உன் வழிகள் வாய்க்கும் (You will be successful).

என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும் படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய் (யோசுவா 1:7,8)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2VoA-ih-RjU

இஸ்ரவேல் ஜனங்களைக் கானான் தேசத்திற்குள் நடத்திக்கொண்டு செல்லுகிற பெரிய பொறுப்பு, மோசேயின் மரணத்திற்குப் பின்பு, கர்த்தர் யோசுவாவிடம் ஒப்படைத்தார். கானானைச் சுதந்தரிக்க முப்பத்தியொன்று ராஜாக்களையும் ஏழு பலத்த ஜாதிகளையும் மேற்கொள்ளவேண்டும். ஆகையால் யோசுவாவிற்குள்ளாக கலக்கமும் திகிலும் காணப்பட்டது. அப்போது அவனுடைய வழிகள் வாய்ப்பதற்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கர்த்தர் கற்றுக் கொடுத்தார். நம்முடைய வழிகள் வாய்க்க வேண்டும் என்பது நம்முடைய விருப்பமாயுள்ளது. கைகளின் செய்கைகள் வாய்க்க வேண்டும் என்றும் வாஞ்சிக்கிறோம். நம்முடைய பிரயாசங்கள் வாய்க்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் மேற்குறிப்பிட்ட வார்த்தைகள் மூலம் கர்த்தர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

நியாயப்பிரமாணத்தின் படியெல்லாம் செய்ய நாம் கவனமாய் காணப்பட வேண்டும். கானானைச் சுதந்தரிக்க யோசுவா பிரமாணங்களின்படி செய்தான். கர்த்தருடைய வார்த்தையின் படி ஒவ்வொரு காரியங்களையும் செய்ததினால் எளிதாய் கானானைச் சுதந்தரித்து கர்த்தருடைய ஜனங்களுக்காகப் பங்கிட்டான். அது  போல, நம்முடைய வழிகள் வாய்ப்பதற்கு நாமும் கர்த்தருடைய வார்த்தைகளின் படி காரியங்களை நடப்பிக்கவேண்டும். அப்போது நம்முடைய வழிகள் வாய்க்கும். வேத வாக்கியங்கள் எல்லாம் கர்த்தருடைய ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் ஒவ்வொன்றும் நம்மைக் கர்த்தருக்குள் தேறினவர்களாய் நிறுத்துவதற்கு கொடுக்ப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கிறவர்களையும் கேட்கிறவர்களையும், எழுதியிருக்கிறவைகளைக் கைகொள்ளுகிறவாகளையும், இந்த வார்த்தைகள் பாக்கியவான்களாய் மாற்றும்.

கர்த்தருடைய வார்த்தைகளை விட்டு இடது புறம் வலது புறம் விலகாதிருங்கள். நம்முடைய வாழ்க்கை என்னும் ஓட்டத்தை ஓடுவதற்குரிய பாதை கர்த்தருடைய வார்த்தைகளாய் காணப்படுகிறது. என் ஆடுகள் என் சத்தத்தை அறியும், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. மேய்ப்பனின் சத்தத்தை அவருடைய வார்த்தைகள் மூலமாய் அறிந்து பின்பற்றி வாழும் போது கர்த்தர் நம்முடைய வழிகளை வாய்க்கச் செய்வார். யோசியா ராஜா, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான். கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்த ராஜாக்களில் அவனைப்போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை என்று வேதம் கூறுகிறது. ஆகையால் அவனுடைய வழிகள் அவனுக்கு வாய்த்தது. அதுபோல  கர்த்தருடைய வார்த்தைகளை விட்டு விலகாமல் நாம் நடக்கும் போது கர்த்தர் நம்முடைய வழிகளை வாய்க்கப் பண்ணுவார்.

கர்த்தருடைய வார்த்தைகள் நம்முடைய வாய்களை விட்டுப் பிரியலாகாது. அவருடைய வார்த்தைகளை நம்முடைய இருதயத்தில் வைத்து வைக்கும் போது, இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது. யோசுவா எம்மோரியரின் ராஜாக்களை முறிய அடிக்கும் போது அவன் சூரியனைப் பார்த்து நீ கிபியோன் மேலும் சந்திரனைப் பார்த்து நீ ஆயலோன் மேலும் தரித்து நில்லுங்கள் என்று கட்டளையிட்டான். அவனுடைய சொல் கேட்டு அப்படியே தரித்து நின்றது. கர்த்தருடைய பிள்ளைகள் எப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளைப் பேசவேண்டும். வேத வார்த்தைகளில் மாத்திரம் ஜீவன் உண்டு. அந்த வார்த்தைகளை நீங்கள் பேசும் போது நீங்கள் சொல்லுகிற படி ஆகும். கர்த்தருடைய வார்த்தைகளை இரவும் பகலும் தியானித்துக்கொண்டிருங்கள். கர்த்தருடைய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது நாம் செய்வதெல்லாம் வாய்க்கும்(சங் 1:1-3).

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar