ஜாக்கிரதையுள்ளவர்கள் ஆளுகைசெய்வார்கள் (Deligent will rule).

ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும், சோம்பேறியோ  பகுதிகட்டுவான் (நீதி. 12:24).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/U585bbC5Bkc

கர்த்தருடைய பிள்ளைகளே,   இன்றைய நாள் தொழிலாளர் தினமாக உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது. அனேகருடைய உடல் உழைப்பு நாம் வசதியாய் வாழ்வதற்கும்,   நல்ல உணவு வகைகளைப்  புசிப்பதற்கும் உதவியாயிருக்கிறது.  

கடின உழைப்பு மிகுந்த பலனைத் தரும்,   அப்படிப்பட்டவர்களுடைய கை ஆளுகை செய்யும்,    அவர்களுடைய ஆத்துமா புஷ்டியாகும். தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவன் நீசருக்கு முன்பாக நில்லாமல்,   ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான் என்ற வேதம் கூறுகிறது.   இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது,   ஆகையால் எதைச் செய்தாலும் மனுஷனுக்கென்று செய்யாமல் தேவனுக்கென்று உற்சாக மனதோடு செய்யுங்கள்.  சோம்பல்களை உங்களை விட்டு அப்புறப்படுத்துங்கள்.  அப்போது கர்த்தர் உங்களை உயர்த்துவது உறுதி. 

யாக்கோபு கடினமான உழைத்தான். இருபது வருடகாலம் பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னை பட்சித்தது,   நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது,   இவ்விதமாய்ப் பாடுபட்டேன்,  பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும்,   ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்,   பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர் என்று வேதனையோடு  லாபானிடம் கூறினான். ஆகையால் வெறும் கோலும் தடியுமாய் பதான் அராமிக்குச் சென்றவனை,   கர்த்தர் இரண்டு பரிவாரங்களைக் கொடுத்து ஆசீர்வதித்தார். பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்,   வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்,   கன்மலையிலுள்ள தேனையும்,   கற்பாறையிலிருந்து வடியும்  எண்ணெய்யையும் அவன் உண்ணும்படி செய்தார்.  யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு கூட கடினமான உழைத்தான்,   அடிமையாக போத்திபாரின் வீட்டில் காணப்பட்ட வேளையிலும் கடினமாக உழைத்தான்,   சிறைச்சாலையில் கூட தன் கடமைகளைச்  சரிவரச் செய்தான். ஆகையால் கர்த்தர் அவனை உயர்த்தி,   முட்செடியில் எழுந்தருளின தேவதயவை அவன் சிரசின் மேல் ஊற்றி,   எகிப்தின் அதிபதியாக மாற்றினார். பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில் அவன் காணப்பட்டான்.  விதவையாக பெத்லகேமிற்கு வந்த ரூத் கூட,   நான் வயல்வெளிக்குப் போய்,   யாருடைய கண்களில் எனக்குத்  தயைகிடைக்குமோ,   அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்று கூறி,   வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள், தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல் நிலம் எலிமெலேக்கின்  வம்சத்தானாகிய  போவாசுடையதாயிருந்தது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த அவளுக்குக் கர்த்தர் நிறைவான பலனைக் கொடுத்தார். கடைசியில் போவாசின் மனைவியாகும் பாக்கியத்தைப் பெற்றாள்,   இயேசுவின் வம்சவரலாறில் இடம் பிடித்தாள்.

கர்த்தருடைய பிள்ளைகளே,   உலக வேலையானாலும்,   ஊழியத்தின் காரியங்கள் ஆனாலும்,   கடினமாய் உழையுங்கள். இந்நாட்களில் காணப்படுகிற தொழில் நுட்பங்களும்,   ஊடகங்களும்,   பலவிதமான போதைப் பொருட்களும் ஜனங்களை சோம்பேறிகளாக்கிறது. ஆகையால் இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செய்யும் படி உங்கள் கைக்கு நேரிடுகிற காரியங்களை முழு பலத்தோடு செய்யுங்கள். அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். நீங்கள் ஆளுகைச் செய்வீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae