பொதுவான அழைப்பில் ஒன்று – விசுவாசம்:-

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் (இயேசுவிடத்திலும்) விசுவாசமாயிருங்கள் (யோவான் 14:1).

விசுவாசிகள் சிலர் கர்த்தர் என்னுடைய வாழ்க்கையில் கொடுத்த அழைப்பு என்ன ? நான் எப்படிப்பட்ட அழைப்பை பெற்றுள்ளேன் என்பதை காண இங்கும் அங்குமாக அலைந்து திரிகிறவர்களாக காணப்படுவதுண்டு. ஒரு ஊழியக்காரர் இப்படியாக தன்னை விளம்பரப்படுத்தினார், நான் நடத்தும் அழைப்பை அறிந்துகொள்ளுதல் கூட்டத்திற்கு ஐநூறு ரூபாய் முன்பதிவு கட்டணம் கட்டி அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள். அப்பொழுது நான் ஜெபித்து உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் உங்களை குறித்து கொண்ட அழைப்பை நான் தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்துவேன் என்பதாக. அதையும் நம்பி அநேக ஜனங்கள் கர்த்தரின் அழைப்பை அறிந்துகொள்ள ஓடிப்போனார்கள். தேவபிள்ளைகள் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும் கர்த்தர் உங்களுக்கு ஒரு அழைப்பை கொடுக்கிறார் என்றால் நிச்சயம் உங்களிடம் நேரடியாக இடைப்படுவார், அவருடைய சத்தத்தை நீங்கள் கேட்பீர்கள். ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை (எபி 5:4) என்று வசனம் சொல்லுகிறது.

கர்த்தர் எல்லாருக்கும் பொதுவான அழைப்பை கொடுத்திருக்கிறார். சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்(II தெச 2:14) என்று சொல்வதானால் எல்லாரும் இரட்சிப்படையவேண்டுமென்பது ஒரு அழைப்பு. உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் (I பேதுரு 1:15) என்ற வசனத்தின்படி ஒவ்வொருவரும் பரிசுத்த ஜீவியம் செய்யவேண்டுமென்பது இயேசுவின் அழைப்பு. உலகமெங்கும் போய் சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்பது ஒரு அழைப்பு. அதுபோல தான் நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் மீது எப்பொழுதும் விசுவாசத்தோடு இருக்கவேண்டும் என்பதும் ஒரு அழைப்பு.

சிலர் சிறிய பிரச்சனை வந்தவுடனே சோர்ந்துபோய்விடுவார்கள். இயேசுவின் மீது விசுவாசத்தை வைக்காமலே ஏன் என் வாழ்க்கையில் கர்த்தர் இதை அனுமதித்தார் என்று அவரை கேள்வி கேட்கிறவர்களாக மாறிவிடுவதுண்டு. ஆகையால் தான் இயேசு சீஷர்களுக்கு கடுகு விதையளவு விசுவாசம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். பேதுரு இயேசுவை மறுதலிக்காமல் இருக்கேவேண்டும் என்று இயேசு ஜெபம் செய்யாமல், அவனுடைய விசுவாசம் ஒழிந்து போகாமல் இருக்கும்படியாக ஜெபித்தார். இயேசு தன்னுடைய சீஷர்களின் அவிசுவாசத்தை கண்டு அவர்களை ஒரு முறை கடிந்துகொண்டார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் எல்லாவற்றிலும் இயேசுவின் மீது விசுவாசமாய் இருங்கள். உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org