தேவவரத்தை அனல்மூட்டி எழுப்பிவிடு (Stir up the gift of God).

2 தீமோ 1:6. இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yVVntW2ggaE

தீமோத்தேயுக்குள்ளாக அவனுடைய தாயின் மூலமாக வந்த விசுவாசம் ஏற்கெனெவே இருந்தது. இருந்தாலும், பவுல் தன்னுடைய உத்தம குமாரனாகிய தீமோத்தேயுக்கு ஒரு ஆலோசனையை சொல்லுகிறான், நான் உன் மேல் சில வருடங்களுக்கு முன்பாக கைகளை வைக்கும்போது உனக்கு உண்டான தேவ வரத்தினால் திருப்திகொண்டு விடாதே. உனக்கு கிடைத்த அந்த வரத்தை இனிமேல் நீ தான் அனல் மூட்டி எழுப்பிவிட வேண்டும் என்று நினைப்பூட்டுகிறேன் என்பதாக சொல்கிறான். அநேகர் நினைப்பதுண்டு நான் முதன் முதலாக பெற்றுக்கொண்ட அபிஷேகம் தான் கடைசிமட்டும் என் மேல் இருக்கும் அபிஷேகம் என்பதாக. பல வருடங்களுக்கு முன்பாக ஏதோவொரு சுவிசேஷ கூட்டங்களிலும், எழுப்புதல் கூட்டங்களிலும், முழு இரவு ஜெபங்களிலும், உபவாச கூட்டத்திலும் ஆவியானவரின் அபிஷேகத்தையும், தேவ வரத்தையும் பெற்றுக்கொண்ட பிறகு, அதை அனல் மூட்டமால் விட்டுவிடுவோம் என்றால் நம்முடைய வாழ்க்கை பின்மாற்றத்திற்குள்ளாக போகும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

என்றோ ஒருநாள் இயேசுகிறிஸ்து ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுத்துவிடுவார். அதோடு நாம் நின்று விடாமல் நமக்கு கிடைத்த தேவ வரத்தை அனல் மூட்டி எழுப்பிவிட வேண்டும். இயேசுகிறிஸ்து நெருப்பை பற்றவைக்கிறார்; அந்த நெருப்பு அணைந்து விடாமல் பற்றி பிடித்து எரியவைக்க வேண்டிய கடமை நமக்குள்ளாக தான் காணப்படுகிறது. எப்படி ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருக்க எரிபொருள் (Fuel) தேவையோ அதுபோல நமக்கு கொடுக்கப்பட்டிரும் தேவ வரத்தை அனல் மூட்ட ஆவிக்குரிய போஜனத்தை தினம் தோறும் நாம் நாடுகிறவர்களாக காணப்பட வேண்டும்.

உங்களுக்காக ஜீவ ஊற்று எப்பொழுதும் பொங்கி வர, நாள்தோறும் ஆவியானவருடைய ஆளுகைக்குள்ளாக உங்களை ஒப்புக்கொடுங்கள். தினந்தோறும் கிரமமான வேத வாசிப்பும், வசனங்களை அசைபோடும் பழக்கம் உங்கள் சுபாவமாகவும் மாற வேண்டும். ஜெப ஜீவியம் சீராக இருக்க முழு கவனத்துடன் இருக்க வேண்டும். ஒரு ஊழியக்காரர் சொன்னார் அதிகாலையில் எழுந்து ஒரு மணி நேரம் ஜெபிப்பது, சாயங்காலத்தில் இரண்டு மணி நேரம் ஜெபிப்பதற்கு சமம் என்பதாக. காலை ஜெபம் கிரமமாக இருக்கவும், அதிகாலையில் தேவனுடைய பிரசன்னத்தையும் வாஞ்சியுங்கள். பரிசுத்தத்தை வாஞ்சியுங்கள். தாழ்மையாய் இருங்கள். கீழ்ப்படிதலுள்ள சுபாவம் எப்பொழுதும் உங்களுக்குள்ளாக இருக்கட்டும். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வாஞ்சியுங்கள். ஆவிக்குரிய வரங்களை இன்னும் அதிகமாய் நாடுங்கள். தீர்க்கதரிசன வரத்தை நாடுங்கள். ஒரு நபர் ஆவிக்குரிய வரத்தை பெற்றுக்கொண்ட பிறகு, அதை அனல் மூட்டாமல் இருப்பாரென்றால், அது தேவனுடைய இராஜ்யத்திற்கும் மிக பெரிய இழப்பு, அந்த நபரின் வாழ்க்கையும் தேவ சித்தம் நிறைவேறாமல் முடியும் என்பதை அறிந்து, உங்களுக்கு உண்டான தேவவரத்தை நீங்கள் அனல்மூட்டி எழுப்பிவிடுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org