என் கையை உயர்த்துகிறேன்(I raised my hand).

வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன் (ஆதி. 14:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gUBw1ZMT6pg

ஆபிரகாம் தன் சகோதரனுடைய மகனாகிய  லோத்துவோடு  பெததேலுக்கும் ஆயிக்கும் நடுவாகக் கூடாரம் போட்டுத் தங்கியிருந்தான். இருவருக்கும் ஆடுமாடுகளும் வேலைக்காரர்களும் அதிகமாய் காணப்பட்டதினாலே அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாதாயிருந்தது. அதோடு ஆபிரகாமுடைய மந்தை மேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதங்களும் உண்டாயிற்று. ஆகையால் ஆபிரகாம் லோத்தை நோக்கி, இந்த தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, நீ என்னை விட்டுப் பிரிந்துப் போகலாம், நீ இடதுபுறம்போனால், நான் வலதுபுறம் போகிறேன். நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்று கூறினான். லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கோமோராவையும் அழிக்குமுன்னே, அது கர்த்தருடைய தோட்டமாகிய ஏதேனைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. ஆகையால்  லோத்து  அதைத் தொந்துகொண்டு அங்கே குடியேறினான். அங்கு அவன் குடியிருந்து வேளையில் சிநேயாரின் (பாபிலோன்) ராஜா மற்ற ராஜாக்களோடு சோதோமின் ராஜாவோடும் கொமேராவின் ராஜாவோடும் யுத்தம் பண்ணி, இவர்களைத் தோற்கடித்து பொருள்களையும் ஜனங்களையும் கொள்ளை கொண்டு போனார்கள். லோத்துவும் அவன் குடும்பமும் கூட சிறைபிடிக்கப்பட்டார்கள். நல்ல ஐக்கியத்தில் காணப்படுவதை விட்டு,  தேவசித்தமில்லாமல் நம்முடைய கண்களுக்கு  பிரியமானவற்றைத்  தெரிந்தெடுக்கும் போது, அதன் முடிவு ஆசீர்வாதமாயிருப்பதில்லை. ஆகையால் தேவனுடைய பிள்ளைகள் நம்முடைய  தீர்மானங்கள் ஒவ்வொன்றிலும்  கவனமாகக் காணப்படவேண்டும்.

லோத்துவும் அவன் குடும்பமும் சிறைபிடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட ஆபிரகாம், என்னை விட்டுப் பிரிந்து போனதால் இதுவும் வேண்டும் இனியும் பல காரியங்கள் சம்பவிக்கட்டும் என்றிருக்காமல், தன் வேலைக்காரர்கள் முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கு ஆயுதம் தரிப்பித்து, அவர்களைப் பின்தொடர்ந்து போய் அவர்களோடு யுத்தம் செய்து அத்தனைப் பேரையும் பொருள்களையும் மீட்டுக்கொண்டு வந்தான். அந்த வேளையில் சோதோமின் ராஜா ஆபிரகாமை எதிர்கொண்டு போய் ஜனங்களை மாத்திரம் எனக்குத் தாரும் பொருள்கள் எல்லாவற்றையும் நீர் எடுத்துக் கொள்ளும் என்று ஆபிரகாமை நோக்கிக் கூறினான். புறஜாதி ராஜாவுக்குக் கூட தன் ஜனங்கள் மேல் கரிசனைக் காணப்பட்டது. ஆனால் இந்நாட்களில் காணப்படுகிற தேவ ஜனங்களுக்கு ஜனங்களைக் குறித்த பாரமும் இல்லை, ஜனங்களை எங்களுக்குத் தாரும் என்று ஜெபிப்பவர்களும் இல்லை. என்னைக் கேள் ஜாதிகளை உனக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன் என்றவர் உங்கள் ஜீவனுக்கீடாக ஆத்துமாக்களைத் தருவேன் என்றும் வாக்களித்திருக்கிறார். ஆகையால் ஆத்துமாக்களைத் தாரும்  என்பது நமது ஜெபமாயிருக்கட்டும்.

பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்று சோதோமின் ராஜா ஆபிரகாமோடு கூறின வேளையில், ஆபிரகாம் நான் என் உன்னதமான தேவனுக்கு நேராக என் கைகளை உயர்த்துகிறேன். அவர் ஒருவரே என்னை ஆசீர்வதிக்கிறவர், அவர் ஒருவரே எனக்கு மந்தையின் பெருக்கத்தைத் தருகிறவர், அவர் ஒருவரே என்னைப் பெருகப்பண்ணுகிறவர், ஆகையால் ஆபிரகாமை நீர் ஐசுவரிய வானாக்கினேன் என்று கூறாதபடிக்கு நான் ஒரு  சரட்டையாகிலும்,  வாரையாகிலும் உமக்கு உண்டான ஒன்றையும்  எடுப்பதில்லை என்று அவனிடம் உறுதியாகக் கூறினான். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உங்கள் கரங்களை உயர்த்த பழகிக்கொள்ளுங்கள். அவர் ஒருவரே உங்களை உயர்த்துகிறவர், அவர் ஒருவரே உங்களுக்கு நன்மையான ஈவுகளைத் தருகிறவர். தேவனை நோக்கி தன் கரங்களை உயர்த்த பழகினவர்கள் ஒருநாளும் மனுஷர்கள் முன்பாக கையேந்துவதில்லை. ஆகையால் கர்த்தர் ஒருவரே நன்மையான ஈவுகளைத் தருகிறவர் என்பதையறிந்து அவரைச் சார்ந்து வாழப் பழகிக்கொள்வோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar