தேராகு (தாமதம்) – அழைப்பில் தாமதம் வேண்டாம்:-

ஆதியாகமம் 11:31 தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான்தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.

தேராகு ஆபிரகாமுடைய தகப்பன். தேராகு என்றால் தாமதம் என்று அர்த்தம். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார். மெசொப்பொத்தாமியா விட்டு கடந்து செல்லவேண்டும் ஆனால் மறுப்பக்கம் தன்னுடைய தகப்பனாகிய தாமதம் என்று சொல்லக்கூடிய தேராகை ஆபிரகாம் பிடித்துக்கொண்டிருந்தான். இன்றைக்கும் கூட கர்த்தருடைய அழைப்பை பெற்றுக்கொண்ட அநேக விசுவாசிகள் தேராகை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தேவனுடைய காரியங்களில் தாமதம் செய்வார்கள். ஆனால் உலக காரியங்களில் தீவிரமாய் இருப்பார்கள். உறவினர்களுடைய வீட்டிலே திருமணம் என்று சொன்னால் அதிகாலை 6 மணிக்கெல்லாம் குளித்துவிட்டு, அலங்காரங்கள் செய்து ஒய்யாரமாய் போய்விடுவார்கள். அதேவேளையில் ஜெபக்கூட்டம் 10 மணிக்கு என்று சொன்னால் 11 மணிக்குத்தான் வருவார்கள். காரணம் அவர்கள் தேராகை எப்பொழுதும் பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் ஒரு சில சபைகளில் செய்தியின் வேலை வருவதற்கு முன்பாக பாஸ்டர் எப்பொழுது கண்களை மூடி ஜெபிக்கிறாரோ அந்த வேலையை சரியாக பார்த்து ஏதொ திருடர்கள் வருவதை போல உள்ளே வருவார்கள். இன்று ஞானஸ்நானம் எடுக்க சொன்னால் அநேகர் சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு தேராகை பிடித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் வசனம் சொல்லுகிறது இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான் (அப் 22:16) என்பதாக. ஆராதனைக்கு வருவதற்கு தாமதம், சுவிசேஷ ஊழியத்தை செய்ய தாமதம், காணிக்கை செலுத்த தாமதம், சபைக்கு ஜனங்களை அழைத்துசெல்வதற்கு வாகனங்கள் கொடுத்து உதவுங்கள் என்று சொன்னால் தாமதம். இப்படி எல்லாவற்றிலும் தேரேகை பிடித்துக்கொண்டு இருக்கிற ஜனங்களாக நாம் இருக்க கூடாது. ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தையின்படி செய்ய தாமதித்துக்கொண்டிருந்ததால் தேராகு மரிக்க கூடிய சூழ்நிலை வந்தது என்பதையும் கர்த்தருடைய ஜனங்கள் அறிந்துகொள்ளவேண்டும். ஆகையால் ஒருபோதும் கர்த்தர் கொடுத்த அழைப்பை செய்ய தாமதிக்க வேண்டாம்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org