சபையில் நடப்பவைகளை ஊழியருக்கு தெரியப்படுத்துங்கள்:-

1 கொரி 1:11. ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.

கொரிந்து சபையில் நடக்கிற சம்பவங்களை அறிந்த குலோவேயாளின் வீட்டார் அப்போஸ்தலனாகிய பவுலிடம் காரியங்களை தெரியப்படுத்தினார்கள். அங்கே சபை மக்கள் வழிவிலகி போனதை அறிந்த பவுல் அதற்கேற்றபடி அவர்களை கர்த்தருடைய பாதையில் திரும்பவும் நடத்த கொரிந்து சபைக்கு நிருபங்களை எழுதினான். குலோவேயாளின் வீட்டார் அங்கே நடக்கிற சம்பவங்களை கண்டும் காணாதவர்கள் போலவும், மறைக்கிறவர்களாகவும் காணப்பட்டிருப்பார்களென்றால் ஒருவேளை நம்முடைய கரங்களில் கொரிந்து நிருபங்கள் வந்திருக்குமாவென்று தெரியாது. சபையில் வரும் பிரச்சனைகளை எப்படி கையாளுவது, சபையை நடத்துகிறவர்கள் எப்படியாக இருக்கவேண்டும், ஆவிக்குரிய வரங்கள், கிறிஸ்துவின் பந்தி, சபையில் ஒழுங்கு நடவடிக்கைகள், இயேசுவின் சிலுவை போன்ற உபதேசங்களை நாம் இப்பொழுது தெரிந்துகொள்வதற்கான காரணம் குலோவேயாளின் வீட்டாரும் காரணம் என்று சொல்லலாம்.

ஆகையால் சபையில் இருக்கும் விசுவாசிகளின் ஒரு சில நடவடிக்கைகள் சரியில்லாதவைகளாக, வேதத்திற்கு புறம்பாக இருக்குமென்றால் அதை உடனடியாக மற்ற நபர்களிடம் சொல்லாமல் சபையை நடத்துபவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். குலோவேயாளின் வீட்டார் சபை மக்கள் உபதேசத்திற்கு புறம்பாய் செயல்பட்டார்கள் என்பதை அறிந்து, மற்றவர்களிடம் கூறி காரியங்களை வேறுதிசையில் கொண்டுசெல்லாமல், சரியாக சபையை நிறுவிய அப்போஸ்தலனாகிய பவுலிடம் வந்து கூறினார்கள். விசுவாசிகளின் செயல்பாடுகள் ஒருவேளை சபையை இடிக்கிற காரியங்களாக இருக்குமென்றால், அதை உடனே நடத்துபவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். சரியான நேரத்தில் கண்டவைகளையும் அறிந்தவைகளையும் தெரியப்படுத்துவீர்களென்றால், ஏற்ற வேளையில் அதை சரிபடுத்துவர்க்கும், மீண்டும் கிறிஸ்துவின் அன்பிற்குள்ளாக சபை மக்களை கொண்டுவருவதற்கும் அது ஏதுவாயிருக்கும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org