நீதி 1:7. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
ஞானத்தை அடைந்துகொள்ள முதலாவது படி கர்த்தருக்கு பயப்படும் பயம். கர்த்தருக்கு பயப்படுதல் என்றால் என்ன ? அநேகர் நினைப்பார்கள் கர்த்தர் என்னை தண்டிப்பார், கர்த்தர் என்னை காயப்படுத்துவார், கர்த்தர் என்னை அடிப்பார் அவைகளால் வருவது தான் கர்த்தருக்கு பயப்படும் பயம் என்பதாக. அதுவல்ல தெய்வீக பயபக்தி. கர்த்தருக்கு பயப்படுதல் என்பது உங்களுடைய அனுதின வாழ்க்கையில் உங்கள் செய்கைகளின் மூலம், வசனத்திற்கு விரோதமாக செயல்படுவதின் மூலம் கர்த்தர் காயப்படக்கூடும் என்ற தெளிவான அறிவோடு அவருக்கு பிரியமில்லாத காரியங்களை விட்டு விலகி வாழ்வது தான் கர்த்தருக்கு பயப்படும் பயம். அது தான் பயபக்தி, அது தான் தெய்வீக பயம்.
நீங்கள் செய்யும் பாவம், அசட்டை, மீறுதலினிமித்தம் ஆவியானவர் துக்கம் கொள்ளுவார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஆவியானவர் துக்கம் கொள்ளுகிற எந்த காரியங்களிலும் கர்த்தருடைய பிள்ளைகள் கலந்துகொள்ளக்கூடாது. நான் செய்கிற காரியங்களில் ஆவியானவர் துக்கம் கொள்ளுவார் ஆகையால் அவற்றை செய்ய கூடாது என்று தீர்மானம் செய்வீர்களென்றால் அது தான் கர்த்தருக்கு பயப்படும் பயம்.
உலகத்து ஜனங்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்கள் இல்லையென்றால் மற்ற வேறே காரியங்கள் தன்னை தண்டித்து விடும் என்று எண்ணி அதற்கு பயந்து தெய்வங்களுக்கு வெகுமதி அளிப்பவர்களாகவும், தங்களை தாங்களே காயப்படுத்தி கொள்ளுகிறவர்களாகவும், பல மயில் தூரம் யாத்திரை செய்கிறவர்களாகவும் காணப்படுவார்கள்; காரணம் அப்படி செய்தால் தான் கடவுள் பயம் இருக்கிறது என்பதாக. ஆனால் கர்த்தருடைய ஜனங்கள் யாரும் சர்வத்தையும் படைத்த இயேசுவுக்கு வெகுமதிகளை செலுத்தியோ, உங்கள் உடம்புகளை காயப்படுத்திக்கொண்டோ நீங்கள் அவருக்கு பயப்படுகிறீர்கள் என்று காண்பிக்க தேவையில்லை. காரணம் அவரே உங்களுக்கு பரிசுகளை, வெகுமதிகளை, ஆவிக்குரிய வரங்களை தருகிறவர். அவரே உங்களுக்காக கல்வாரி சிலுவையில் காயப்பட்டவர். ஆகையால் நீங்கள் செய்கிற காரியங்களில் கர்த்தர் காயப்படுவார் என்கிற பயபக்தி உங்கள் அனைவருக்குள்ளாகவும் இருக்கட்டும். அப்படிப்பட்ட பயம் தான் ஞானத்திற்கு ஆரம்பம்.
ஞானத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு இன்னும் கர்த்தர் சொல்லுகிறார் இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன் (நீதி 1:23). எப்படி ஆண்டவர் இந்த உலகத்தை படைக்கும்போது வார்த்தையும், ஆவியானவரும் இணைந்து செயல்பட்டார்களோ அதுபோல ஞானத்தை பெற்றுக்கொள்ள ஆவியும், வார்த்தையும் இன்றியமையாதது. வேதத்திலிருக்கிற வார்த்தைகளை பள்ளிக்கூடத்தில் படிப்பதை போல படித்தால் ஞானத்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆவியானவர் உங்கள் மீது ஊற்ற பட வேண்டும். அப்பொழுது வெளிப்பாடுகளையும், ஞானங்களையும் பெற்றுகொள்ளுவீர்கள். ஆவியானவர் தாமே உங்கள் மீது ஊற்றுப்படுவாராக.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

