தடைகள் நீங்கும்(Obstacles will be removed):-

மீகா 2:13. தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/C6i-2BVL_1c

குடும்பத்தில் தடைகள் வரக்கூடும். யோசேப்பு தன்னுடைய அரிக்கட்டு மாத்திரம் நிமிர்ந்திருக்கிறது, அவனுடைய சகோதரர்கள் அரிக்கட்டு அவனுடைய அரிக்கட்டுக்கு முன்பாக வணங்கியது என்று சொன்னபோது, பொறாமைகொண்ட அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு தடைகளாக காணப்பட்டார்கள். அப்படிப்பட்ட தடைகளை கர்த்தர் மாற்றி அவனை எகிப்து தேசத்திற்கே அதிபதியாக மாற்றினார்.

வேலைஸ்தலத்தில் தடைகள் வரலாம். உங்கள் பதவி உயர்வுக்கு, சம்பள உயர்வுக்கு அநேகர் தடைகளாக வரலாம். தானியேலை தரியு ராஜா ராஜ்யம் முழுவதும் அதிகாரியாக ஏற்படுத்த நினைத்தான். அவனுக்கு பதவி உயர்வு வருவதை கேள்விப்பட்ட பிரதானிகளும் தேசாதிபதிகளும் தானியேலின் உயர்வுக்கு தடையாக பல சதித்திட்டங்களை தீட்டினார்கள், சிங்க கெபியிலே போட்டார்கள். ஆனாலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது.

ஊழியத்தில் தடைகள் வரலாம். பவுலின் ஊழியத்திலும் தடைகள் வந்தது. அவன் புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு அவர்களோடே பேசாதபடிக்குத் தடைப்பண்ணினார்கள், சாத்தானும் தடைசெய்தான் என்று 1 தெச 2:16,18ஐ வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். ஆனால் ஆவியானவர் தீமோத்தேயுவை அனுப்பி ஊழியத்தை நிறைவேற்றும்படியாக செய்தார்.

அற்புதத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு தடைகள் வரலாம். இரண்டு குருடர்கள் தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டபோது, அங்கிருந்தவர்கள் அவர்களை தடை செய்தார்கள். இருந்தாலும் அவர்கள் இன்னும் அதிகமாய் கூப்பிட்டபோது இயேசு அவர்களுடைய கண்களை திறந்து அற்புதம் செய்தார்.

நாம் ஆராதிக்கிற தேவன் எல்லா தடைகளையும் நீக்கிப்போடுகிறவர்; தாவீதின் திறவுகோலை உடையவர்; எரிகோ போன்ற தடைகளை நிர்மூலம் பண்ணுகிறவர்; பவுலுக்கும் சீலாவுக்கும் சிறைச்சாலை தடையாக இருக்க முடியவில்லை. அதுபோல உங்களுக்கு இருக்கிற எல்லா தடைகளையும் கர்த்தர் உடைத்தெறிவார். அவர் உங்களுக்கு முன்பாக தடைகளை நீக்கிப்போடுகிறவராக கடந்து செல்வார். எப்படி இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக பகலில் மேக ஸ்தம்பமாகவும், இரவில் அக்கினி ஸ்தம்பமாகவும் முன் சென்றாரோ, அதேபோல உங்களுக்கு முன்பாகவும் தடைகளை நீக்கிப்போடுகிறவராக கடந்து செல்வார். எதுவரைக்கும் அவர் தடைகளை நீக்கிப்போடுகிறவராக கடந்து செல்வார்? ஒரு வருடமா? பத்து வருடமா ? எது வரைக்கும் ? வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன் (யாத் 23 :20) என்ற வசனத்தின்படி அவர் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் வரைக்கும், கானானை சுதந்தரிக்கும் வரைக்கும், பரம எருசலேமில் சென்று அடையும் வரைக்கும், இந்த பூலோகத்தில் கண்களை மூடின மறு நிமிடத்தில் இயேசுவை முக முகமாய் பார்க்கும் வரைக்கும், இயேசு உங்களை பார்த்து நல்லது உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரன் என்று உங்களை பார்த்து சொல்லும் வரைக்கும் உங்களுக்கு முன்பாக தடைகளை நீக்கிப்போடுகிறவராக நடந்து செல்வார். உங்கள் தடைகள் எல்லாம் நீங்கும்.

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2) என்ற வசனத்தின் படி ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் செய்ய நினைத்தது தடைபடாது.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org