1 கொரி 6:12. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
கர்த்தருடைய பிள்ளைகள் ஒன்றிற்கும் அடிமைப்படும்படி அழைக்கப்பட்டவர்கள் அல்ல. மனிதர்களுக்கும் அடிமைகளாக நாம் இருக்கலாகாது. மேல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நாம் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். அதேவேளையில் யாருக்கும் அடிமைகளாக இருக்க அழைக்கப்பட்டவர்கள் அல்ல.
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கிறது. 24 மணி நேரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அதிகாரத்தை கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். இவற்றில் அதிகமான நேரத்தை வேண்டாத காரியங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதும், வேண்டாத படங்களை பார்ப்பதும், அதிகமான நேரம் வலைத்தளங்களில் செலவிடுவதும் அது எல்லாம் தகுதியாயிராது. சில மணி நேரங்கள் செய்திகள் பார்ப்பதும், படிப்பதும் தகும்; அதே வேளையில் நாளில் அதிகமான நேரம் செய்திகளை மாத்திரமே பார்த்துக்கொண்டிருந்தும் வாசித்துக்கொண்டிருந்தும் இருந்தால் அது தகுதியாயிராது. அதிகமான நேரம் வேதத்தை தியானிப்பதிலும், ஆண்டவரோடு உறவாடுதலிலும் செலவிட்டால் அதுவே தகுதியாய் இருக்கும்.
அதுபோல கர்த்தர் நமக்கு வேண்டிய பணத்தை தருகிறார். கர்த்தர் கொடுக்கும் பணத்தை சரியான விதத்தில் பயன்படுத்த கர்த்தருடைய பிள்ளைகள் அறிந்துகொள்ளவேண்டும். அளவுக்கு மிஞ்சி எதையும் வாங்க வேண்டும் என்ற ஆசையும், வருமானத்துக்கு அதிகமாக வங்கிகளில் கடன் எடுத்து வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசையும் தகுதியாயிராது. மற்றவர்களை பார்த்து இதை வாங்க வேண்டும் அதை வாங்க வேண்டும் என்று ஆசைப்படாமல், இருப்பதில் தேவையானவைகளை மாத்திரம் வாங்கிக்கொள்வதே தகுதியாய் இருக்கும்.
சாப்பிடுகிற விஷயத்திலும் கர்த்தருடைய பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும். வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். போஜனப்பிரியராய் இராமல் வேண்டிய அளவுக்கு மாத்திரம் சாப்பிடுவதே தகும். அவ்வப்போது உணவை தவிர்த்து உபவாசம் இருப்பது இன்னும் தகுதியாய் இருக்கும்.
உங்கள் சரீரத்தை சரியான விதத்தில் உபயோக படுத்த வேண்டும். உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர். உங்கள் சரீரம் தேவன் தங்கும் ஆலயம் என்று வசனம் சொல்லுகிறது. உங்கள் கண், காது, வாய், மூக்கு மற்ற எந்த சரீரம் கர்த்தருக்கு ஏற்றவிதத்தில் உபயோகப்படுத்துவதே தகுதியாய் இருக்கும்.
உங்கள் அதிகாரங்கள் அனைத்தும் தகுதியாய் இருக்கிற காரியங்களில் மாத்திரம் பயன்படுத்த ஞானத்தை கர்த்தர் கொடுக்கும் படி ஜெபியுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

