நல்ல விசேஷத்தைச் சொல்லுவார் (God will promise the goodness).

1 நாளா 17:26,27 இப்போதும் கர்த்தாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர். இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/65JdxS30MgE

நீண்ட நாள் கழித்து ஒரு நபரை சந்தித்தால் அவரை பார்த்து என்ன விசேஷம் என்று சிலர் கேட்பதுண்டு. அந்த நபர் நல்ல விசேஷத்துடன் வீட்டிற்கு வந்திருந்தால், அவர் சொல்லுவார், ஆம் என்னுடைய மகனுக்கு திருமணம் வைத்திருக்கிறேன் அது தான் நல்ல விசேஷம் என்பதாக. அதுபோல தான் கர்த்தர் தாவீதுக்கு நல்ல விசேஷத்தை தெரியப்படுத்தினார். ஏற்கெனவே தாவீதை கர்த்தர் உயர்த்தி வைத்திருந்தார்; ஆடுகளின் பின்னே சென்ற தாவீதை ஏற்கெனவே இராஜாவாக அபிஷேகம் பண்ணியிருந்தார்; ஏற்கெனவே தாவீதுடைய சத்துருக்களையெல்லாம் கர்த்தர் துரத்திவிட்டார்; ஏற்கெனவே தாவீது போன இடமெல்லாம் கர்த்தர் அவனோடு கூட இருந்தார்; ஏற்கெனவே தாவீதுக்கு பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை கர்த்தர் கொடுத்திருந்தார். இப்படி தாவீது ஏற்கெனவே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தும், இப்பொழுது ஆண்டவர் அவனுக்கு இன்னும் முக்கியமான நல்ல விசேஷத்தை சொன்னார். தாவீதுக்கு நல்ல விசேஷத்தை கூறின தேவன் உங்களுக்கும் தேவ சித்தத்தின்படி நல்ல விசேஷத்தை சொல்லுவார்.

தாவீதிடம் கர்த்தர் சொல்லுவார் நான் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவேன் என்பதாக. ஏற்கெனெவே தாவீது கேதுருமரத்தால் உண்டான வீட்டில், தரமான வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அப்படியானால் கர்த்தர் அவனுக்கு வீட்டை கட்டுவேன் என்பது எதை குறிக்கிறது?. ராகேலுக்கு பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தபோது, தன் கணவனாகிய யாக்கோபை பார்த்து சொல்லுவாள் இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் (ஆதி 30:3) என்பதாக. அதாவது அவள் மூலமாக எனக்கு ஒரு சந்ததி உண்டாகட்டும் என்று சொல்லுவாள். ஆகையால் கர்த்தர் தாவீதோடு சொன்ன வீடு, நாம் வசிக்கிற கட்டிடம் அல்ல. தாவீதிடம் உறுதியாக, தனிப்பட்ட ஆசீர்வாதம் மற்றும் செழிப்பு மட்டுமல்ல, இராஜ சந்ததியினரின் தொடர்ச்சி உன் சந்ததியில் இருக்கும் என்ற பெரிய வாக்குத்தத்தை கர்த்தர் தாவீதுக்கு கொடுத்தார். உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன் என்றும், அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன் என்றும், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான் என்றும், என் கிருபையை அவனை விட்டு விலக்குவதில்லை என்றும், அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்; அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்றும், அவன் சந்ததியை கர்த்தர் எப்படி ஆசிர்வதித்து நிலை நிறுத்தப்போகிறார் என்ற நல்ல விசேஷத்தை கர்த்தர் தாவீதுக்கு தெரியப்படுத்தினார்.

தாவீதுக்கு நல்ல விசேஷத்தை கூறியவர் உங்களுக்கும், உங்கள் காதுகள் கேட்க நல்ல விசேஷத்தை, உங்கள் சந்ததியின் வாழ்க்கையில் கர்த்தர் செய்யப்போகும் நன்மைகளை, ஆசீர்வாதத்தை உங்கள் காலம் முடியும் முன் உங்களுக்கு தெரியப்படுத்துவார். 1 நாளா 17ஆம் அதிகாரத்தில் தாவீது கர்த்தருக்கு ஆலயத்தை கட்ட வேண்டும் என்று சொன்னான்; ஆகையால் கர்த்தர் தாவீதுக்கு, நான் உனக்கு ஒரு வீட்டை கட்டுவேன், அதாவது உனக்கு பின் உன் சந்ததியை கட்டி, அவனையும் அவனுக்கு பின் வரும் உன் சந்தானங்களையும் நிலைநிற்க பண்ணுவேன் என்ற வாக்குத்தத்தை கொடுத்தார். உங்கள் சந்ததி உங்களுக்கு பின் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென்றால், தாவீதை போல கர்த்தருக்கு ஆலயத்தை கட்ட வேண்டும் என்ற தீர்மானத்துடன் செயல்படுங்கள். அப்பொழுது உங்கள் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். கர்த்தர் உங்களுக்கு நல்ல விசேஷத்தை தெரியப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org