பரிசுத்தமே தேவனுடைய ஆலயத்தின் நித்திய அலங்காரம்(Holiness adorns God’s house forever).

உமது சாட்சிகள் மிகவும்  உண்மையுள்ளவைகள், கர்த்தாவே,     பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது (சங். 93:5).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/PHBRT1_C9m8

நம்முடைய தேவன் மகா பரிசுத்தமுள்ளவர். அவருடைய செய்கைகள் எல்லாம் பரிசுத்தமானது. அவருடைய ஜனங்களாகிய நாம் அவருடைய ஆலயமாய் காணப்படுகிறோம். நீங்கள் தேவனுடைய  ஆலயமாயிருக்கிறீர்களென்றும்,     தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? என்று 1கொரி.3:16 கூறுகிறது. நம்முடைய சரீரமாகிய ஆலயத்தை நாம் பரிசுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும். பரிசுத்தமே என்றென்றைக்கும் நம்முடைய சரீரமாகிய ஆலயத்தின் அலங்காரமாய் காணப்படவேண்டும். பரிசுத்தம் என்பது கூட்டுமுயற்ச்சி. நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற தேவன் என்று கர்த்தர் வாக்கு கொடுத்திருக்கிறார். நாமும் நம்மை பரிசுத்தமாய் காத்துக்கொள்ளுவதற்கு,     நான் உமக்கு விரோதமாய்ப்  பாவஞ்செய்யாதபடிக்கு உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் என்ற சங்கீதக்காரனைப் போல கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய இருதயங்களில் நிறைத்;து வைக்க வேண்டும். அதுபோல  நம்முடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.  கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் என்ற வசனத்தின்படி மாம்சத்தின் கிரியைகளை அனுதினமும் சிலுவையில் அறையும் படிக்கு ஒப்புக்கொடுத்து,     நம்மைப்  பரிசுத்தமாகக் காத்துக் கொள்ளவேண்டும்.

நாம் கூடிவந்து கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிற இடங்களும் கூட கர்த்தருடைய ஆலயமாகக் காணப்படுகிறது. பரிசுத்தமே நம்முடைய சபைகளின் நித்திய அலங்காரமாய் காணப்படவேண்டும். சபைகளில் ஊழியஞ்செய்கிவர்கள் பரிசுத்தமாய் காணப்படவேண்டும். சபையின் விசுவாசிகள் பரிசுத்தமாய் காணப்படவேண்டும். சபையின் ஒவ்வொரு காரியங்களிலும் பரிசுத்தம் காணப்படவேண்டும். ஆலயத்தின் பணிமுட்டுகள் கூட பரிசுத்தமாய் காணப்பட வேண்டும். ஒருநாள் பாபிலோனிய ராஜாவாகிய  பெல்ஷாத்சார்  திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில்,     அவன் தன் தகப்பனாகிய  நேபுகாத்நேச்சார்  எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில்,     ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.  அப்பொழுது எருசலேமிலுள்ள  தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட  பொற்பாத்திரங்களைக்  கொண்டுவந்தார்கள்,  அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்து பாத்திரங்களை அசுசிப்படுத்தினார்கள். அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி,     விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று, எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.  எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே,     மெனே,     தெக்கேல்,     உப்பார்சின்  என்பதாய் காணப்பட்டது.  மெனே என்பதற்கு,     தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு,     அதற்கு  முடிவுண்டாக்கினார்  என்றும்,      தெக்கேல் என்பதற்கு,     நீ தராசிலே நிறுக்கப்பட்டு,     குறையக் காணப்பட்டாய் என்றும்,      பெரேஸ் என்பதற்கு,     உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு,     மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது,     எனபது அவ்வார்த்தைகளின் அர்த்தமாகும். அன்று இராத்திரியிலே  கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான் என்று வேதம் கூறுகிறது. ஆலயத்தின் சகல காரியங்களிலும் தேவன் சிநேகிக்கிற பரிசுத்தம் காணப்படவேண்டும். 

நம்முடைய சபைகளும்,     சரீரங்களும் பரிசுத்தமாய் காணப்படும் போது,     கர்த்தர் நம் நடுவில் வந்து உலாவுவார். நான் உங்கள் நடுவில் உலாவி உங்கள் தேவனாயிருப்பேன்,     நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என்று வாக்குக் கொடுத்தவர்,     அவருடைய எல்லா நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் நம்மேல் பொழிந்தருளுவார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae