ஆவியானவர் கொடுக்கிற சொப்பனங்கள்:-

அப் 2:17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;

வேதாகமத்தில் ஆவியானவரால் சொப்பனம் கண்டவர்களை குறித்து வாசிக்கலாம். தானியேல் தீர்க்கதரிசி சொப்பனங்களை வியாக்கியானம் செய்கிறவனாக இருந்தான். எகிப்து தேசத்திலே யோசேப்பு சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லி அதிபதியாக மாறியிருக்கிறான்.

மரியாள் கர்ப்பவதியான பின்பு யோசேப்பு அவளை தள்ளிவிடவேண்டும் என்று சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக (மத் 1:18-20) என்று யோசேப்புக்கு சொப்பனத்தில் இயேசுவின் பிறப்பை ஆவியானவர் வெளிப்படுத்தினார். மாத்திரமல்ல இயேசு பிறந்தபிறகு கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான் (மத் 2:13) என்பதாக ஆவியானவர் வெளிப்படுத்தினார். இயேசுவை காண வந்த சாஸ்திரிகளுக்கு அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள் (மத் 2:12) என்று சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டார்கள்.

மாத்திரமல்ல இயேசுவின் சிலுவை பாடுகளுக்கு முன்பதாக பிலாத்துவின் மனைவி சொன்னாள் பிலாத்து நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள் (மத் 27:19) என்பதாக.

ஆகையால் தேவ ஜனங்களே ஆண்டவர் உங்களுக்கு சொப்பனங்கள் மூலமாக வெளிப்பாடுகளையும், எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்ற எச்சரிப்பையும் கொடுப்பார். ஆவியானவர் கொடுக்கிற சொப்பனங்கள் எல்லாம் பரிசுத்தமுள்ளதாகவும், அர்த்தம் உடையதாகவும் இருக்கும். பரிசுத்த ஆவியானவர் கொடுக்கிற சொப்பனம் உங்களுக்கு ஆவிக்குரியதாய் இருக்கும். ஏனென்றால் மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம் (ரோம 8:6) என்று வசனம் சொல்லுகிறது. எப்பொழுதும் உங்கள் சிந்தைகளிலும் எண்ணங்களிலும் நடக்கைகளிலும் இயேசுவையே சிந்தித்து, வசனத்தை அசைபோட்டுக்கொண்டே இருப்பீர்களென்றால் உங்கள் சொப்பனம் ஆவியானவர் கொடுக்கிற சொப்பனமாகவும் ஜீவனும் சமாதானம் உள்ளதாகவும் இருக்கும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org