வானாதி வானங்களும் கொள்ளாதவர் (Heaven and the heaven of heavens cannot contain him).

II நாளாகமம் 6:18 தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/VBsRjFaaOv8

நம்முடைய தேவன் வானாதி வானங்களும் கொள்ளாதவர். விமானத்தில் செல்லும்போது மேகங்கள் வரை கடந்து சொல்லுகிறோம். அதற்கு மேலாக இருக்கும் வானத்திற்கு ஏறினவர் இதுவரைக்கும் ஒருவருமில்லை. நாம் காண்கிற வானத்தை காட்டிலும் இன்னும் அதை காட்டிலும் மேலுள்ள வானங்களெல்லாம் நம்முடைய பார்வைக்கும், அறிவுக்கும், புத்திக்கும் எட்டாதவைகள். இப்படிப்பட்ட வானாதி வானங்களும் கொள்ளாத தேவன் நம்முடைய தேவன். அதை நம்முடைய குருவி மூளையை கொண்டு விளங்கிக்கொள்ள முடியாது. அவ்வளவு பெரிய தேவன் நம்முடைய தேவன். ஆகையால் தான் சாலொமோன் சொல்லுகிறார் நம்முடைய தேவன் வானாதி வானங்களும் கொள்ளாதவர் என்பதாக. மோசே சொல்லுவார் இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள் (உபா 10:14) என்பதாக. நெகேமியா சொல்லுவார் நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது (நெகே 9:6) என்பதாக. தாவீது இராஜா சொல்லுவார் ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள் (சங் 68:33) என்பதாக. வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது (அப் 7:49) என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.

இப்படி வானாதி வானங்களும் கொள்ளாதவர் மனிதர்கள் மத்தியில் வாசம் செய்கிறார். இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர் துதிகள் மத்தியில் வாசம் செய்கிறார். மேலும் பவுல் ஒரு இரகசியத்தை சொல்லுகிறார். அது என்ன இரகசியம் என்றால், இவ்வளவு பெரிய தேவன், வானாதி வானங்களும் கொள்ளாதவர், மகிமையின் நம்பிக்கையாக கிறிஸ்துவானவர் உங்களுக்குள் வாசம் செய்கிறார் என்பதாக. இதை விளங்கிக்கொள்ளுவது எவ்வளவு பெரிய ஆச்சரியமாகவும் சிலாக்கியமாகவும் காணப்படுகிறது.

உங்களுக்குள் வாசம் செய்கிறவர் வானாதி வானங்களும் கொள்ளாதவர், சாலொமோனிலும் பெரியவர், யோனாவிலும் பெரியவர், தேவாலயத்திலும் பெரியவர். அவ்வளவு பெரிய தேவன் உங்களுக்குளாக வாசம் செய்யும்போது உங்கள் பிரச்சனைகளும், உங்கள் கவலைகளும் அவருக்கு எம்மாத்திரம். கடினமான சூழ்நிலைகளையும், பிரச்சனைகளையும் கொண்டு வருகிற பொல்லாத பிசாசை பார்த்து சொல்லுங்கள் நீ கொண்டு வருகிற பிரச்சனைகளை பார்க்கிலும் என் தேவன் பெரியவர்; அவர் வானாதி வானங்களும் கொள்ளாதவர் என்பதாக. அப்பொழுது அவன் வெட்க்கபட்டுப்போவான்.

சங்கீதக்காரன் பாடுவதை போல வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள் என்று பாடி கர்த்தரை துதியுங்கள். அப்பொழுது உங்கள் தேவன் உங்கள் சத்துருக்களை உங்கள் பாதபடியில் விழும்படி செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org