பிறரை மன்னியுங்கள்:-

2 கொரி 2:10. எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.

சாத்தானாலே மோசம்போகாதபடிக்கு பிறரை மன்னிக்கிறவர்களாக கர்த்தருடைய ஜனங்கள் காணப்படவேண்டும். மன்னிக்கிற சுபாவம் இயேசுவின் சுபாவம்; மன்னிக்காத சுபாவம் சாத்தானின் சுபாவம். மற்றவர்களை மன்னிக்கமுடியாதவர்களாக நீங்கள் இருப்பீர்களென்றால் மிகவும் ஆபத்தில் உங்களை சாத்தான் தள்ளிவிட ஆவலாய் இருக்கிறான் என்பதை தேவ பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் உயர் அதிகாரியின் சொற்கேளாமல் தன் இஷ்டம்போல ஒருவர் வேலை செய்துகொண்டு இருந்தார். இதை கண்ட உயர் அதிகாரி அவரை கண்டித்தார். அதனால் கோபப்பட்ட வேலைக்காரர் உயர் அதிகாரிக்கு மதிப்பளிக்காமல் அவரை காயப்படுத்தி விட்டு சென்றுவிட்டார். உயர் அதிகாரி வேறொரு வேலைக்கு அன்று வேலைக்காரருக்கு பேச வேண்டும் என்று தொடர்பு கொண்ட போது அந்த வேலைக்காரர் தொலைபேசியை எடுக்கவும் இல்லை மீண்டும் திரும்ப அழைக்கவும் இல்லை. இதனால் உயர் அதிகாரிக்கு அவமானமாகவும், மனஉளைச்சலும் வந்தது. இரவெல்லாம் உயர் அதிகாரியால் தூங்கமுடியவில்லை. ஒரே கடினமான சூழ்நிலையில் இருந்தார். வீட்டில் குடும்பத்தோடு சரியாக நேரம் செலவிட முடியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் அதே சம்பவம் நினைவில் வந்துகொண்டு மனது பாதிக்கப்பட்டு இருந்தார். மறுநாள் காலையில் உயர் அதிகாரி ஜெபம் செய்யும் படி முழங்கால் படியிட்டு ஜெபித்தார். அப்பொழுது கர்த்தர் அவரோடு சொன்னார் நீ போய் உன் வேலைக்காரனிடம் மன்னிப்பு கேள் என்பதாக. உயர் அதிகரிக்கோ தன் வேலைக்காரரிடம் மன்னிப்பு கேட்பதா ? நான் ஏன் மன்னிப்பு கேட்க்க வேண்டும்? அவனாக வந்து என்னிடம் பேசுவானா என்று பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டிருந்தார். மீண்டும் ஆண்டவர் சொன்னார் சாத்தான் உன்னை மோசம்போகாதபடி அவனை மன்னித்து நீயும் மன்னிப்பு கேள் என்பதாக. ஒரு வழியாக உயர் அதிகாரி காலையில் தன் வேலைக்காரரை அழைத்து மன்னிப்பு கோரினார். அதை கேட்ட வேலைக்காரரின் கண்களில் கண்ணீர் வந்தது. தன் எஜமான் தன்னை அழைத்து மன்னிப்பு கேட்கிறாரே என்று அவர் மனது இளகியது. பின்பு இருவரும் ஒப்புரவு ஆனார்கள். உயர் அதிகாரிக்கு மனதில் வந்த சமாதானமும் மகிழ்ச்சியும் ஆனந்தத்திற்கு அளவில்லை. இப்பொழுது நிம்மதியாக இருந்தார்.

உங்களுக்கு விரோதமாக யாராவது செயல்பட்டிருந்தால் அவர்களை மன்னித்துவிடுங்கள். ஒருவேளை அவர் பிற்காலத்தில் மனந்திரும்பி தேவனுடைய இராஜ்யத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு விடுவார். மன்னிக்காத நீங்களோ நரகத்திற்கு செல்லும்படியா நேரிடும். அப்படியாக சாத்தானுக்கு இடம் கொடாதிருங்கள். அவனுடைய தந்திரங்கள் நமக்கு அறியதைவைகள் அல்லவே. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார் (மத் 6:14,15). ஆகையால் அனைவரையும் மன்னியுங்கள்; நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org