அக்கிரமங்களை மன்னிப்பார்:-

சங் 130:3. கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.

ஆதாம் தொடங்கி புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அதோடு இன்றைய நாள் வரைக்கும் இருக்கிற மனுக்குலத்தின் அக்கிரமங்களை கர்த்தர் கவனித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் நினைத்திருந்தால் இவ்வுலகத்தில் ஒருவரும் உயிரோடு இருக்க முடியாது. சங்கீதக்காரன் சொல்லுகிறான் ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும் (சங் 143:2) என்பதாக. தாவீது சொல்லுகிறான் உமது கிருபையினிமித்தம் எனக்கு இறங்கும் என்பதாக. மாத்திரமல்ல நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே (காலா 2:16) என்றும் வசனம் சொல்லுகிறது. ரோமாபுரிக்கு பவுல் எழுதும்போது இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை (ரோம 3:20) என்பதாக எழுதுவதை பார்க்கமுடிகிறது.

இயேசுகிறிஸ்து உங்களுடைய அக்கிரமங்களை மன்னிக்கிறவர். ஒருவேளை நீங்கள் செய்த பாவத்தினிமித்தம் குற்ற உணர்வு உள்ளவர்களாக ஜெபிக்க முடியாமல், வேதம் வாசிக்க முடியாமல் பாவம் ஒரு தடையாக காணப்படுமானால், ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள் உங்கள் பாவங்களை அறிக்கை செய்து விட்டு விடும்போது அவர் உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுகிற நல்ல தகப்பனாக இருக்கிறார். தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களை புறக்கணியாத நல்ல தகப்பன். ஒரு விசை எல்லா சோம்பலையும் விடுத்து இயேசுவினிடம் மீண்டும் செல்லுங்கள். உங்களை ஒப்புக்கொடுங்கள். அடுத்த நிமிடமே இயேசு உங்களை ஏற்றுக்கொள்ளுவார். பூமிக்கும் வானத்துக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம் உங்கள் பாவங்களை அவர் விலக்குவார். மீண்டும் ஒரு ஜெயம் உள்ள வாழ்க்கை வாழ கர்த்தர் உங்களுக்கு கிருபை அளிப்பார்.

அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார் (சங் 130 :8) என்று வசனம் சொல்லுகிறது. சகல என்ற வார்த்தைக்குள் எல்லா பாவங்களும் அடங்கி இருக்கிறது. ஒரு தீவிரவாதியை கர்த்தர் இரட்சித்து அவருக்கு உகந்த பாத்திரமாக மாற்றக்கூடுமானால், இயேசுவை புறக்கணித்த சாது சுந்தர் சிங்கை கர்த்தர் சந்தித்து அவரை மிக பெரிய அப்போஸ்தலனாக மாற்ற கூடுமானால், கடவுள் ஒருவர் இல்லை என்று சொன்ன அண்ணன் எமில் ஜெபசிங்கை தெரிந்துகொண்டு பிற்காலத்தில் ஒரு மிஷினரியாக மாற்றக்கூடுமானால், கிறிஸ்துவர்களை துன்பப்படுத்தின சவுலை, மிகப்பெரிய அப்போஸ்தலனாக மாற்ற இயேசுவால் கூடுமானால், உங்களையும் மன்னித்து, அவருடைய சொந்த பிள்ளையாக ஏற்றுக்கொண்டு, உங்களை புது சிருஷ்டியாக மாற்றுவது இயேசுவுக்கு இலேசான காரியம். நிச்சயம் உங்களை கர்த்தர் ஏற்றுக்கொள்ளுவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org