உங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாயிருப்பார்கள் (Your children will dwell securely).

சங் 102:28. உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/PdfuhyV8CCY

கர்த்தருடைய பணியை செய்கிறவர்களுக்கு ஆண்டவர் கொடுக்கிற வாக்குத்தத்தம் உங்கள் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள் அதாவது பாதுகாப்பாய் இருப்பார்கள். தாவீதுக்கு அவனுடைய சந்ததி எப்படி இருக்கும் என்ற தொலைதூரத்து காரியங்களை கர்த்தர் முன் கூட்டியே சொல்லிவிட்டார். ஆபிரகாமின் சந்ததி வானத்து நட்சத்திரங்களை போல இருக்கும் என்றும் முன் கூட்டியே சொல்லிவிட்டார். அதுபோல கர்த்தருடைய காரியங்களை செய்கிறவர்களுக்கு கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம் அவர்களுடைய பிள்ளைகள் பாதுகாப்பாய் இருப்பார்கள் என்பதே.

வீட்டிலிருக்கும் பிள்ளைகளை கர்த்தர் எப்படி சாமுவேலை பாதுகாத்து நடத்தினாரோ, அதுபோல உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பார். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஆண்டவர் இரண்டு தேவ தூதர்களை வைத்திருக்கிறார். ஆகையால் மறைவான கன்னிகளுக்கு பிள்ளைகளை தப்புவித்து அவர் பாதுகாப்பார். சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடம் கொடுங்கள் அவர்களை தடைசெய்யாதிருங்கள் என்று சொன்ன கர்த்தர் உங்கள் பிள்ளைகளுக்கு, கர்த்தரே அடைக்கலமாக, கோட்டையாக, தாபரமாக இருந்து பாதுகாப்பார். பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல (1 தெச 2:7), கர்த்தர் உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பார்.

பள்ளிக்கூடங்களுக்கு, கல்லூரிகளுக்கு செல்லுகிற உங்கள் பிள்ளைகளையும் கர்த்தர் பாதுகாப்பார். இந்நாட்களில் பாவத்தை தண்ணீரை போல பருகுகிற ஜனங்களின் நடுவில் உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமாய் ஜீவிக்கும்படியாக கர்த்தர் பாதுகாத்துக்கொள்ளுவார். தூர தேசத்தில் படிக்கிற உங்கள் பிள்ளைகள் பாபிலோனில் வாழ்ந்தாலும், நீதிக்குரிய ஜீவியம் செய்யும்படி கர்த்தர் பாதுகாத்துக்கொள்ளுவார். சாமுவேல் அன்னாளை விட்டு தூர பட்டணத்தில் இருந்தாலும் சாமுவேல் நீதிமானாக இருந்தான். அதுபோல உங்கள் பிள்ளைகள் நீதிமானாய் இருக்கும்படி கர்த்தர் செய்வார். உங்கள் பிள்ளைகளின் கால்கள் வழிவிபோகாதபடி அவர்களுடைய நடைகளை கர்த்தர் ஸ்திரப்படுத்துவார். உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் போதைப்பழக்கம் மற்றும் வேறெந்த தவறான வழியில் நடத்தும்படியாக சத்துரு அவர்களை ஏவினாலும், பறந்து காக்கிற பட்சியை போல உங்கள் பிள்ளைகளை கர்த்தர் பாதுகாத்துக்கொள்ளுவார்.

தூர தேசத்திலும் தூர பட்டணங்களில் வேலை செய்துகொண்டிருந்த உங்கள் பிள்ளைகளை, கர்த்தர் யோசேப்பை எப்படி எல்லா சூழ்நிலையிலும், எல்லா இடங்களிலும் பாதுகாத்து தப்புவித்தாரோ, அதுபோல உங்கள் பிள்ளைகளை காத்துக்கொள்ளுவார். வசனம் சொல்லுகிறது யோசேப்போடு கர்த்தர் கூட இருந்தார் என்பதாக. அதுபோல உங்கள் பிள்ளைகளோடு கூட கர்த்தர் இருப்பார். தானியேலின் வேலை ஸ்தலத்தில் கர்த்தர் அவனோடு கூட இருந்தார். தானியேலின் காரியம் ஜெயமாய் இருந்தது. அதுபோல உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் ஜெயமாய் இருக்கும்.

திருமணமான உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை கர்த்தர் ஆசீர்வதிப்பார். அவர்களுடைய எல்லைகளை கர்த்தர் விரிவாக்குவார். உங்கள் சந்ததிகள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர் (சங்கீதம் 41:2) என்ற வசனத்தின் படியும், கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார் (2 தீமோ 4:18) என்ற வசனத்தின் படியும், பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி (2 பேது 2:5) தப்புவித்தவர் உங்கள் பிள்ளைகளை தப்புவிப்பார். நீங்கள் இடையவிடாமல் ஆராதிக்கிற உங்களை தப்புவிப்பார். உங்கள் பிள்ளைகளையும் தப்புவிப்பார். ஆகையால் நீங்கள் கலங்காமல் பிள்ளைகளை இயேசுவின் இரத்தத்திற்குள்ளாக ஒப்புக்கொடுத்து சந்தோசத்துடன் இருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org