பிரசங்கி 5:7. அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.
சொப்பனம் காணாதவர்கள் இந்த உலகத்தில் ஒருவரும் இருக்கமுடியாது. சிலர் பகல் கனவு காண்பார்கள். பெரும்பாலோர் இரவு தூங்கும் போது சொப்பனம் காண்பார்கள். காண்கிற எல்லா சொப்பணமும் ஆண்டவர் கொடுக்கிற சொப்பனம் என்று விசுவாசிகள் கருதிவிடக்கூடாது. சாத்தானும் சொப்பனங்களை கொடுக்கிறான். அது மாயையாய் இருக்கிறது என்று வேத வசனம் சொல்லுகிறது. ஒரு சிலருக்கு சொப்பனம் இப்படியாக வரும்; பாம்பு கடிப்பதை போலவும், இச்சைகளை தூண்டிவிடுகிறது போலவும், வேறு திருமணம் செய்துகொள்ளுவது போலவும், யாரையாவது பலி வாங்குவதை போலவுமான சொப்பனங்கள் வருவதுண்டு. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்(மத் 13:25) என்று வசனம் சொல்லுகிறது. அப்படியாக நித்திரைபண்ணும்போது சத்துரு வந்து களைகளை விதைத்துவிட தேவ ஜனங்கள் அனுமதிக்க கூடாது.
சென்னையில் ஒரு பெண் தன் புருஷனால் கைவிடப்பட்டு, குடும்ப வாழ்க்கையை இழந்து தன் அண்ணன் வீட்டில் தங்கினாள். அண்ணனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அண்ணனும், அண்ணியும் வேலைக்கு சென்றபின் இவள் தான் இரண்டு சிறு குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு வந்தாள். திடீரென்று ஒரு நாள் இரவில் அவள் ஒரு சொப்பனம் கண்டாள் ஒரு பெண்தேவதை தோன்றி உன் அண்ணன் பிள்ளைகளை எனக்கு நரபலி செலுத்திவிடு; அப்பொழுது உன் குடும்ப வாழ்க்கை மலரும், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்பதாக. இதை நம்பின அந்த பெண் இரண்டு குழந்தைகளையும் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டால். உண்மை நிலவரம் பிறகு தெரிய வர அவளை போலீசார் கைது செய்தார்கள்.
இப்படி வருகிற பொல்லாத சொப்பனங்களை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். அவிசுவாசிகள் மத்தியில் பகிரங்கமாக நடக்கக்கூடிய அட்டூழியங்கள், அநியாயங்கள் இன்று விசுவாசிகள் மத்தியிலும் இரகசியமாக நடந்துகொண்டிருக்கின்றன. கெட்ட சொப்பனங்கள் மனித வாழ்வை கெடுத்துப்போடும், சரீர ஆரோக்கியத்தை கெடுக்கும், பின்மாற்றம் உண்டாகும்படி செய்யும், ஊழியத்தை பாதிக்கும், வாழ்க்கையில் தோல்வி உண்டாகும், விசுவாச வீழ்ச்சி வரும்.
ஆகையால் தேவபிள்ளைகளே சாத்தான் கொடுக்கிற சொப்பனங்கள் மாயை. அவைகள் நடக்கப்போவதில்லை. அவைகள் ஒன்றும் செய்ய போவதுமில்லை. அவைகளை தேவன் சிலுவையில் ஜெயித்துவிட்டார் என்று விசுவாசியுங்கள். கெட்ட சொப்பனங்கள் வரும்படியாக தேவை இல்லாத படங்களையோ, இச்சைகளை தூண்டுகிற காரியங்களையே பார்க்கவேண்டாம். வீணான காரியங்களில் தலையிட வேண்டாம். கெட்ட சொப்பனங்களை வெறுத்துவிடவும், அவைகளை ஆண்டவரிடம் சொல்லி அழித்துவிடவும் அவரிடம் கெஞ்சி ஜெபியுங்கள். அப்படி ஜெபிப்பதினால் மாயையான பலவித கெட்ட சொப்பனங்களுக்கு தப்பி பயமும் திகிலும் இல்லாமல் வாழும்படி கர்த்தர் செய்வார். தொல்லையின் திரட்சினால் சொப்பனங்கள் கண்டிருந்தால் அவற்றை ஆண்டவரிடம் சொல்லி ஆவியில் நிறைந்து ஜெபியுங்கள். சாத்தான் கொடுத்த சொப்பனங்களாக இருந்தால் அதின் மேல் இயேசுவின் இரத்தத்தை தெளித்து நித்திரை தெளிந்தவுடன் சொப்பனம் ஒழிவதுபோல நான் கண்ட தீய சொப்பனங்கள் ஒழிந்துபோவதாக என்று சொல்லி ஜெபியுங்கள். அப்பொழுது நீங்கள் திகிலுக்கு தூரமாவீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

