பலவீனங்களில் சந்தோசம் (Glad in weekness).

2 கொரி 12:9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/XUmCL-RS2KE

பவுல் தன்னை தானே உயர்த்தாதபடிக்கு அவனுடைய மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த முள் தன்னை விட்டு எடுபட வேண்டுமென்று பவுல் முதல் தரம் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான். ஆனால் கர்த்தர் அவனுடைய ஜெபத்திற்கு பதில் தரவில்லை. இரண்டாம் தரம் அதே விண்ணப்பத்தை பவுல் ஏறெடுக்கும்போது எத்தனை நாட்கள் கழித்து அல்லது எத்தனை மாதங்கள் கழித்து ஜெபித்தான் என்று நாம் அறியோம். ஆனால் இரண்டாம் முறை அவன் ஜெபித்தபோதும் அந்த முள் அவனுடைய சரீரத்திலிருந்து எடுக்கப்படவில்லை; அவன் ஜெபத்திற்கு பதில் வரவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல, மூன்றாம் முறையும் அதே விண்ணப்பத்தை பவுல் ஏறெடுக்கிறான். அப்பொழுது ஆண்டவர் அவனுடைய ஜெபத்திற்கு கொடுத்த பதில் வித்தியாசமாக இருந்தது. ஆண்டவர் அந்த முள்ளை எடுத்துப்போடுகிறேன் என்றும் சொல்லவில்லை , முள்ளை எடுத்தப்போட முடியாது என்றும் சொல்லவில்லை, முள்ளை எடுக்க சில காலம் காத்திரு என்றும் சொல்லவில்லை. மாறாக, அவர் சொன்ன பதில், என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்று சொன்னார். கர்த்தர் கொடுக்கும் கிருபை அற்புதங்களையெல்லாம் மிகப்பெரிய அற்புதம் என்பதை அறிந்த பவுல், இப்பொழுது சொல்லுகிறான் இனிமேல் என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் என்பதாக.

கர்த்தருடைய பிள்ளைகளே, பவுலுக்கு இருந்த முள் ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் பல விதங்களில் இருக்கலாம். எதிர்பாராத கவலைகள், கஷ்டங்கள் வாட்டிவதைக்கலாம். மனிதர்கள் மூலம் வருகிற நெருக்கடிகள் அதிகமாக இருக்கலாம். வேலை ஸ்தலங்களில் எஜமான்கள் மூலம் மாத்திரமல்ல, கீழே பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் மிகவும் பாரப்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உங்கள் பலவீனங்களை குறித்து மேன்மைபாராட்டுங்கள். காரணம் எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தருடைய கிருபை எந்நாளும் உங்களுக்கு உள்ளது.

யோபின் பிள்ளைகள் எல்லாரும் மரித்தார்கள் என்ற செய்தியை கேட்டவுடன், அவன் செய்த காரியம் என்னவென்றால், அவன் துக்கத்தின் மத்தியிலும் கர்த்தரை பணிந்து கொண்டான் (யோபு 1:20). யோபின் மனைவியின் பெயர் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை அவளுடைய பெயர் கொடுக்கப்பட்டிருந்தால், ஒருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு அவளுடைய பெயரை போடமாட்டார்கள். காரணம் அவள் ஒரு பயித்தகாரி என்று யோபுவே (யோபு 2:10) சொன்னான். இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும், இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை. கடினமான சூழ்நிலையிலும் கர்த்தரை பணிந்துகொள்ளுகிற இருதயம் யோபுவிற்கு இருந்தது.

இவைகளெல்லாம் நமக்கு திருஷ்டாந்தங்கலாய் எழுதப்பட்டிருக்கிறது. இப்பொழுது நீங்கள் கடந்து செல்லுகிற கடினமான பாதைகளிலும் சந்தோசமாய் கர்த்தருக்குள் களிகூருங்கள். துதியின் எக்காள சத்தத்தை உயர்த்துங்கள். கர்த்தருடைய கிருபையை சார்ந்துகொள்ளுங்கள். அப்பொழுது பவுலோடும், யோபுவோடும் இருந்த தேவன் உங்களோடு இருப்பார். யோபுவிற்கு இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை கொடுத்தவர் உங்களுக்கும் கொடுப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org