யோபுவின் நான்கு நண்பர்களும் வந்து வாதாடும் அளவிற்கு அவர் அனுமதிக்காமலும் இருந்திருக்கலாம். இருந்தாலும் ஆணடவர் யோபுவின் பொறுமையை சோதித்தறிந்தார். இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே (யாக் 5:11) என்ற வசனத்தில் யோபுவின் பொறுமையை குறித்து குறிப்பாக ஆவியானவர் எழுதிவைத்திருப்பது நமக்கெல்லாம் உற்சாகமளிக்கிறதாய் காணப்படுகிறது.

மோசே மலையின் மேல் ஏறி நாற்பது நாள் ஆகிவிட்டது என்று ஆரோனும், இஸ்ரவேல் ஜனங்களும் பொறுமையை இழந்து தவறான தீர்மானங்களை எடுத்தார்கள். சாமுவேல் வர காலதாமதம் ஆகிறது என்று சவுல் இராஜா தவறான தீர்மானம் எடுத்தான். இதுபோல, வேலையில் உயர் அதிகாரிகள் கசப்பாக பேசிவிட்டார்கள் என்ற மன அழுத்தத்தில் பொறுமையை இழந்து, வேலையையும் இழந்து, அநேக நாட்களாக வேலை இல்லாமல் இருந்த நபர்கள் அநேகம் உண்டு. குடும்பத்தில் மாமியார் கடிந்துகொண்டார் என்பதற்காக, பொறுமையை இழந்து தவறான தீர்மானங்களை எடுக்கிற பெண்வீட்டார்களும் உண்டு. பொறுமையை இழந்து தவறான தீர்மானங்களை எடுக்கிறவர்களாக தேவ ஜனங்கள் காணப்படலாகாது. கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது (புலம் 3:26) என்று வசனம் கூறுகிறது. வாக்குத்தத்தம் தாமதமாகிற நாட்கள், நாம் பொன்னை போல மாறுகிற நாட்கள் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார் (பிலி 1:5) என்ற நம்பிக்கையோடு பொறுமையை இழந்துவிடாமல் கர்த்தருக்கு காத்திருங்கள். அப்பொழுது நீங்கள் பொன்னைப்போல மதிப்புள்ளவர்களாக மாறுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org