திறந்த வாசலை உனக்கு முன்பாக வைப்பேன்(I have set before you an open door).

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளி. 3:7,8.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/dNl8QHfY0p8

ஆசீர்வாதத்தின் வாசல்களைத் திறக்கிறவர் கர்த்தர். கோரேஸ் என்ற பெர்சிய ராஜாவுக்கு முன்பாக பூட்டப்படாத வாசல்களையும், திறந்த கதவுகளையும் வைத்து அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் கொடுப்பேன் என்று வாக்களித்தார். ஊழியத்தில் அனுகூலமான வாசல்களைத் திறந்து திரளான ஆத்துமாக்களைக் கொள்ளைப் பொருளாகத் தருவதும் கர்த்தர். உங்கள் ஒவ்வொருவருக்கும் முன்பாகவும் ஆசீர்வாதமான வாசல்களை திறந்து உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

பிலதெல்பியா சபைக்குத் திறந்த வாசலை வாக்களித்தார். அதற்குரிய காரணம் என்ன? பிலதெல்பியா என்றால் சகோதர சினேகம் என்று அர்த்தம். எங்கே சகோதரர்கள் அன்போடும் ஒருமனதோடும் காணப்படுகிறார்களோ கர்த்தர் அங்கு என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுவார்; குடும்பங்களில், சபைகளில் ஒருவருக்கொருவர் அன்போடு காணப்படும்போது ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்புவார். பிலதெல்பியா சபை ஜனங்களுக்குக் கொஞ்ச பெலன் தான் இருந்தது. நம்முடைய கொஞ்சத்தை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும். அவராலேயன்றி நம்மால் ஒன்றும் ஆவதில்லை. கர்த்தரைச் சார்ந்து அவருடைய பெலனைச் சார்ந்து நின்றால் கர்த்தர் நமக்கு ஆதரவாக இருப்பார். நம் கொஞ்சத்தை அவர் கரங்களில் கொடுக்கும்போது, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்து அனேகரைப் போஷித்த தேவன், நம் கொஞ்சத்தை ஆசீர்வதித்துப் பெருகச்செய்வார். கிதியோனோடு முந்நூறு பேரை வைத்து கடற்கரை மணலைப்போலக் காணப்பட்ட மீதியானியர்களை முறியடிக்கும் படி செய்தவர் கர்த்தர்.

பிலதெல்பியா சபை கர்த்தருடைய நாமத்தை மறுதலிக்கவில்லை. ஆண்டவருடைய நாமத்திற்குக் கனவீனத்தைக் கொண்டுவரவில்லை. இந்நாட்களில் ஆண்டவருடைய நாமம் தூஷிக்கப்பட அனேக வேளைகளில் விசுவாசிகளும் ஊழியக்காரர்களும் காரணமாகிவிடுகிறோம். அவருடைய பரிசுத்த நாமத்தைப் பரிசுத்த குலைச்சலாக்குகிறோம். ஆகையால் கர்த்த்ர் நம்மை ஆசீர்வதிக்காமல் இருப்பதற்கு நாமே காரணமாகிவிடுகிறோம். நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் (ஏசா.42:8). கர்த்தர் தன் நாமத்தின் மகிமையை ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை. அதுபோல அனுகூலமான வாசல்கள் நமக்கு முன்பாக காணப்பட அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளவேண்டும். வாசிக்கிறவர்களாக, கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, கைக்கொள்ளுகிறவர்களாகவும் காணப்படவேண்டும். அப்படி செய்யும் போது தாவீதின் திறவுகோலை உடையவர் நமக்கு முன்பாக ஆசீர்வாதமான திறந்த வாசல்களை வைத்து நம்மைக் கனப்படுத்தி உயர்த்தி ஆசீர்வதிப்பார்.     

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar