அப் 2:17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;
பழைய ஏற்பாடு புஸ்தகம் யோவேல் தீர்க்கதரிசன புஸ்தகத்தில் தரிசனங்களை காண்பீர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டில் பேதுரு மூலமாக ஆவியானவர் சொல்லுகிறார் நீங்கள் தரிசனங்களை அடைவீர்கள் என்பதாக. தரிசனம் காண்பதற்கும் தரிசனம் அடைவதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு மேஜையில் பலவிதமான உணவுகள் வைக்கப்பட்டிருக்கிறது. அவற்றை பார்த்திக்கொண்டிருக்கும் உங்களை புசிக்க கூடாது என்று சொன்னால் ஏமாற்றம் அடைந்து விடுவீர்கள். புதிய உடன்படிக்கையின் கீழ் வாழ்கிற நீங்கள் தரிசனத்தை அடைவீர்கள்.
மோசே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை கண்டான். தூரத்திலே அதை பார்த்தான். ஆனால் கானான் தேசத்திற்குள் சென்று கானான் தேசத்தின் பலனை புசிக்கவில்லை. தேவன் அந்த சிலாக்கியத்தை மோசேக்கு கொடுக்கவில்லை. நீ காண்பாய். ஆனால் பிரவேசிக்கமாட்டாய் என்று கர்த்தர் சொன்னார். நம்முடைய வாழ்வில் தரிசனத்தை காண்பது மட்டுமல்ல; தரிசனத்தை அடைந்து கொள்ளவும் வேண்டும்.
தரிசனம் ஆவியானவரின் வெளிப்பாடாக இருக்கும். நாம் வேதாகமத்தை வாசித்துக்கொண்டிருக்கும் போதோ, ஜெபித்துக்கொண்டிருக்கும்போதோ, துதித்துக்கொண்டிருக்கும்போதோ நமது ஆவியில் உண்டாகிற வெளிப்பாடு தான் தரிசனம் ஆகும். சகரியாவும் எலிசபெத்தும் குழந்தையில்லாமல் இருந்தபோது சகரியா ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான் (லுக் 1:11).
அடுத்ததாக தேவதரிசனத்தை தேவன் அநேக நேரங்களில் தேவனுடைய வார்த்தையிலிருந்து நமக்கு தருகிறார். ஏலியின் நாட்களில் கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரதட்சியமான தரிசனம் இருந்ததில்லை. அதே ஏலியின் ஜெபவீட்டில் சிறுவனாகிய சாமுவேல் கர்த்தருக்குப் பயந்ததினாலே கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார் (1 சாமு 3:21).
ஆவிமண்டலத்தில் தேவ தரிசனத்தை தேவன் நமக்கு தருகிறவராக இருக்கிறார். மனோவாவின் குடும்பத்திலே தேவன் செய்யபோவதை ஆவிமண்டலத்திலே அவன் மனைவி பார்த்தாள். ஆகையால் அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன் புருஷனுக்கு அறிவித்தாள் (நியா 13:10).
மாத்திரமல்ல ஆவிமண்டலத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு மறைபொருளை ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு முறை மூன்றாம் வானம் வரைக்கும் அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார். அதைக் குறித்து அவர் சொல்லும்போது மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன் (2 கொரி 12:1) என்று சொல்லுகிறார். மேலும் சொல்லும்போது தான் சரீரத்தில் இருந்தேனோ சரீரத்திற்கு புறம்பே இருந்தேனோ அதை அறியேன் என்று சொல்லுகிறார். ஐம்புலன்களும் செயலற்று கிடக்க ஆவி மண்டலத்தில் சில நிமிடங்களோ, சில மணிநேரங்களோ தரிசனத்தை பெற்றுக்கொள்ளுவது ஒரு உன்னத அனுபவம் ஆகும். சாது சுந்தர் சிங் சரிதையில் அவர் ஜெப நிலையில் இருக்கும்போது ஆவிமண்டலத்திலே அவருடைய ஆவி எடுத்துக்கொள்ளப்பட்டு அவருடைய சரீரம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க உலகத்தின் பல பாகங்களுக்கும், பூட்டப்பட்ட பல அறைகளுக்கும் சென்று வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கவும், சிறையிலிருக்கிறவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கவும், கட்டுண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தரால் பயன்படுத்தப்பட்டார் என்று அறிந்துகொள்ளலாம்.
உங்களுக்கும் ஆண்டவர் தரிசனங்களை கொடுப்பார். அந்த தரிசனங்களை காண்கிறவர்களாக மாத்திரமல்ல அதை அடைந்தும் கொள்ளுவீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

