உங்களை மயக்கினவன் யார்? (Who has bewitched you?).

புத்தியில்லாத காலத்தியரே,    நீங்கள் சத்தியத்திற்குக்  கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. (கலா. 3:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/v04TeH6jnTw

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய சபை விசுவாசிகளுக்கு எழுதும் போது,    சத்தியத்திற்கு கீழ்ப்படியாமல் போக உங்களை மயக்கினவன் யார் என்று வினவுகிறதைப் பார்க்கமுடிகிறது. மயக்குதல்,    அல்லது ஹிப்னாடிசம்  என்பது வேறொருவரால் கட்டுப்படுத்தப்படுவதாகும். மற்றொரு காரியத்தால்  கவர்ச்சிக்கப்பட்டு, இழுக்கப்படுதல் என்பதையும் குறிக்கிறது. சர்ப்பம் இரையைத் தேடும் போது,    தவளையொன்று சர்ப்பத்தின் கண்களை கூர்ந்து பார்க்கும் என்றால் உடனடியாக சர்ப்பத்திலிருந்து மதிமயங்கச் செய்கிற ஆவி புறப்பட்டு  தவளையைக் கட்டுப்படுத்தி,    இரையாக மாறிவிடச் செய்யும். ஏதேனில் சர்ப்பம் தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது,    அவள் சர்ப்பத்தோடு பேச்சுக் கொடுத்த வேளையில்,    சர்ப்பம் அவளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இல்லுமினாட்டிகள் கவர்ச்சிகரமான ஒற்றைக் கண்ணை வைத்து ஜனங்களை கவர்ச்சித்து வஞ்சிக்கிறவர்களாய் காணப்படுகிறார்கள். கலாத்திய சபை விசுவாசிகளைக் கூட,    பொல்லாத பிசாசானவன் வஞ்சித்து,    கவர்ச்சித்து,    தன்னுடைய கட்டுப்பாட்டில் அவர்களைக் கொண்டு வந்து,    கிறிஸ்துவின்  சிலுவையை விட்டுப் பிரிக்கிறவனாய் காணப்பட்டான். இந்நாட்களிலும் இதே நிலைமை அனேக சபைகளில் காணப்படுகிறது. பலவிதமான வஞ்சிக்கிற   காரியங்களுக்கும்,    நூதன உபதேசங்களுக்கும் ஊழியர்களும் விசுவாசிகளும் தங்களை விற்றுப் போட்டார்கள். தேவனுக்குப் பிரியமில்லாத ஆராதனைகள் செய்தும் கூட,    அதைத் தவறு என்று உணர்ந்த கொள்ள இயலாத நிலையில் அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டதாய் காணப்படுகிறது. 

கர்த்தருடைய பிள்ளைகளே,    ஒருநாளும் உங்கள்  வாழ்க்கையில் பிசாசுக்கு இடம் கொடுத்துவிடாதிருங்கள்,    தேவனுக்கு கீழ்ப்படிந்து சத்துருவுக்கு எதிர்த்து நில்லுங்கள்,    அப்போது அவன் உங்களை விட்டு ஓடிப் போவான். அவனுடைய நயங்காட்டுதலுக்கும் வஞ்சகத்திற்கும் இடம் கொடுத்துவிடாதிருங்கள். அவனுடைய தந்திரங்கள் நீங்கள் அறியாதவைகள் அல்ல. அவன் யாரை விழுங்கலாம் என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான். இயேசுவை நோக்கி உங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு  அனுதினமும் ஓடுங்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையன்றி வேறொன்றையும் குறித்து அறியாதிருக்கத் தீர்மானியுங்கள். சிலுவையைக் குறித்து அதிகமாய் தியானியுங்கள். மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் அனுதினமும் சிலுவையில் அறையுங்கள். கர்த்தருடைய வார்த்தையை விட்டு இடதுபுறம் வலதுபுறம் சாய்ந்து விடாதிருங்கள். உலகம் காட்டுகிற மார்க்கத்தை ஒருபோதும் கற்றுக் கொள்ளாதிருங்கள். இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யாதிருங்கள். இயேசுவுக்கும் பிசாசுக்கும் ஊழியம் செய்யமுடியாது. இன்னும் இயேவை கிட்டி நெருங்கி ஜீவிக்க உங்களை முழுவதுமாய் அர்ப்பணியுங்கள். நமக்கு அவரை அண்டிக் கொண்டிருப்பதே நலம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நல்ல ஆவிக்குரிய சபைகளைத் தெரிந்தெடுத்து,    உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக் கொள்ளுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae