நீ செய்வதெல்லாம் வாய்க்கும்(Whatever you do shall prosper).

…அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு,  தன் காலத்தில் தன் கனியைத் தந்து,  இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங். 1:1-3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/flAXxFQOk6c

நாம் செய்வதெல்லாம் வாய்க்கவேண்டும் என்பது நம்மெல்லாருடைய விருப்பமாய் காணப்படுகிறது. பிள்ளைகள் கல்வி பயிலும் போது,  கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்பது அவர்களுடைய விருப்பமாயிருக்கும். வாலிபர்கள் எதிர்காலத்திற்கென்று எடுக்கும் முயற்சிகள் வாய்க்கவேண்டும் என்று விரும்புவார்கள். பெரியவர்கள் குடும்பத்திற்கென்றும்,  பிள்ளைகளுக்கென்றும் எடுக்கிற முயற்சிகள் வாய்க்கவேண்டும் என்பது அவர்களுடைய ஜெபமாய்க் காணப்படும். நம்முடைய தேவனும்,  நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருப்பதையே விரும்புகிறார்.

நாம் செய்வதெல்லாம் வாய்க்கவேண்டுமென்றால்,  மூன்று காரியங்களை நாம் செய்யக் கூடாது என்று சங்கீதம் 1:1 கூறுகிறது. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்கக் கூடாது.  துன்மார்க்கர்கள் ஆலோசனைகளைச் சொல்லுவார்கள்,  அவர்களைத் தடை செய்ய முடியாது. ஆனால் நீங்கள் அந்த ஆலோசனைகளில் நடக்கக் கூடாது,  அதன்படி  செய்யவும் கூடாது. நல்ல ஆலோசனைகளைக் கூறுவது போல நயவஞ்சகமான வார்த்தைகளைச் சொல்லுவார்கள். நீங்கள் அதைப் பகுத்து ஆராய்ந்து அறியவேண்டும். கர்த்தருடைய ஆலோசனைகளே நிலைநிற்கும,  அவருடைய நாமங்களில் ஒன்று ஆலோசனைக் கர்த்தர். கர்த்தரிடத்தில் ஆலோசனைகளைக் கேளுங்கள்,  அவர் செம்மையாய் உங்களை நடத்துவார். இரண்டாவது பாவிகளுடைய வழியில் நிற்கக் கூடாது. பாவிகள் நிற்கக்கூடிய வழிகள் உண்டு. அப்சலோம் பட்டணத்தின் வாசலின் வழியில் நின்று தாவீதைப் பார்க்கக் கடந்துசென்றவர்களை தன்னண்டை இழுத்து,  அவர்களுடைய இருதயத்ததைக் கவர்ந்துகொண்டான்.   இஸ்ரவேலின் ஜனங்களும் அவனுடைய நயவஞ்சகமான வார்த்தைகளைக் கேட்டு அவனோடு நின்றதினால் தாவீதிற்கு விரோதமாய் எழும்பினார்கள். இந்நாட்களில் பாவத்தை தண்ணீரைப் போலப் பருகுகிற ஜனங்களை எங்கும் பார்க்கலாம்,  கர்த்தருடைய ஜனங்கள் அவர்களோடு காணப்பட்டால் அவர்கள் வழிகளைக் கற்றுக்கொள்ளுவீர்கள். தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம் (நீதி. 14:8). மூன்றாவது,  பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரக் கூடாது. அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர்,  அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான் (நீதி. 21:24). காத்தருடைய ஜனங்கள் யாரையும் பரியாசம் செய்யக் கூடாது. நாம் யாரையாகிலும் பரியாசஞ்செய்தால்,  அவர்களைச் சிருஷ்டித்த நம்முடை தேவனை நிந்திப்பதற்குச் சமம். நீ பரியாசக்காரனானால் நீயே அதன் பயனை அனுபவிப்பாய் (நீதி. 9:12). ஆனால் பிறரைப் பரியாசம் செய்து அதில் மகிழ்ச்சியடைகிற திரளான ஜனங்களை எங்கும் பார்க்கிறோம். அவர்கள் உட்காரும் இடத்தில் கூட நாம் உட்காரக் கூடாது கர்த்தர் கூறுகிறார்.

நாம் செய்வதெல்லாம் வாய்க்கவேண்டுமென்றால்,  மேற்குறிப்பிட்ட மூன்று காரியங்களை விட்டு,  வேறு இரண்டுக் காரியங்களை நாம் செய்யவேண்டும்.  முதலாவது,  கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தையில் பிரியமாயிருக்கிறவர்களுக்குத் துன்மார்க்கரோடும்,  பாவிகளோடும்,  பரியாசக்காரரோடும் காணப்படுவதற்கு நேரம் இருப்பதில்லை. உங்கள் பிரியம் எதின் மேல் காணப்படுகிறது? தேனிலும் தெளி தேனிலும் மதுரமான கர்த்தருடைய வார்த்தைகளின் மேல் பிரியமாயிருந்தால் நீங்கள் காரியசித்தியுள்ளவர்களாவீர்கள்,  நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும். இரண்டாவது,  இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கவேண்டும்.  இரவும் பகலும் என்பது 24 மணிநேரத்தையும் குறிக்கிறது. தியானம் என்பது அசைபோடுதல் என்தாய் காணப்படுகிறது. புல்லைத் தின்ற மாடு ஓரிடத்தில் படுத்து அசைபோடுவது போல,  நாம் கற்ற காரியங்களைத் திரும்பத் திரும்ப வாசித்து,  அதில் எழுதப்பட்டவற்றைக் குறித்து ஆராய்வது தான் தியானிப்பதாய் காணப்படுகிறது. கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டு,  விட்டுவிடுகிறவர்களாயல்ல,   நாம் கைக்கொள்ளவேண்டிய காரியங்களைக் கைக்கொண்டு,  விட்டுவிடச்சொல்லுகிற பாவங்களை விட்டு,  கீழ்ப்படிய வேண்டிய இடத்தில் கீழ்ப்படியும்போது,  கர்த்தருடைய வசனம் நம்மைப் பாக்கியவான்களாய் மாற்றும்.

இப்படிப்பட்டவர்கள் தண்ணீர்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் தன் காலத்தில் தன் கனியைத் தருவது போலவும்,  இலையுதிராமல் கொழுமையாய் இருப்பது போலவும்,  செழிப்பாகக் காணப்படுவார்கள்.  நீங்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் வாய்க்கும் போது நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar