தேவனோடு சஞ்சரித்த ஏனோக்கு(Enoch walked with God):-

ஆதி 5 : 24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Vi0OEL5DaOk

இந்த அதிகாரத்தில் 8 முறை மரித்தான் மரித்தான் என்று வருகிறது. ஆனால் சரியாக நடுவில் ஒருவன் மாத்திரம் மரிக்கவில்லை; அவன் தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார் என்று பார்க்கமுடிகிறது. அவன் ஏனோக்கு, அவனுக்கு 65 வயதிருக்கும்போது மெத்தூசலாவைப் பெற்றான். மெத்தூசலா என்ற பெயருக்கு அவன் மரிக்கும் போது வெள்ளம் வரும். ஆண்டவர் ஏனோக்குக்கு ஒரு பெரிய வெளிப்பாட்டை கொடுத்தார். அவன் மகன் மெத்தூசலா மரிக்கும்போது ஆண்டவர் சகல ஜனங்கள் மீதும் நியாயத்தீர்ப்பை அனுப்பப்போகிறார் என்பதாக. இந்த வெளிப்பாட்டை நோவாவுக்கு முன்பாகவே ஏனோக்குக்கு தான் கர்த்தர் வெளிப்படுத்தினார். அதனால் தான் ஏனோக்கு அவன் மகனுக்கு மெத்தூசலா என்று பெயரிட்டான். எப்பொழுதெல்லாம் மெத்தூசலாக்கு காய்ச்சலோ, தலைவலியா வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஒருவேளை ஏனோக்கு நினைத்திருக்கக்கூடும் கர்த்தரின் நியாயத்தீர்ப்பு சமீபமாகிவிட்டது என்பதாக. அதனால் நியாயத்தீர்ப்பினால் வரும் காரியங்களை நினைத்து, அவனுக்குள்ளாக இருந்த பயம் தான் ஏனோக்கு கர்த்தரோடு கூட சஞ்சரிக்கும்படியாக செய்தது. ஒரு நாள், இரண்டு நாள் அல்ல 300 வருடங்கள் அவன் தேவனோடு சஞ்சரித்தான். உலகத்திலிருக்கும் அநித்தியமானவைகள் எல்லாம் அழிவுக்கு நேராக வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நன்றாக ஏனோக்கு அறிந்திருந்தான். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் (1 யோவா 2:17) என்றும் வசனம் சொல்கிறது.

ஏனோக்கின் மகன் மெத்தூசலா தான் அதிகமான வருடங்கள் உயிரோடிருந்தவன். அவன் 969 வருடங்கள் உயிர் வாழ்ந்தான். இதன் மூலமாக நாம் அறிந்துகொள்ளுகிற காரியமென்னவென்றால் அவர் உலகத்தை நியாயந்தீர்க்கும்படி முடிவு செய்தபிறகும் ஆண்டவர் நீடிய பொறுமையுள்ளவர் என்பதை விளங்கிக்கொள்ளமுடியும். இன்றைக்கும் அநேகர் கேட்பதுண்டு இயேசு வருகை சமீபமாகிவிட்டது என்று பல வருடங்களாக சொல்லுகிறார்கள் ஆனால் இன்னும் அவர் வரவில்லை என்பதாக. காரணம் என்ன? ஒருவரும் கெட்டுப்போவது தேவனுடைய சித்தமல்ல. எல்லாரும் மனம் திரும்பி இரட்சிக்கப்பட வேண்டுமென்பதற்காகவே அவர் நீடிய பொறுமையுள்ளவராக காணப்படுகின்றார். 969 வருடங்கள் எப்பொழுதெல்லாம் ஜனங்கள் மெத்தூசலாவின் பெயரை கேள்விப்பட்டார்களோ, அப்பொழுதெல்லாம் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு சமீபமாய் இருக்கிறது என்பதை அறிந்தார்கள். ஆனாலும் அவர்கள் எல்லாரும் அந்த நியாயத்தீர்ப்பின் செய்தியை கேட்க மறுத்துவிட்டார்கள். நோவா மாத்திரம் நியாயத்தீர்ப்பை பற்றி பிரசங்கிக்கவில்லை. அதற்கு முன்பாக ஏனோக்கு 300 வருடங்களும், மெத்தூசலா 669 வருடங்களும் நியாயத்தீர்ப்பை குறித்து பிரசாகித்தார்கள். இன்றைக்கும் கூட இப்படித்தான் கர்த்தருடைய கோபாக்கினை வெளிப்படும்.

ஏனோக்கு பிறந்தபோது ஆதாமுக்கு வயது 622. ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்து மரித்தான். சுமார் 308 வருடங்கள் ஏனோக்குக்கு ஆதாமை தெரியும். ஆகையால் ஒருவேளை ஏனோக்கு ஆதாமிடம் கர்த்தரோடு எப்படி சஞ்சரிக்க முடியும் என்பதை கற்றிருக்கலாம். ஆதாமும் கூட ஆர்வத்துடன் தன்னுடைய கொள்ளுபேரனுக்கு கர்த்தாரோடுகூட சஞ்சரிக்கும்படியாக கற்றுக்கொடுத்திருக்கலாம். ஆதாமிடம் ஏதேன் தோட்டத்தில் பகலின் குளிர்ச்சியான வேளையில் கர்த்தர் சஞ்சரித்தார். ஆனால் ஏனோக்கு ஏதேன் தோட்டத்திற்கு வெளியில் கர்த்தாரோடுகூட சஞ்சரித்தான். ஏதேனுக்கு வெளியிலும் கர்த்தாரோடுகூட சஞ்சரிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவன் ஏனோக்கு. இந்த உலகத்தில் பாவம் பிரவேசித்தபிறகும் ஒரு மனிதன் தேவனோடு சஞ்சரிக்கமுடியும் என்பதை தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்து நிரூபித்து காட்டியவன் ஏனோக்கு. நீங்களும் கர்த்தாரோடுகூட சஞ்சரிக்கமுடியும். ஒவ்வொருநாளும் அவரோடுகூட பேசி உறவாடமுடியும். எப்பொழுதும் கூப்பிடத்தக்க கன்மலையாக கர்த்தர் உங்களுக்கு இருக்க முடியும்.

விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான் ( எபி 11:5).

கர்த்தாரோடுகூட சஞ்சரிக்கும்படியாக உங்களை அற்பணியுங்கள். ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org