சுதந்திர விருப்பம் (Free Will).

எஸ்றா 1:3. அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்; எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fltVyswk8BE

கோரேசு ஜனங்களை பார்த்து சொல்லுகிறான் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ எருசலேமுக்குப்போய் ஆலயத்தை கட்டலாம் என்று சொல்லுகிறார். ஆங்கில வேதாகமத்தில் “Whoever” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யார் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ நீங்கள் எருசலேமுக்கு போகலாம் என்று அவன் சொன்னான். நம்முடைய ஆண்டவர் யாரையும் கட்டாயப்படுத்துகிறவர் அல்ல. நாமெல்லாருக்கும் நம்முடைய விருப்பத்தின்படி சிந்தித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை கர்த்தர் கொடுத்திருக்கிறார்.

ஆண்டவர் சகலவிதமான மிருகங்களையும், பறவைகளையும் படைத்தபிறகு, ஆதாம் அவைகளுக்கு பெயர் வைக்கும்படியான சுதந்திரத்தை கர்த்தர் அவனுக்கு கொடுத்துவிட்டார் (ஆதி 2:19,20). ஆதாம் அந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பெயர் வைக்கும்போது, ஆண்டவர் குறுக்கிட்டு ஏன் சிங்கத்திற்கு சிங்கம் என்ற பெயர் வைத்தாய், ஏன் கழுகிற்கு கழுகு என்று பெயர் வைத்தாய், ஏன் மீனிற்க்கு மீன் என்று பெயர் வைத்தாய் என்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை. அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. ஆபிரகாம் லோத்திற்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் சிலாக்கியதை கொடுத்தான். இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான் (ஆதி 13:9).

அதுபோலத்தான், பாபிலோனில் இருக்கிற ஜனங்கள், விருப்பமுள்ளவர்கள் எருசலேமிற்கு கடந்து செல்லலாம் என்று கர்த்தர் சொல்லுகிறார். பாபிலோனிய சபை என்பது உயிரில்லாத, சடங்காச்சார, ஊழல் நிறைந்த சபை (வெளி 17). எருசலேம் சபை என்பது சுயாதீனமுள்ள சபை, உண்மையான சபை, கர்த்தருடைய மணவாட்டி (வெளி 21). நாம் பாபிலோனில் இருக்க வாஞ்சிக்கிறோமா, இல்லை எருசலேமுக்கு செல்ல வாஞ்சிக்கிறோமா என்ற முடிவை நாம் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்.

தேவனுடைய ஆலயத்துக்கென்று உற்சாகமாய்க் காணிக்கை கொடுக்கும் காரியத்தை கர்த்தர் ஒவ்வொருவரும் விருப்பத்தின்படி கொடுக்கும் சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார் (எஸ்றா 1:4). எஸ்றா புஸ்தகத்தில் மாத்திரம், திரும்ப திரும்ப பல இடங்களில் உற்சாகமாய் காணிக்கை கொடுப்பதை பற்றி எழுதப்பட்டிருக்கிறது (1:4,1:6,2:68,7:16,8:28). சலிப்போடு, பார்வைக்காக, முறுமுறுத்தலோடு, கொடுக்கிறவர்களிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருப்பதில்லை. மாறாக, வசனம் சொல்லுகிறது, அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (2 கொரி 9:7)என்பதாக. இந்த வசனத்தின்படி தேவன் உங்கள் மேல் பிரியமாயிருக்க உற்சாக மனதுடன் கர்த்தருக்கென்று விதையுங்கள். அந்த விதைகள் வளர்ந்து பின் நாட்களில் கனி கொடுக்கும். நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org