தாவீது தேவனிடத்தில் தயவு பெற்றான் (David received the favour from God).

இவன் தேவனிடத்தில் தயவு பெற்ற படியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணினான் (அப். 7:46).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gy2vHZkLZGw

தேவதயவைப் பெற்ற ஒருவன் வாழ்க்கையில் உயர்ந்திருப்பான். ஒரு நாள் முட்செடியில் தேவன் எழுந்தருளி தன் தயவை மோசேக்கு காண்பித்தார். அந்த தயவு அவனை பார்வோனுக்கு முன்பாக தைரியமாய் நிற்கும் படிக்குச் செய்தது. சுமார் இருபது லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களை  பார்வோனுடைய கையிலிருந்து விடுவித்து,  வனாந்தரத்தில்  நடத்திக் கொண்டுவந்து, கானானின்  எல்லையண்டை  கொண்டு வரும்படிக்குச் செய்தது. ஒரு பெரிய சபையை இந்த பூமியில் நடத்திய முதல் மனிதன் மோசேயாய் காணப்படுகிறான். அதே தேவதயவு அதற்கு முன்பாக முற்பிதாவாகிய  யோசேப்பிற்கு வெளிப்பட்டது,  அவனுடைய சிரசின் மேலும்,  உச்சந்தலையின் மேலும் இறங்கினது. ஆகையால் தகப்பனுடைய  முதற்பலனுக்குரிய சேஷ்ட புத்திரபாக ஆசீர்வாதம்  அவனுக்குக் கிடைத்தது. எகிப்தின் அதிபதியாக பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தப்பட்டான். தேவனுடைய தயவுள்ள கரம் எஸ்றாவோடு இருந்ததினால் ராஜாவின் கண்களில் அவனுக்குத்  தயவு கிடைத்தது. நெகேமியாவோடு கர்த்தருடைய தயவுள்ள கரம் இருந்ததால் அவன் வேண்டிக்கொண்ட பொருட்களை ராஜா அவனுக்குக் கட்டளையிட்டான். மரியாளுக்குக் கர்த்தருடைய தயவு வெளிப்பட்டதினால் மனுஷ குமாரனைப் பெற்றெடுக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆட்டிடையனாய் காணப்பட்ட தாவீதும் கூட, தேவனுடைய தயவைப் பெற்றதினால் சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாகும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்தது. கர்த்தருடைய பிள்ளைகளே, அதே தேவதயவு உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும். அப்போது நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள். 

ஆண்டவர் கூறினார்,    சிறுமைப்பட்டு,    ஆவியில் நொறுங்குண்டு,    என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே தயவோடு கண் நோக்குவேன் என்பதாக. தேவதயவைப் பெற்றுக்கொள்ளுவதற்குத் தாழ்மையோடும்,    வசனத்திற்கு நடுங்குகிறவர்களாயும் காணப்படுங்கள். வசனம் உங்கள் வாழ்க்கையின் அளவுகோலாய் காணட்டும். தாழ்மையுள்ளவர்களுக்கு  கர்த்தர் கிருபையளிக்கிறார் என்றும் வேதம் கூறுகிறது. தன்னைத்தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான். தாவீதிற்கு தேவதயவு வெளிப்பட்டு அவன் அரசனாய் மாறியபின்பு,    அவன் கர்த்தருக்கு ஆலயத்தை கட்ட வேண்டும் என்று விரும்பி,    அதற்காக விண்ணப்பம் பண்ணுகிறவனாய் காணப்பட்டான். அது அவனுடைய நன்றியுள்ள இருதயத்தை வெளிப்படுத்துகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே,    தேவதயவு உங்களை உயர்த்தும் போது,    நீங்களும் நன்றியுள்ளவர்களாய் காணப்படுங்கள். ஆனால் உசியா ராஜா பலப்பட்டபோது,    தனக்குக் கேடுண்டா குமட்டும்,    மனம் மேட்டிமையாகி,    தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்ததைப் போல,    நீங்களும் ஆசீர்வதிக்கப்பட்டு உயர்த்தப்படும் போது ஒருநாளும் மனமேட்டிமையடைந்து கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்துவிடாதிருங்கள். நேபுகாத்நேச்சாரைப் போல என்னுடைய மகிமை பிரஸ்தாபத்திற்கென்று நான் கட்டின மகாபாபிலோன் என்று கூறி,    இவை எல்லாம் என்னால் வந்தது என்று கூறிவிடாதிருங்கள்.  நாபாலைப் போல என்னுடையது,    ஏன் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேளாதிருங்கள். ஐசுவரிய வானைப் போல என் நிலம்,    என் விளைச்சல்,    என் களஞ்சியம்,    எனக்கு என்று நினைத்து விளையச் செய்கிற கர்த்தரை மறந்துவிடாதிருங்கள். அப்போது மேன்மேலும்  தேவதயவு உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும். நீங்கள் வாழ்ந்து  செழித்திருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae