யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
ஆசரிப்பு கூடாரத்திற்கு அருகில் மூன்று பக்கத்திலும் கர்த்தரால் ஊழியம் செய்யும்படி அழைக்கப்பட்ட ஆரோனின் குமாரர்கள் தங்கள் கூடாரத்தை போட்டார்கள். ஆசரிப்பு கூடாரத்தை சுற்றிலும் பன்னிரண்டு கோத்திரங்களும் தங்கள் கூடாரத்தை அமைத்தார்கள். சுமார் இருபது இலட்சத்திற்கும் அதிகமான ஜனங்கள் ஆசரிப்பு கூடாரத்தை சுற்றிலும் இருந்தாலும், அந்த ஆசரிப்பு கூடாரத்திற்குள் செல்வதற்கு ஒரே ஒரு வழி தான் இருந்தது. ஆசாரியன், விசுவாசிகள், உயர்ந்தவர்கள், ஐசுவரியவான்கள், ஏழ்மையிலிருப்பவர்கள் என்று யாராக இருந்தாலும் அந்த ஒருவழியாக மாத்திரம் தான் உள்ளே செல்ல முடியும். அந்த ஆசரிப்பு கூடாரத்திற்குள் செல்வதற்கு இன்றைக்கு இருக்கிற பெரிய பெரிய சபைகள், மண்டபங்களில் இருப்பதை போல பல வழிகள் இல்லை. மாறாக ஒரே ஒரு வழி தான் கொடுக்கப்பட்டது. அதுபோல தான் பிதாவினிடத்தில் செல்ல நமக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு; இயேசுகிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே நாம் பிதாவை கிட்டி சேரமுடியும். வேறே ஒரு மார்க்கமும் நமக்கு கொடுக்கப்படவில்லை.
அந்த வாசல் கிழக்கு முகமாக இருந்தது. ஜனங்கள் செல்லும்போது சூரியன் ஜனங்களின் முதுகு புறமாக இருக்கும். காரணம் சூரியவழிபாடுகள், புறகாரியங்களை பின்னால் தள்ளி, புறக்கணித்து கர்த்தரை மாத்திரம் சேவிக்கவேண்டும் என்பதை காட்டும்படியாக. ஆனால் இன்று பொல்லாத பிசாசு அநேக ஜனங்களை வஞ்சித்து சூரியன், சந்திரன், ஆண்ட சராசரங்களையும் படைத்த இயேசுவை சேவிக்கவிடாமல், சூரியநமஸ்கரம் சூரியவழிபாடுகள் என்று ஜனங்களை திசைதிருப்பிவிட்டான்.
எல்லாருக்கும் கொடுக்கப்பட்ட ஒரே ஒரு வாசல் வழியாக யார் வேண்டுமானாலும் செல்லலாம். பாவிகள், நீதிமான்களென்று யாராக இருந்தாலும் உள்ளே செல்லலாம். அதுபோலத்தான் நானே வழி என்று சொன்ன இயேசுவிடம் யார்வேண்டுமானாலும் செல்லலாம். ஒருவேளை நீங்கள் நினைக்கலாம் நான் மிக பெரிய பாவம் செய்துவிட்டேன், நான் மிகப்பெரிய பாவி என்று கலங்குவீர்களென்றால், அந்த பாவ வாழ்க்கையிலிருந்து மன்னிப்பை கொடுத்து உங்களை மீட்டெடுப்பதற்கு உங்களுக்கு ஒரே ஒரு வழி காணப்படுகிறது. அந்த வழியே இயேசுதான். பழைய ஏற்பாடு காலத்தில், உள்ளே சென்ற ஜனங்கள் எல்லாரும் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளும் செல்ல முடியாது. ஆனால் இன்று நமக்கு எல்லாரும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லும் கிருபையை கர்த்தர் கொடுத்திருக்கிறார். காரணம் அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய (இயேசுவின்) இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது (எபி 10:20) என்று வசனம் சொல்லுகிறது. இயேசுவின் இரத்தம் உங்களுக்கும் பிதாவுக்கும் நடுவே இருந்த பாவம் என்னும் தடுப்பு சுவரை உடைத்திருக்கிறது. இயேசு சிலுவையில் தன்னை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தபோது, தேவாலயத்தின் திரைசீலை இரண்டாக கிழிந்தது. ஆகையால் இப்பொழுது நீங்கள் கன்மலையின் வெடிப்புக்கள் ஒழித்து பிதாவின் அருகே தைரியமாய் செல்லும் பாக்கியத்தை பெற்றுள்ளீர்கள். இயேசு ஒருவரே வழி நீங்கள் பிதாவினிடத்தில் செல்வதற்கு. இயேசுவை உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

