பிள்ளையைப்போல:-

மத்தேயு  18 : 4. ஆகையால் இந்தப்பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.

இயேசுகிருஸ்து இந்த பூமியில் ஊழியம் செய்துகொண்டிருந்த போது சீஷர்கள் ஆண்டவரிடம் யார் பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் ? யார் உமது வலது பாரிசத்தில் இருப்பான்? யார் உமது இடது பாரிசத்தில் இருப்பான்? என்பதையெல்லாம் குறித்து கேட்டுகொண்டிருந்தார்கள். யாக்கோபும், யோவானும் பரலோகத்தில் தங்களுக்கு எந்த நாற்காலி கிடைக்கும் என்பதை அறிய தங்களுடைய தாயை அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். இன்றைய காலத்தில் தேர்தலிலும் கூட இப்படிப்பட்டதான சம்பவங்களை பார்க்கிறோம். முதலில் எந்த கட்சியில் சேரலாம்? எந்த தொகுதியில் நிற்கலாம்? இட ஒதுக்கீடு எப்படி ? வெற்றி பெற்றால் எந்த பதவியை அல்லது எந்த இலாகாவை பெற்றுக்கொள்ளலாம் ? என்பதை பற்றி பெரிய பிரச்சனை. வேலைஸ்தலங்களிலும் இதே சூழ்நிலை; யார் யாரை கீழே தள்ளலாம், யார் யாரை காட்டிலும் பெரியவர் என்ற போட்டி. அப்படியாக சீடர்களும் கேட்டார்கள். ஆண்டவர் சொன்னார் யார் இந்த பிள்ளையை போல தாழ்த்துகிறார்களோ அவர்களே பரலோக ராஜ்யத்தில் பெரியவர்களாயிருப்பார்கள் என்று. ஆம், நாம் யேசுவிடமிருந்து தாழ்மையை கற்று கொள்ள வேண்டும். பிலிப்பியர் 2 : 6 – 8ல்  அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் என்பதாக வாசிக்கிறோம்.

உங்களில் யாராவது பெரியவனாக இருக்க விரும்பினால், அவன் மற்றவனுக்கு பணிவிடைக்காரனாயிருக்க வேண்டும் என்று ஆண்டவர் சொன்னார். ஆகையால் இந்த பிள்ளையை போல தாழ்த்துகிறவனே பரலோகத்தில் பெரியவானாயிருப்பான்.

தேவ பிள்ளைகளே கர்த்தருக்கு முன்பாக தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள். ஊழியர்களுக்கு முன்பாகவும், விசுவாசிகளுக்கு முன்பாகவும் மிகுந்த தாழ்மையோடே பணிவிடைக்காரர்களாய் நடந்துகொள்ளுங்கள். மற்றவர்களை கனப்படுத்துங்கள். யாரையும் தாழ்வாக எண்ணாதிருங்கள். நீங்கள் தான் பரிசுத்தமானவர்கள் மற்றவர்கள் பாவிகள் என்று எண்ணாதிருங்கள். அப்பொழுது பரலோக ராஜ்யத்தில் பெரியவர்களாயிருப்பீர்கள்.

1 சாமுவேல் 2 : 8. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Bro. Robert Jegadheesh. R
Word of God Church
Doha- Qatar
www.wogim.org